சீனாவில் படிப்பை பாதியில் நிறுத்திய பெண், இன்று கடின உழைப்பால் சீனாவின் ‘நம்பர் 1’ கோடீஸ்வரியாக உயர்ந்திருக்கிறார்.
ஸோ கன்பீ என்ற 47 வயதுப் பெண்தான் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த கன்பீ, கடும் சிரமத்துக்கு இடையில் பள்ளிக்குச் சென்றுவந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் படிப்பைத் தொடரவே முடியாது என்ற நிலையில் பள்ளி செல்வதை நிறுத்தினார். கடிகாரங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
பணியின்போதே அத்துறையில் உள்ள தொழில் சார்ந்த நுட்பங்களை கன்பீ திறமையாக கற்றுக்கொண்டார்.
குறிப்பாக, கடிகாரங்களில் உள்ள லென்சுகளை தயாரிப்பது எப்படி என்ற நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டு தனது 23–வது வயதில், அதாவது கடந்த 1993–ம் ஆண்டு கடிகார லென்சுகளை தயாரிக்கும் ‘லென்ஸ் டெக்னாலஜி’ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2003–ம் ஆண்டு பிரபல செல்போன் நிறுவனமான மோட்டோரோலா இவரது நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தமது குறிப்பிட்ட மாடல் செல்போனுக்கு கீறல் விழாத கண்ணாடி லென்சுகளை தயாரித்துக் கொடுக்குமாறு ஆர்டர் வழங்கியது.
மோட்டோரோலாவை தொடர்ந்து எச்.டி.சி., நோக்கியா மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களும் இவருக்கு ஆர்டர் களை வழங்கின.
அதைத் தொடர்ந்து, 2007–ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது முதல் செல்போனை அறிமுகம் செய்தது. அந்த மாடலுக்கும் கன்பீ ஸ்கிரீன் கிளாஸ் தயாரித்து வழங்கினார்.
இன்றைக்கும் ஆப்பிள் செல்போனுக்கு ஸ்கிரீன் கிளாசுகளை லென்ஸ் டெக்னாலஜி நிறுவனம்தான் தயாரித்து வழங்குகிறது.
2013–ம் ஆண்டு 3 தொழிற்சாலைகளைத் தொடங்கிய இவர், நடப்பு ஆண்டில் 32 தொழிற்சாலைகளைத் தொடங்கி தற்போது சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்.
முறையான பள்ளி, கல்லூரிப் படிப்பு இல்லாவிட்டாலும், தனது சொந்த உழைப்பால் உயர்ந்த இப்பெண் தொழிலதிபரின் சொத்து மதிப்பு 9.2 பில்லியன் டாலர்கள் ஆகும். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இதன் மூலம், உலகில் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெண் கோடீஸ்வரிகளின் பட்டியலில் குறுகிய காலத்தில் ஸோ கன்பீ ‘நம்பர் 1’ இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்திருக்கிறார்.
0 Comments