பெரும்பாலான நம்மவர்கள் குறிப்பாக நமது பெண்கள் தத்தமது வீடு வாசலை சுத்தம் செய்த கையோடு முன்னேயுள்ள தம் பகுதிக்குட்பட்ட தெருவையும் பாதையையும் சுத்தம் செய்வது வழக்கம்.
ஆயினும் அவர்கள் சுத்தம் செய்து குப்பை கூளங்களை அப்படியே ஒதுக்கி மதில்களின் ஓரத்தில் அமைந்திருக்கும் வடிகான்களிலே தள்ளிவிடுவர்.
அதன் பாரதூரங்களை அவர்கள் அநேகமாக அறிந்திருக்கமாட்டர்.
ஆனாலும் சிலர் எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன என பாரதூரம் அறிந்தும் தள்ளிவிடுகின்ற மனநிலையுண்டு.
காலப்போக்கில் சிறுசிறு குப்பை கூளங்களாக சேர்ந்தவைகள் காற்றடிக்கும் போது கான்களின் வாயோரத்தில் குவியப்பட்டு, மழை பொழியும் போது இழுத்துச் செல்லப்படுன்றது. மேலும் வடிகான்களில் அடைபட்டு மழை நீர் தடைப்படுகின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது.
நாம் விடுகின்ற சிறுதவறுதான்.
நாளுக்கு நாள் பலர் செய்யும் அதே சிறுதவறு இறுதியில் ஒட்டுமொத்தமாகி பெருந்தவறாகுமல்லவா. .
மழைநீர் பாதைகளில் தேங்கி நின்று பாதையால் செல்வோருக்கு அசௌகரிகத்தை ஏற்படுத்துகின்றது மட்டுமல்லாமல் மறுபடி ஒவ்வொரு வடிகான் குப்பைகளையும் வெள்ளம் வந்தபின்னரே அகற்றக்கூடிய நிலையையும் உருவாக்குகின்றது.
சில வேளைகளில் சுத்தம் செய்வதில் ஏற்படும் அசமந்தப் போக்கினாலும் தாமதத்தாலும் பாதையால் செல்லும் மக்களும் அல்லது பாடசாலை செல்லும் மாணவர்களும் அல்லது மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய ஏழை எளியவர்களின் வீடுகளும் பாதிப்புகளுக்கு உள்ளாவதுடன் அவர்களின் திட்டுதலுக்கும் சாபத்துக்கும் நாமும் காரணமாகிறோம்.
முடிந்தவரை இந்த விசயத்தை வீட்டாருக்கு சொல்லிப் புரிய வையுங்கள்.
வருமுன் காப்போமாக!
-Abdur Rahman-


0 Comments