ஜெருசலமில் பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் முற்றியதைத் தொடர்ந்து இஸ்ரேல் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
ஜெருசலத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறி இஸ்ரேல் அரசு, மெட்டல் டிடெக்டர்களை சில தினங்களுக்கு முன்னர் பொருத்தி உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் செயலைக் கண்டித்து ஜெருசலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டம் விரைவாகவே கலவரமாக மாறியது. இதையொட்டி, இஸ்ரேல் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால், கலவரத்தின் வீரியம் அதிகரித்து தற்போது ஜெருசலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை பாலஸ்தீன ஜனாதிபதி முகம்மது அப்பாஸ் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேல் உடனான அனைத்து தொடர்புகளையும் பாலஸ்தீனம் துண்டித்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
’இஸ்ரேல் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறி பாலஸ்தீனர்கள் மீது நடத்தும் இந்தச் சோதனையைக் கைவிடும் வரையில் இஸ்ரேல் உடன் எந்தத் தொடர்பும் இல்லை’ என பாலஸ்தீன ஜனாதிபதி அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
0 Comments