இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. 34 வயதாகும் இவர் யார்க்கர் பந்து வீசுவதில் வல்லவர். சமீப காலமாக இவரது உடற்தகுதி குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தரங்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு கேப்டன் கபுகேதரா காயத்தால் விலகியுள்ளார். இதனால் இன்றைய இந்தியாவிற்கு எதிரான 4-வது போட்டியில் மலிங்கா கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
4-வது போட்டி குறித்து மலிங்கா பேட்டி அளித்தார். அப்போது 34 வயதாகும் தான் 40 வயது வரை, அதாவது 2023 வரை விளையாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘நான் காயத்தில் இருந்தபோது 19 மாதங்களாக விளையாடவில்லை. அதற்குப் பின் இரண்டு மூன்று தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளேன். தற்போது எனது உடல் நல்ல நிலைமைக்கு திரும்பிவிட்டதாக உணர்கிறேன்.
மீண்டும் உடற்தகுதி பெறுவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறேன். பிட்னெஸ் வேலையை ஏற்கனவே செய்து கொண்டு வருகிறேன். தொடர்ந்து 10 ஓவர்கள் வீச முடியும் என்ற நிலையை எட்டியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 2023 வரை விளையாட தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
0 Comments