இலங்கையைச் சேர்ந்த இளம் வீரரொருவர் ஒரு ஓவரில் 7 ஆறு ஓட்டங்களை விளாசி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் ஏற்பாட்டில் 15 வயதுக்குட்பட்டோருக்கான முரளிதரன் நல்லெண்ண கிண்ணப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரின் இறுதிப்போட்டி ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்களா எம்சிசி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் போக் (FOG) கிரிக்கெட் அக்கடமியின் சார்பில் விளையாடிய நவிந்து பெஹசர என்ற இளம் வீரர் ஒரு பந்து ஓவருக்கு 7 ஆறு ஓட்டங்களை விளாசி சாதனைப்படைத்துள்ளார்.
தர்மபால கொட்டாவ அணிக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய போதே குறித்த வீரர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஒரு ஓவரில் வீசப்பட்ட நோபோல் பந்துடன் சேர்த்து இந்த 7 ஆறு ஓட்டங்களை விளாசியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் எந்த பிரிவிலும் இதுவரையில் ஒரு ஓவருக்கு 7 ஆறு ஓட்டங்களை பெற்ற சாதனை பதியப்படவில்லை. எனினும் இந்த சாதனையை நவிந்து பெஹசர புதிதாக தற்போது பதிவுசெய்துள்ளார்.
நவிந்து பெஹசர இந்த போட்டியில் 87 பந்துகளுக்கு 109 ஓட்டங்களை மொத்தமாக குவிக்க, போக் அணி 36 ஓவர்களில் 283 ஓட்டங்களை குவித்தது. இந்த போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தர்மபால கொட்டாவ அணி 20.5 ஓவர்களில் 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 211 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
-Sports Tamil-
0 Comments