கத்தார் மீதான சவுதி உட்பட சில அரபு நாடுகளின் தடையும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் பஞ்சாயத்துக்களும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் கத்தாரிலிருந்து செல்லும் ஹஜ் பயணிகளை தடுப்பதாக கத்தார் எழுப்பிய குற்றச்சாட்டை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வருடந்தோறும் சுமார் 1600 கத்தார் பிரஜைகளும் சுமார் 400 கத்தார்வாழ் வெளிநாட்டு பிரஜைகளும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டும் அதேயளவு ஹஜ் பயணிகள் வருகை தர எந்தவித் தடையுமில்லை என்றும் ஆனால் அவர்கள் கத்தார் ஏர்லைன்ஸ் தவிர்த்து சவுதி ஹஜ், உம்ரா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த விமான சேவையையும் பயன்படுத்தி வரலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து கத்தார் மற்றும் சவுதிக்கு இடையிலான தரைவழி போக்குவரத்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கத்தார் நாட்டு ரியால்கள் வழமைபோல் சவுதியில் செல்லும் என்றும் ஹஜ் பயணிகள் கத்தார் ரியால்களை தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 20 ஆம் தேதி வருகை தந்த கத்தார் நாட்டு ஹஜ் பயணிகள் பிற நாட்டு ஹஜ் பயணிகளைப் போலவே மனமுவந்து வரவேற்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments