Subscribe Us

header ads

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான கால எல்லையை நிர்ணயிப்பதே இந்த 20 ஆவது சீர்திருத்தம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.


இன்றைய தேதியில் 20 ஆவது சீர்திருத்தம் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான கால எல்லையை நிர்ணயிப்பதே இந்த 20 ஆவது சீர்திருத்தம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

மூன்றரை வருடங்களுக்கு முன்பாக எந்தவித மாகாண சபைகளும் கலைக்க முடியாது என்பதுடன், தற்போதைய நிலையில் இறுதியாக காலாவதியாகும் மாகாண சபைகளின் திகதிக்கு ஒப்ப ஏனைய மாகாண சபைகளின் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று இறுதியாக திருத்தப்பட்ட சட்டமூலம் குறிப்பிடுகிறது.

கிழக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் இந்த மாதத்துடன் காலாவதி ஆகின்றன. ஒன்றில் யுத்தம் அல்லது இயற்கை அனர்த்தங்களின் போதான அவசரகால நிலைமைகள் அன்றி மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. இந்த நிலையில் காலவதியாகும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் அதனை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் சட்டரீதியான மாற்றங்களின் ஊடாக முன்னெடுத்திருக்கும் ஜனநாயக விரோத முன்னெடுப்பு என்று சொல்பவர்களின் கருத்தில் தற்போதைய நிலையில் ஒரு நியாயம் இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தாமல் மாகாண சபைகளின் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் தைரியம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிடையாது என்பது பரகசியமானது.

ஆனாலும் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இந்த சீர்திருத்தத்தில் சில அனுகூலங்களும் இருக்கின்றன. மாகாண சபை உருவாக்கப்பட்ட காலங்களின் இருந்தே சில அரசாங்கங்கள் தமது அரசாங்கம் மீதான மக்களின் விருப்பு வெறுப்பை நாடி பிடிப்பதற்காக தமக்கு தோதான மாகாண சபைகளை கலைத்து அரசாங்கத்தின் முழு வளங்களையும் குறித்த அம்மாகாணத்தின் மீது பிரயோகித்து வெற்றி பெறுவதை கண்டிருக்கிறோம். இவ்வாறான தேர்தல்களின் போது முறைகேடுகளும் வன்முறைகளும் அதியுச்சத்தை தொட்டிருக்கும்.

இதற்கு சிறந்த உதாரணம் சந்திரிக்கா அரசாங்கத்தின் போது 1999 ஆம் ஆண்டு நடந்த வயம்ப (வடமேல்) மாகாண சபை தேர்தல். வாக்கு சாவடிகளில் யாரும் எந்தவித ஆவணங்களும் இன்றி வாக்களிக்கலாம் என்று ஏதோ மீன் சந்தைகள் போல இருந்தன.தமிழ் சினிமாவில் வரும் காட்சிகளை போல வாக்கு சாவடிகள் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போதுதான் முதன் முதலில் வாக்குரிமையை பெற்றிருந்த நான் கூட 15 க்கும் அதிகமான வாக்குகளை அளித்திருந்தேன். என்னிலும் வயது கூடிய நண்பர்கள் அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தார்கள்

அந்தளவு மோசமான ஒரு தேர்தல் மீண்டும் இதுவரை ஏற்படவில்லை என்றாலும் மஹிந்த அரசாங்கமும் காலத்திற்கு காலம் இவ்விரண்டாக அல்லது மும்மூன்றாக ஏற்பாடு செய்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய அரச மற்றும் தேர்தல் நடைபெறாத ஏனைய மாகாணங்கள் இணைந்த உட்சபட்ச முழு அரச இயந்திரமும் தேர்தல் நடைபெறும் குறித்த மாகாணங்களில் ஒன்று குவிக்கப்பட்டு ஆளும் தரப்புக்கு சார்பாக முடுக்குவிடப்பட்டிருந்தது வரலாறு. நாடு தழுவிய ரீதியில் எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் போது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் இவ்வாறன ஜனநாயக விரோத செயற்பாடுகள் ஓரளவு குறையும்.

இதைத்தவிர 20 ஆவது சீர்திருத்தம் சிறுபான்மைக்கு ஆபத்து என்பது வெறும் பூச்சாண்டிகளே. ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலத்திற்கு அல்லது அவற்றின் அதிகாரங்களுக்கு இந்த சட்ட மூலத்தில் எந்தவித ஆபத்துக்களும் இதில் இல்லை.( ஆபத்து உண்டு என்பவர்கள் தாராளமாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்). தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண சபை இயங்குவதற்குரிய காலம் ஒரு வருடம் போனசாக நீடிக்கப்படும். வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெற கூடும்.

-Dilshan Mohamed-

Post a Comment

0 Comments