மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று (19) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் இடர் வலையத்திலுள்ள மக்களை மீட்பதற்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எதிர்வரும் சில மாதங்களில் அப்பிரதேசத்திலுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும், சட்டவிரோதமாக குடியேறுவதை தடைசெய்வதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இதுவரையில் உதவிவந்த அனைத்து நிறுவனங்களினதும் உதவியை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல அனர்த்த நிலை தொடர்பான அடுத்த முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்த்தன, ஏ.எச்.எம். பௌசி, மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments