Subscribe Us

header ads

மாற்றானின் பார்வையில் ஒரு மத்ரஸா


Source: රාවය | கட்டுரையாளர்: ரேனுகா நிலுக்‌ஷி ஹேரத் 


இதுவொரு பாடசாலை. வித்தியாசமான நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனம். முஸ்லிம் எதிர்ப்புவாதம் நோயாகப் பரவும் காலமொன்றில் அந்த பாடசாலைக்குள் செல்கின்றோம். 

முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பலமுறை சென்றிருந்தாலும், ‘மத்ரஸா’ ஒன்றுக்குள் செல்லும் ஆவல் நீண்ட காலமாக இருந்தது. பௌத்தர்கள் முஸ்லிம் பள்ளிவாசலிலோ மத்ரஸாவிலோ என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மாட்டார்கள். ஏனெனில், அங்கு அனைத்தும் தமிழ் மொழியில் நடைபெறுகின்றது.

பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் போன்று இஸ்லாமியர்களுக்கு ‘மத குரு/ பூசாரி’ பிரிவொன்று கிடையாது. இஸ்லாமியர்கள் பிரம்மசாரியாக, ஆலயங்களில்; மடங்களில் அல்லது காடுகளில் வாழும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதில்லை.

ஆகவே, முஸ்லிம் மதத் தலைவர்கள் எனக் கருதப்படுவோர் பௌத்த தேரர்களைப் போன்று பூசாரிகள் அல்லர். தொழில் செய்து, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்ற, ஆனால் இஸ்லாமிய சமயக் கல்வியைக் கற்று பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் ‘மவ்லவி’ என்ற அடையாளப் பெயர் கொண்டு அழைக்கப்படும் சாமானிய மனிதர்கள் ஆவர். 

இஸ்லாமிய சமய ஸ்தாபனம் ஒன்றுக்குள் செல்வதற்கு பயப்படுவோர் உள்ளனர். பள்ளிவாசலுக்கோ மத்ரஸாவுக்கோ நுழைவதற்கு அனுமதி கிடையாது என்று எண்ணுவோரும் உண்டு. எல்லா இடங்களில் போன்று முஸ்லிம்களும் சாதாரண மனிதர்கள்தாம். 

அமைதியை விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் பௌத்தர்களும் முஸ்லிம்களும் வீணான மோதலொன்றுக்குள் தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் உள்ளது. எனவே, சிங்கள மக்களுடன் கலந்துரையாடும் பாரிய தேவையொன்று முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. ஆனால் மொழி அதைவிட பாரிய தடையாக இருக்கின்றது.

முஸ்லிம்கள் அரபி மொழியை கற்கின்றனர். அரபி சொற்களை பெயர்களை பாவிக்கின்றனர். முஸ்லிமல்லாத சிலருக்கு இது பிடிப்பதில்லை. அரபு மொழியைப் பாவிப்பதினால் முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளுடனும் தீவிரவாத இயக்கங்களுடனும் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கின்றனர்.

தாரான்மைவாத ஜனநாயக சித்தாங்களுடன் முரண்படும் பகுதிகள் எல்லா சமயங்களிலும் உண்டு. இஸ்லாத்திலும் அவ்வாறான நிறைய பகுதிகள் உள்ளன. 

ஞாணசார தேரர் குர்ஆனை முழுமையாக வாசிக்கவில்லை என்பது எனது நம்பிக்கை. ஏனெனில் நான் குர்ஆனை வாசித்துள்ளேன். எல்லா சமயங்களைப் போன்று மனித சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட கருத்துக்கள்தான் அதில் உள்ளன. ஏனைய கலாசாரங்களைப் போன்று தூய்மையைப் பேணுவதற்காக சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் இடங்கள் இஸ்லாத்திலும் உள்ளன. ஆனால் குர்ஆன் என்பது மனித சமூகத்தைப் அழிவின்பால் தள்ளும் செல்லும் பிற்போக்கு நூல் அல்ல. 

இந்தப் பாடசாலையின் பெயர் ‘தன்வீர்’. கலங்கரை விளக்கு என்பது அதன் பொருள். இம் மத்ரஸாவில் அரபு மொழியும் இஸ்லாமியக் கலைகளும் சிங்கள மொழியில் கற்பிக்கப்படுகின்றது.

இஸ்லாம் தொடர்பான பிழையான கருத்துக்கள் சமூகமயமாகும் போது ‘தன்வீர் அகடமி’ போன்ற நிறுவனங்களின் தேவை இன்றியமையாது. முஸ்லிம்களும் சிங்கள சமூகத்தவருடன் கலந்துரையாட வேண்டிய காலத்தின் கட்டாயம் எழுந்துள்ளது. ‘தன்வீர்’ எனும் கலங்கரை விளக்கில் இருந்து எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் மனிதர்கள் உருவாகுவர் என நம்புகின்றோம்; அவர்களை வாழ்த்துகின்றோம்.
__________________
தன்வீர் அகாடமி பற்றிய நீளமான கட்டுரையில் இருந்து, அகாடமியின் வரலாறு போன்ற பகுதிகளைத் தவிர்ந்து, இஸ்லாம்-முஸ்லிம்கள்-சமயக் கல்வி குறித்து முஸ்லிம் அல்லாத சிங்கள சமூகத்தில் ஒருவரின் பார்வையை புரிந்துகொள்வதற்காக கட்டுரையாளரின் உரைப் பகுதியை மட்டும் மொழிபெயர்த்தேன்.

தமிழாக்கம்: Hisham Hussain, Puttalam

Post a Comment

0 Comments