Mohamed Nizous
எண்ணிப் பழகிய
ஜன்னல் கம்பி,
புன்னகை தந்த
பூக்கல் குருவி,
படிக்க உட்கார்ந்த படி,
படுக்க விரித்த பாய்கள்,
குடிக்கப் பாவித்த குடம்,
நடித்துப் பழகிய
நாற்றக் கழிவறை
தவழ்ந்த அழகிய
தாய் வீட்டுத் தரை
வரைந்து பழகிய
வாசற் கதவு,
வெயிலில் காத்த முகடு
வேலியில் இருந்த தகடு
ஒழித்து விளையாடிய
உள் வீடு
குளித்து மகிழ்ந்த
குற்றாலக் கிணறு
காயப் போட்ட கொடி
காயப் படுத்திய தடி
சாப்பிட உட்கார்ந்த
சாப்பறை
கூப்பிட்டால் ஒழிந்த
குசினியின் மூலை
சீனி களவெடுத்த
சிகப்பு டப்பா
கூனி சம்பல் அரைத்த
குழி அம்மி
சாரதிக்குப் பழகிய
சங்கிலி ஊஞ்சல்
ஆற அமர உட்கார்ந்த
அடுப்பங்கரைக் குத்தி
காற்றில் எழுதிய
கை விசிறி
ஏற்றி வெளிச்சம் தந்த
எண்ணெய் லாம்பு
பத்திரமாய் பத்திரம் வைத்த
பழைய ட்ரங் பெட்டி
பாத்திரங்கள் அடுக்கிய
பலகை அலுமாரி
எத்தனை வசதி வந்தும்
இவைகள் மறப்பதில்லை
அத்தனையும் மனதுக்குள்
ஆழப் பதிந்தவைகள்
0 Comments