Subscribe Us

header ads

அமானிதங்கள் பாழாக்கப்பட்டால் யுக முடிவை எதிர்பாருங்கள்..


"அமானிதங்கள் பாழாக்கப்பட்டால் - தகுதி அற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப் பட்டால் - யுக முடிவை எதிர்பாருங்கள்" என எமது தலைவர் கண்மணி ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனித குல விமோசனத்திற்கான சத்தியத்தூதை சமர்பிப்பதும் அதன் வழி நடப்பதும் சத்தியம் நிலைக்க உழைப்பதும் மனித குலம் சுமந்துள்ள மிகப்பெரிய அமானிதமாகும்.

"அமானிதம்" என்பது நம்பிக்கை நாணயம் என்பதற்கப்பால் உண்மை நீதி நேர்மை வாய்மை சத்தியம் மனிதர்களின் சொல் செயல் பண்பாடுகள் என சகலதிலும் பிரதிபலிக்கின்ற உன்னதமான பண்பாகும்.

பொதுவாக ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதை உரியவரிடம் கொடுத்துவிடல்" அமானிதம் " என்று சொல்வார்கள், ஆனால் அமானிதம் பேணலில் அது ஒரு அம்சமாகும்.

உண்மை பேசல் அமானிதமாகும், உண்மை சென்றடைய வேண்டிய ஒருவரிடம் பொய்யை சேர்பிப்பது அநீதியாகும், சத்தியம் செய்வதெனின் உண்மையை சொல்வது அமானிதமாகும், நன்மையான விவகாரங்களில் இரகசியம் பேணல் அமானிதமாகும், எல்லாவகையான பொறுப்புக்களும் அமானிதங்களாகும், பதவிகள் தொழில்கள் செல்வம் செல்வாக்கு ஆட்சி அதிகாரம் சகலதும் அமானிதங்களாகும்.

பெற்றார்கள், மனைவி,மக்கள், குடும்பம், உறவு முறைகள் சகலதும் அமானிதங்களாகும், மனைவிக்கு இல்லத்தரசியாக அமானிதங்கள் இருக்கின்றன.

தொழிலார்களின்,உழைப்பு,வியர்வை,ஊதியம் என அவர்களது உரிமைகள் யாவும் அமானிதங்களாகும்.

அடுத்தவர் மானம், கௌரவம், கற்பு, நட்பு, உயிர்,பொருள், இரத்தம் சகலதும் அமானிதங்களாகும்.

தகுதியானவர்களுக்கு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை, இடத்தை,பதவியை, பொறுப்பை வழங்குவது அமானிதமாகும், இமாமத், தலைமை ஆட்சி அதிகாரம் இவையெல்லாம் அமானிதங்களாகும்.

முண்டியடித்துக் கொண்டு பொறுப்புக்களை பதவிகளை, நிர்வாகங்களை, ஆட்சியை அதிகாரத்தை தகுதியற்றவர்கள் தட்டிப் பறித்துக் கொள்வதனை அதற்காக சூழ்சிகள் செய்வதனை இஸ்லாம் தடுத்துள்ளது, அதேபோல் தகுதியற்றவர்களிடம் அவை சென்றடைவதை பார்த்துக் கொண்டிருப்பதும் அமானிதங்களை பாழாக்ககுவதாகும்.

குறுக்கு வழியில் ஒருவருக்குச் சேர வேண்டிய தொழிலை, அந்தஸ்தை, செல்வத்தை அடைய முணைவது அமானிதத்தை பாழாக்க்குவதாகும்.

பாராட்டப்பட வேண்டிய ஒருவரை பாராட்டாமல் இருப்பது, ஊக்குவிக்கப்படவேண்டிய ஒருவரை ஊக்குவிக்காமல் இருப்பது, அங்கீகரிக்கப்படவேண்டிய ஒருவரை அங்கீகரிக்காமல் இருப்பது அல்லது அவற்றையெல்லாம் தகுதியில்லாவிடினும் தாமே அடைந்து கொள்ள முணைவது எல்லாம் அமானிதங்களை பாழ் படுத்துவதாகும்.

கருத்துக்கள், சிந்தனைகள், விமர்சனங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள், ஊடகப்பணிகள், பத்திரிக்கை தர்மங்கள்,முடிவுகள் சகலதும் அமானிதங்களாகும்.

வாக்குறுதிகள், உடன்பாடுகள், உடன்படிக்கைகள் அமானிதங்கள் ஆகும் .

சந்தர்ப்பங்கள், சலுகைகள், வசதி வாய்ப்புக்கள், வளங்கள், என சகலதும் அமானிதங்களாகும்.

கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள், சிறப்புரிமைகள், வசதி வாய்ப்புக்கள், கொடுப்பனவுகள், ஊதியங்கள் என எல்லாமே அமானிதங்கள்.

"அமானிதம்" எவ்வளவு பாரதூரமானது, அது எவ்வளவு மகத்தானது என்பதனை மிகச் சிறந்த உவமான உவமேயங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு உணர்த்துகின்றான்.

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் " [33:72]

-Inamullah Masihudeen-

Post a Comment

0 Comments