‘‘விண்வெளி வாசம் வியப்பூட்டுவது, பல எதிர்பாராத அனுபவங்களைத் தரக் கூடியது’’ என்கிறார், ரஷிய விண்வெளி வீரரான மிகைல் கோர்னீன்கோ.
ரஷிய அணுசக்திக் கழகமான ரோஸடோமும், சென்னை ரஷிய அறிவியல் மற்றும் கலாசார மையமும் இணைந்து முதல் அறிவியல் விழாவை சென்னையில் சமீபத்தில் நடத்தின.
இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த கோர்னீன்கோ, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் விண்வெளிச் சந்தேகங்களுக்கு விடையளித்தார்.
57 வயதாகும் விண்வெளி வீரர் மிகைல் கோர்னீன்கோவை நாம் சந்தித்தபோது...
‘‘ரஷிய ராணுவத்தில் ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்த எனக்கு, சிறுவயது முதலே விண்வெளியியலில் மிகுந்த ஆர்வம். ஒரு சிறுவனாக இரவில் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பேன், அங்கு நம்மாலும் செல்ல முடியுமா என்று எண்ணிக்கொண்டிருப்பேன்.
அதனால்தான், ராணுவப் பணியில் இருந்து விடைபெற்றபிறகு, விண்வெளியியல் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றேன். ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ஒரு பொறியாளராக பல நிலைகளில் பணியாற்றினேன். எனது முதல் விண்வெளிப் பயணம் 2010–ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது நான் பிளைட் என்ஜினீயராக விண்வெளிக்குச் சென்றிருந்தேன். அப்போது நான், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே மேற்கொண்ட ‘விண்வெளி நடை’ மறக்க முடியாதது.
கடந்த 2015–ம் ஆண்டு மார்ச்சில் நான் சோயுஸ் விண்கலம் மூலமாக மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றேன். இந்த முறை எனது விண்வெளி வாசம் சுமார் ஓராண்டு காலம், சரியாகச் சொல்வதென்றால் 340 நாட்களுக்கு நீடித்தது.
முற்றிலும் புவியீர்ப்பு அற்ற சூழலில் விண்வெளியில் வசிப்பது என்பது வியப்பூட்டுவது, கொஞ்சம் கடினமானது. அங்கு தினமும் 16 மணி நேரம் பணிபுரிந்தாக வேண்டும். என்னுடன் ‘நாசா’ விஞ்ஞானி ஸ்காட் கெல்லியும் இருந்தார்.
ஆனால், வெளியூர் செல்லும் நபர் சொந்த ஊர் நினைவில் தவிப்பதைப் போல, எனக்கு எப்போதும் பூமி ஞாபகமாகவே இருந்தது.
எனது விண்வெளிப் பணிகளைக் கவனித்துக்கொண்டே, அவ்வப்போது ‘வியூ பைண்டர்’ வழியாக, நீலமணி போலப் பிரகாசிக்கும் பூமியைப் பார்ப்பேன். அப்போதெல்லாம், ‘எப்போது பூமிக்குத் திரும்புவோம்?’ என்று ஏக்கமாக இருக்கும்.
பூமி பற்றிய நினைவு வாட்டியதால், மரங்கள், இயற்கைக் காட்சிகள் என்று பூமிப் படங்களை விண்வெளி நிலையத்தின் உட்புறச் சுவரில் ஒட்டி வைத்திருப்பேன். அங்கு நான் இசை கேட்கக்கூட விரும்பியதில்லை. மாறாக, பதிவு செய்யப்பட்ட பறவைகளின் ஒலி, நாயின் குரைப்போசை போன்றவற்றைக் கேட்டு பூமி தாகத்தைத் தணித்துக்கொள்வேன்.
ஆனால், உண்மையில் இப்போதெல்லாம் விண்வெளியில் வீரர்களுக்கான வசதிகள் அதிகரித்து விட்டன. முன்பு, மசிக்கப்பட்ட உணவை குழல் வழியாக உறிஞ்சிச் சாப்பிட வேண்டும். ஆனால் கடந்த பயணத்தில் நான் எனக்குப் பிடித்த நண்டுக் கறியைக் கூட ருசிக்க முடிந்தது.
விண்வெளியில் திகிலூட்டும் அனுபவங்களுக்கும் குறைவிருக்காது. ஒருமுறை, விண்வெளிப் பொருள் ஒன்று சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது மோதக்கூடும் என்று பூமியில் இருந்து தகவல் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் எங்களை ‘பெல்ட்’களால் இறுக்கிப் பிணைத்தபடி ‘திக்... திக்...’ என்று காத்திருந்தோம். நல்லவேளையாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை’’ என்று புன்னகைக்கிறார், கோர்னீன்கோ.
மனித உடலில் விண்வெளிச் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவது தங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம் என்கிறார் இவர்.
‘‘ஓராண்டு கால விண்வெளி வாசத்தின் காரணமாக எனது பார்வை மற்றும் கேட்புத்திறனில் பாதிப்பு ஏற்பட்டது. பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் அது சரியாகிவிட்டது என்றாலும், முழுமையாக நலம்
பெற்றுவிட்டதாகக் கூற முடியாது’’ என்கிறார்.
தற்போது செவ்வாய்க் கிரகத்தில் மனிதக் குடியேற்றம் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
‘பூமியில் இருந்து சுமார் 20.25 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாயில் குடியேறுவது சாத்தியம்தானா? இவ்விஷயத்தில் ஒரு விண்வெளி வீரராக கோர்னீன்கோவின் கருத்து என்ன?’ என்று கேட்டபோது...
‘‘செவ்வாய்க் கிரகப் பயணத்தில் தூரத்தையும் தாண்டி, கதிர்வீச்சு போன்ற வேறு சில சிக்கலான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவது எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். அதற்கு, இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
விண்வெளித் துறையில் இந்தியா புரிந்திருக்கும் சாதனைகள் அளப்பரியவை, இந்தியாவும் ரஷியாவும் இணைந்து செயல்பட்டால் இன்னும் நிறைய சாதிக்கலாம் என்பது மிகைல் கோர்னீன்கோவின் அழுத்தமான கருத்து.
0 Comments