Subscribe Us

header ads

உள்குத்தல்களும் வேண்டாம், வெளிக்குத்துக்களும் வேண்டாம், சுதந்திரமாக அவர்களை நடமாட விடுங்கள் 5 ஆம் ஆண்டு பரீட்சை

 


மிக குறுகிய ஒரு காலத்திற்குள் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகி மகிழ்ச்சியுடன் திரிந்த குழந்தைகளுக்கு பேரிடியை இறக்கியுள்ளது,

இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் தமது குழந்தைகள் சித்தியடைந்து விட வேண்டும் என்று அந்த குழந்தைகளை வொஷிங் மெசினில் போட்ட துணி போல கசக்கி பிழிந்த பெற்றோரின் கதைகளை பல நூறாய் சொல்லலாம் எல்லாவற்றையும் ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது என்பதற்காய் பல சுவாரசியமான கதைகளை தொடரும் பதிவுகளில் சொல்கிறேன்.
நேற்று இரவு முழுவதும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் மகளின் வகுப்பில் படித்த சக மாணவர்களின் பெற்றோர்களினால் எனக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது, அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று : தன்னுடன் படிக்கும் சக நண்பியின் பெறுபேற்றை தெரிந்து கொள்ளும் ஆவல்.
இரண்டாவது : புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி கருத்தரங்குகள் பத்தை முன் நின்று ஏற்பாடு செய்து நடத்திய தந்தை ஒருவனின் மகள் என்ன பெறுபேற்றை பெற்றிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல்.
அவர்களின் ஆர்வம் நியாயமானது. அதே நேரம் எத்தனையோ பரீட்சை வழிகாட்டிக்கருத்தரங்களுக்கு அனுப்பியும், எவ்வளவோ பணம் செலவு செய்தும் தமது பிள்ளைகள் சித்தியடையவில்லை என்ற வருத்தமே அவர்களிடம் மேலோங்கியிருந்தது.
அந்த பெற்றோர்களை போலவே பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் வருத்தத்துடன்தான் இருப்பார்கள், இத்தனை நாட்களாக தலையை தடவித்தடவி வளர்த்த பெற்றோர்கள் இன்று முதல் அந்த பிள்ளைகளை நச்சரிக்க தொடங்கியிருப்பார்கள், தொட்டதற்கெல்லாம் குறை சொல்ல ஆரம்பித்திருப்பார்கள், அந்த குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு வேலைகளுக்கும் எதிர்வினையாற்ற ஆரம்பித்திருப்பார்கள், பொழுது போக்கிற்கு விளையாட முடியாமல் இருக்கும், கொஞ்சம் தொலைக்காட்சி பார்த்து சிரிக்க முடியாமல் இருக்கும், சக நண்பர்களுடன் கூடி களிக்க முடியாமல் இருக்கும், இதில் காட்டும் அக்கறையெல்லாம் பரீட்சையில் காட்டியிருந்தால் நல்ல படியாக பாசாகி இருக்கலாம் என்ற குத்தல் வார்த்தைகள் ஒவ்வொரு நொடியிலும் வெளியில் வந்து விழும், இது பரீட்சை முடிவுகள் தந்த வேதனையை விட பலமடங்கு வேதனைகளை அந்த குழந்தைகளின் உள்ளத்தில் கண்டிப்பாக பாய்ச்சி செல்லும்.
எந்தவொரு குழந்தையினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது இந்த பரீட்சையல்ல என்பதை பெற்றோர்கள் முழு முதலாக உணர கடமைப்பட்டவர்கள், பரீட்சையில் சித்தியடையவில்லை என்பது இரண்டாவது விடயம், அவர்கள் பெற்ற புள்ளிகளை கொண்டு முதலில் அவர்களை பாராட்டுங்கள், ஏராளமான பெற்றோர்கள் குதிரை பந்தயத்தில் விடப்பட்ட குதிரைகளை போன்று அந்த குழந்தைகளை பின்னால் இருந்து ஓடு ஓடு படி படி என விரட்டியிருப்பீர்கள் நீங்கள் கொடுத்த அந்த தண்டனை ஒன்றே போதும்.
பாடசாலைகள் மீள ஆரம்பித்து சுமுகமாக நடைபெற்று இறுதியாண்டு பரீட்சை நடந்தால் அந்த பரீட்சையில் அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்லவேண்டும் என்கின்ற ஊக்கத்தை அவர்களுக்கு கொடுத்து தட்டிக்கொடுங்கள், சில பிள்ளைகள் வெட்டுப்புள்ளிக்கு அண்மித்ததான புள்ளிகளை பெற்று சித்தியடையாமல் போயிருக்கலாம் இவ்வளவு புள்ளிகளை நீங்கள் அண்மித்ததே பெரிய சாதனை என்று அவர்களை தட்டிக்கொடுங்கள்.
புலமைப்பரிசில் பரீட்சையில் நீங்கள் சித்தியடைந்தால் உங்களுக்கு பரிசு தருவேன் என்று நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தியிருக்க கூடும், இப்போது அவர்கள் சித்தியடையாமல் போயிருந்தாலும் கூட நீங்கள் அளித்த வாக்குறுதிகளை கட்டாயமாக நிறைவேற்றுங்கள் அப்போதுதான் உங்களைப்பற்றிய நல்லெண்ணம் அவர்களுக்கு இன்னும் அதிகரிக்கும்.
பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டால் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாடசாலைகளில் பெரிய பெரிய பாராட்டு பதாகைகள் தொங்கவைப்பார்கள், அந்த பதாகைகளில் சித்தியடையாத மாணவர்களையும் ஒரு பகுதியில் அவர்களின் சிறிய சிறிய புகைப்படங்களை அச்சடித்து காட்சிப்படுத்துவதன் வழியாக அவர்களுக்குள் நம்பிக்கைகளை விதைக்கபாருங்கள், சித்தியடைந்த மாணவர்களை மாலையிட்டு நகர்வலம் அழைத்து செல்லும் ஒரு கொடூர காட்சியும் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்த வரலாற்றை பார்த்தோம் கொரோனா காலமாகையால் அவ்வாறான ஊர்வலங்கள் இப்போது இடம்பெற முடியாவிட்டாலும் கூட , முடிந்தளவு இந்த ஊர்வலத்தை இல்லாமலாக்கி புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வரவேற்பு என்று பாடசாலையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துங்கள்.
கடந்த காலத்தில் ஒரு பாடசாலையில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் சொந்த நிதிகளை இட்டு பாடசாலை மூலமாக நகர்வலத்தை நடத்திய நிகழ்வும் இடம்பெற்றிருந்தது, இது பெற்றோர்களின் கௌரவத்தை பறை சாற்றுவதற்காக பிள்ளைகளை வைத்து அவர்களாகவே செய்து கொண்ட ஒரு ஏற்பாடு, இப்படியான நிகழ்வுகளைநிறுத்துங்கள், ஏனெனில் புலமை பரிசில் பரீட்சை என்பது பெற்றோர்களின் கௌரவ பிரச்சினையாக மாறியிருக்கின்றது.
நமது பிள்ளைகள் நமது சொத்துக்கள், நமது சொத்துக்களை நாம் சேதப்படுத்த கூடாது.
பரீட்சை முடிவுகள் நேற்றுடன் முடிந்துவிட்டது வெற்றிகளையும் தோல்விகளையும் இன்றுடன் மறந்து விடுங்கள், நாளை ஒரு புதிய அத்தியாயத்தை அவர்கள் ஆரம்பிக்கட்டும் அதற்கான வழியை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுங்கள் வலியை ஏற்படுத்தி கொடுத்து விடாதீர்கள்.
கண்டிப்பும் வேண்டாம் தண்டிப்பும் வேண்டாம், உள்குத்தல்களும் வேண்டாம், வெளிக்குத்துக்களும் வேண்டாம், சுதந்திரமாக அவர்களை நடமாட விடுங்கள் அதுவே பெற்றோர்கள் நாம் அவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த பரிசு.

-ரசானா மனாப்-

Post a Comment

0 Comments