துருக்கிப் படைகள் மியான்மாரைக் கைப்பற்றிவிட்டதாக வரும் அலறவைக்கும் கற்பனைகளுக்கு பத்தாயிரம் சேர்கள்,பல்லாயிரம் லைக்ஸ்கள் என்று அறிவியல், பொது அறிவு வறுமை இந்த 2017 இலேயே தாண்டவமாடுகிறது.
2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தகமையம், மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டு ஒட்டுமொத்த உலகமுமே அதிர்ச்சியில் உறைந்து போய் பரபரப்புக்கு சிறிதும் பஞ்சம் இல்லாத அந்நாட்களில் ஃபேஸ்புக் மட்டும் இருந்து இருந்தால் எந்த மாதிரி செய்திகள் வந்து இருக்கும் ? நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.இருந்தாலும் சும்மா ஒரு கற்பனை.
1 பயங்கரவாதி வஸீம் கானையும் கூட்டாளிகளையும் எத்தனையோ முறை சாகடித்த நடிகர் விஜய்காந்த் இன் உதவியை அமெரிக்கா நாடி உள்ளது.அமெரிக்கா வெளியுறவு செயலாளர் கொண்டலிஸா ரைஸ் நேற்று ஒரு மணி நேரம் விஜய்காந்த் உடன் டெலிபோனில் உரையாடிய போது தங்களுக்கு விஜய்காந்த் உதவியின் அவசியத்தை விளக்கிக் கூறி இருந்தார்.இன்று விஜய்காந்த் அமெரிக்கா பறக்கிறார்..
2 அல்ஹம்துலில்லாஹ்..அமெரிக்காவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ..அல்கைதா துணைத் தலைவர் அய்மான் அல்ஜவஹிரி தலைமையில் ப்ளோரிடா,டெக்ஸாஸ், பென்சில்வேனியா மாகாணங்களைக் கைப்பற்றியது புரட்சிப் படை...இதற்கு 12 000 லைக்ஸ், 11000 சேர்ஸ்
3 அமெரிக்கா முழுமையாகக் கைப்பற்றப்பட்டதும் அதன் வளங்கள் சொத்துக்கள் எல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டு பலஸ்தீன், ஸோமாலியா, ருவாண்டா உட்பட வறிய நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.ஐக்கிய நாடுகள் சபை கலைக்கப்பட்டு இஸ்ரேலும் இருந்த இடம் தெரியாமல் செய்யப்படும் - அய்மன் அல்ஜவாஹிரி
4ஈராக் அதிபர் சதாம் ஹுஸைன்,லிபிய அதிபர் கடாபி, கியூபா அதிபர் காஸ்ட்ரோ தலைமையில் முக்கோண கூட்டணி உதயமாகி இருப்பது நீங்கள் அறிந்ததே..இக்கூட்டணி நாளை சூட்டோடு சூடாக லண்டன் நகர் மீது போர் தொடுக்கும் என்று அறிவித்து இருக்கிறது...பிரிட்டன் பிரதமர் டொனி பிளேயர் தலைமறைவு.
5அதிகம் பகிருங்கள் மகிழ்ச்சியான செய்தி.வாஷிங்டன் பெரிய பள்ளி இமாமை அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன் இன்று சந்தித்த போது நேற்றைய செப்டம்பர் 11 தாக்குதல் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறவிப்பு செய்யப்பட்டதற்கான ஆதரங்களைக் காட்டி இருக்கிறார்..அந்த இடத்திலேயே கிளிண்டனும் ஹிலாரியும் இஸ்லாத்துக்கு வந்தனர்..இதற்கு 1 இலட்சம் லைக்ஸ், 75000 சேர்ஸ்
6அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பயங்கரவாத இயக்கங்களாகத் தடை செய்த அத்தனை முக்கிய இயக்கங்களது தலைவர்களும் புலிகளுடன் கிளிநொச்சியில் சந்திப்பு.சரித்திரம் கண்டிராத கெரில்லா தாக்குதல்களுக்கு அத்தனை ஏற்பாடுகளும் பூர்த்தி.செய்தி அறிந்ததும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு ஹார்ட் அட்டாக்.
7)2001 ஜுலையில் மாவனெல்லைக் கலவரங்களின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்படாவிட்டால் கொழும்பை ஜிஹாத் படை கைப்பற்றும் என்று தலிபான் இயக்கத் தலைவர் முல்லா மொஹமட் உமர் சூளுரை.சந்திரிக்கா பதறியடித்துக் கொண்டு அலரி மாளிகையில் முஸ்லிம் எம்பீக்களுடன் ஆலோசனை.
8 முல்லா உமரின் எச்சரிக்கை பற்றி இன்று ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க இதன் பின்புலத்தில் முஸ்லிம் காங்கிரஸும் ஹக்கீமும் இருப்பதாகக் கூறினார்.ஹக்கீம் செருப்பைக் கழற்றி சம்பிக்கவுக்கு அடிக்க பெரும் அமளிதுமளியான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது..
9பாபர் மசூதியை மீட்க பெரும் படை ஆப்கானில் இருந்து புறப்பட்டது..இந்தியா பிரதமர் வாஜ்பேய் நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார்.துணைப் பிரதமரும் பா.ஜ.க.மூத்த தலைவருமான அத்வானி குல்லு மனாலிக்குத் தப்பி ஓட்டம்.
10 "அமெரிக்காவுக்குத் தொடர்ந்தும் மாமா வேலை பார்த்தால் சவூதியையும் எகிப்தையும் உலக வரைபடத்தில் இருந்து அழித்தொழிப்போம்.புனிதப் போர் ஆரம்பமாகிவிட்டது"..என்ற ஒஸாமா பின்லேடன் அதிரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து எகிப்து 3000 போர் விமானங்களையும் சவூதி ஐயாயிரம் பில்லியன் அமெரிக்கா டாலர்களையும் ஆப்கானுக்கு அனுப்பி வைத்தது..
-Zafar Ahmed-


0 Comments