சாம்சங் நிறுவன துணைத் தலைவரான Lee Jae-yong என்பவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதை தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் கொரியா நாட்டை சேர்ந்த சாம்சுங் நிறுவன தயாரிப்புகளான செல்போன், குளிர்ச்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாகும்.
இந்நிறுவனத்தின் தலைவரான Lee Kun-hee என்பவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகனான Lee Jae-yong துணை தலைவர் பதவியை ஏற்றார்.
துணைத் தலைவராக இருந்தாலும், கூட ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் அவர் சாம்சுங் நிறுவனத்தின் தலைவராகவே கருதப்பட்டார்.
இந்நிலையில், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான Park Guen-hye என்பவர் மாபெரும் ஊழலில் சிக்கி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த ஊழல் விவகாரத்தில் சாம்சுங் நிறுவன துணைத் தலைவருக்கும் தொடர்புள்ளது எனக் கூறி கடந்த பெப்ரவரி மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணையின்போது தனது இரண்டு சாம்சுங் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதற்கு சுமார் 36.4 மில்லியன் டொலர் லஞ்சம் கொடுத்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
துணைத் தலைவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இக்குற்றச்சாட்டுகளை Lee Jae-yong மறுத்து வருகிறார். எதிர்வரும் ஆகஸ்ட் 25-ம் திகதி இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments