இலங்கையில் பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகள் நாளுக்கு நாள் ஏதோ ஒரு பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது அவற்றை தினச்செய்திகள் மூலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தாருன் நுஸ்ரா சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் 18 பேர் மீது ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட அதிகமாக பேசப்படாத சம்பவம் ஒன்றினை பற்றி இக் கட்டுரை அலசுகிறது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி அன்று கொழும்பு மாவட்டத்தில் கொஹூவலை பகுதியில் அமைந்துள்ள "தாருன் நுஸ்ரா" அநாதை சிறுவர் இல்லத்தை சோதனையிட்ட பொலிஸார் 18 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபராக விடுதி மேற்பார்வையாளரின் கணவனை (62) வயது கைது செய்தனர். அத்துடன் சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் ஆடைமாற்றும் மற்றும் உணவு உண்ணும் அறைகளில் அனாவசியமான முறையில் சி.சி.டி.வி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது . அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் சிறுமிகள் மற்றும் ஊழியர்களை பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
பின்னர் கங்கொடவில மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் சிறுமிகளை சட்டவைத்திய அதிகாரியின் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டிருந்தது. சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனை அறிக்கையில் 18 சிறுமிகளும் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன். அதிலொருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மனோதத்துவ வைத்தியர் லசந்தி அக்கீமனவின் அறிக்கையிலும் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. 18 சிறுமிகளில் ஐவர் உளரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அதற்குரிய உளநல சிகிச்சைகளையும் வைத்தியர் லசந்தி அக்கீமன வழங்கியிருந்தார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகள் 18 பேரும் ஆரம்பத்தில் நீதிமன்றினால் பிரிதொரு சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் கல்வியை தொடர்வதற்காக மீண்டும் தாருன் நுஸ்ரா சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது அச் சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவர் இல்லத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பராமரிப்பாளரால் 18 சிறுமிகளில் ஒருவர் மீது தாக்குதலும் இடம்பெற்றிருந்தது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில்18 சிறுமிகளின் துஷ்பிரயோகம் தொடர்பில் முக்கியமான சாட்சியப் பதிவுகள் நிறைவுற்றுள்ளதுடன் விளக்கமறியலில் இருந்த பிரதான சந்தேகநபர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் தாருன் நுஸ்ரா சிறுவர் இல்லத்தில் இருந்து சிறுவர் நலன்புரி அமைப்பினால் 2018 மார்ச் 21 ஆம் திகதி வெவ்வேறு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அநாதையாகிய மற்றும் உறவினர்களினால் பராமரிக்க முடியாத நிலையில் சிறுவர் இல்லங்களில் பாதுகாப்பாக வளர்க்கப்படுவார்கள் என்று நம்பி அனுப்பப்பட்ட சிறுமிகள் 18 பேர் ஒரு நபரின் இச்சைகளுக்கு ஆளாக்கப்பட்டு பாலியல் மற்றும் உள ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது துன்பியல் சம்பவமாகும். இது தொடர்பில் சிறுமிகள் பல தடவைகள் இல்லத்தின் நிர்வாகிகளிடம் முறையிட்டிருந்த போதிலும் நிர்வாகம் அவற்றை கண்டுகொள்ளாது குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்பட்டமையினால் 18 சிறுமிகள் வரையில் பாதிப்படைய நேர்ந்திருக்கிறது. இவ்வாறு சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறுவோர் சிறுவர் இல்லங்களை நடாத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்றே கூற வேண்டும். இவ் துஷ்பிரயோக சம்பவத்தில் பிரதான சந்தேகநபரின் மனைவியான விடுதி மேற்பார்வையாளரும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறார். இச் சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவல நிலைக்கு எதிராக ஊடகங்களினால் பாரியளவில் குரல் எழுப்பப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் முன்வைக்கப்பட்டது. இவ் விடயம் ஊடகங்களில் மட்டுமல்ல நாட்டில் எது நடந்தாலும் அதனை பேசுபொருளாக்கும் சமூக வலைத் தளங்களிலும் எவராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இதுபோன்ற சம்பவங்கள் அண்மைய காலத்தில் மேலும் சில சிறுவர் இல்லங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. 2018 பெப்ரவரி மாத நடுப்பகுதியில் குருநாகல் மாவட்டம் உடஹேதகம பகுதி சிறுவர் இல்லத்தில் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இரண்டு இளம் பிக்குகள் உள்ளிட்ட எட்டுப்பேரும், 2018 மார்ச் மாத ஆரம்பப்பகுதியில் காலி மாவட்டம் ஹபராதுவ பகுதி சிறுவர் இ்ல்லத்தில் 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்படியான சம்பவங்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகிகள் சிரத்தையோடு செயற்படவில்லை என்பதையே மிக தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
நாட்டில் இடம்பெறும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு கருத்து வெளியிட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அப்போதைய தலைவி நடாஷா பாலேந்திர "பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களை தடுப்பதற்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தற்போது நடைமுறையில்ல உள்ள தண்டனைகளையாவது வழங்க வேண்டும் எனினும் தண்டனை வழங்குவதன் ஊடாக இக் குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க முடியாது" என குறிப்பிட்டிருந்தார். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி அவற்றை முற்றாக தடுத்துவிட முடியாது என்றாலும் வழக்கு விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுமாயின் சிறிதேனும் அவற்றை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் அந்தவகையில் தாருன் நுஸ்ரா சிறுவர் இல்ல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தவருக்கு எதிராக விரைவாக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை வழங்குவதுடன் உடந்தையாக இருந்தவர்களையும் கண்டறிந்து தண்டித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
சிறுவர் இல்லங்களில் இடம்பெறும் பாலியல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சிறுவர், மகளிர் விவகார அமைச்சு ஆகியன அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகவே காணப்படுகிறது இதற்காக நாட்டில் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களிலும் உள்ள சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சிறுவர் இல்லங்களிலும் குறிப்பிட்டகால எல்லைக்குள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு. அங்கு சிறுவர்கள் எவ்வாறானதொரு பாதுகாப்பு சூழலில் இருக்கின்றனர் என்பதை சிறுவர்களிடம் உரையாடி அறிந்துகொள்ளக் கூடியதான செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி முன்னெடுத்துச் செல்வார்களாக இருந்தால் நிச்சயமாக சிறுவர் இல்லங்களில் வசிக்கும் சிறுவர்களை பாலியல் மற்றும் ஏனைய துஷ்பிரயோக செயல்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கூடியதாக இருக்கும் என்பதுடன் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றையும் கண்டறிந்து அவற்றுக்கு தண்டனைகளை வழங்கி சிறுவர் இல்லங்களையும் சரியான முறையில் கட்டமைத்து வைத்திருக்கவும் முடியும்.
#பிரகாஸ்
0 Comments