இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தனித்திருப்பவர்களில் பெரிதும் மனதளவில் பாதிக்கப்படுவது இளைஞர்களேதான்.
வயதானவர்கள் பக்கத்து வீட்டாருடனாவது வேலியோதினையில் நின்று பேசி பொழுதை கழிப்பார்கள்.சிறுவர்கள் ஏதோ விளையாடி பொழுதைப் போக்குவார்கள். தினமும் காதலியின் வீட்டு பக்கம் போய் அவள் முகத்தை பார்த்து சந்தோசித்தவர்களையும் , நண்பர்களுடன் சேர்ந்து மூலை தேனீர் கடையில் திருட்டு தம் அடித்தவர்களையும் வீட்டுக்குள் அடைந்திருக்க சொன்னால் அது அவர்களுக்கு கஷ்டமேதான். அது பாரிய மன அழுத்தத்தையே தரும்.
இந்தியாவில் தூக்கில் தொங்கிய இளைஞன், வெளியே நிர்வாணமாக ஓடி வயதான பாட்டியின் கழுத்தை கடித்து குதறிய இளைஞனென மன அழுத்த பாதிப்பு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இந்த நேரத்தில்தான் முகநூலர்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
இருண்ட இடரான இந்த நாட்களில் தனித்திருப்பது பெரிய விசமல்ல., பசித்திருப்பதுதான் கொடுமை. அதிலும் இளமையில் வறுமை பொல்லாதது. நம் நட்பில் நமக்கும் கீழான வசதி வாழ்க்கை வாழ்பவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார். நாம் இடும் பதிவுகளில் நமது வசதியான வாழ்க்கையை பதிவிட்டு ஏழைகளின் மன அழுத்தத்துக்கு காரணமாகிவிடவேண்டாம்.
ஊரடங்கு தளர்த்தினாலும் ஒரு வேளைக்கான உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் நம் நாட்டில் எத்தனையோ பேர்கள்.
இளைஞர்களே! பணக்காரர்களே முடிந்தவரை இல்லாதவர்களுக்கு உதவுவோம். முடியாது போனாலும் தனித்திருக்கும் இவ்வேளையில் நம் வீட்டின் ஆடம்பரமான உணவுகளையும், வீட்டின் பின்புறம் BBQ போடுவதையும் , புரியாணி சமைப்பதையும் முகநூலில் படம் போட்டு இல்லாதவர்களை வேதனைப் படுத்தி அவர்களை மேலும் மன அழுத்தத்துக்குள்ளாக்காமலாவது இருப்போம்.இதற்கெல்லாம் இது உகந்த காலமல்ல.
கூழோ கஞ்சியோ கிடைப்பதை குடித்து விட்டு வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லக் கூட முடியாத நிலையே தற்போதைய நிலை.
கூழுக்கும் கட்சிக்கும் கூட வழியில்லாத நிலையில் இன்று எத்தனையோ குடும்பங்கள். அவர்கள் நம் நட்பிலும் இருப்பார்கள். .
-விமல் குழந்தைவேலு-
0 Comments