Subscribe Us

இன நல்லுறவைச் சீர்குலைக்கும் புதை பொருள் ஆராச்சி!


புதைபொருள் ஆராச்சி பிரதேசங்களைப் பேணுவது தொடர்பாக அரசு விசேட அக்கறை காட்டி வருகிறது. புதைபொருள் பெறுமதி மிகு பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஊர்காவல் படையினரைச் சேவையிலீடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளார்.
புதைபொருள் பெறுமானமிகு பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது. அதில் தர்க்கிப்பதற்கு கருத்துக்கள் இல்லை.
ஆனால் இன்று புதைபொருட் பிரதேசம் என சிறுபான்மையினரது காணிகள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் இலக்காக்கப்படுவதனை அவதானிக்கின்றோம்.
அக்கரைப்பற்று எல்லையிலுள்ள 250 வருட காலம் பழைமை மிகு அம்பாறை அரச அதிபர் அனுமதி வழங்கிய பொத்தான ஆராய்ச்சிபுட்டி தர்ஹாவும் பள்ளிவாசலும் வெளியார் பிரவேசிக்காதவாறு முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன. நேற்று வெளியான நவமணியில் தலைப்புச் செய்தியாக இது வெளிவந்துள்ளது.
இதுபோன்று அண்மையில் ஜனாதிபதி தலைமையில் தொல்பொருள் தள பெறுமதி மிகு இடங்களைப் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் செங்கலடி பாசிக்குடாவின் சந்தியிலுள்ள காணியில் தொல்பொருள் பெறுமதி மிகு பௌத்த புனிதத்தலங்கள் அழிக்கப்பட்டதாகவும் அதற்கு முஸ்லிம்களே காரணம் என்றும் அபட்டமான குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியிருந்தார். இந்தக் காணியிலும் 1964இல் இருந்தே முஸ்லிம் ஸியாரமும் தக்கியாவும் இருந்துள்ளது.
புதைபொருள் பெறுமானம் மிகு பிரதேசம் என்ற பெரில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை இழக்கும் ஆபத்தினை எதிர் நோக்கி வருவதனையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
கடந்த காலங்களில் சில பிரதேசங்களில் புதைபொருள் பெறுமதி மிகு பிரதேசம் எனப் பிரகடனப்படுத்துவதற்கு வெளியிலிருந்து சில அதிகாரிகள் திட்டமிட்டு புதை பொருள் தடயங்களைப் புதைத்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
புதை பொருள் பெறுமதி மிகு பிரதேசங்களைப் பாதுகாப்பது என்பது ஓர் இனத்துக்கோ ஒரு சமயத்துக்கோ உரியதல்ல. அது பொதுவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லாட்சி அரசினை உருவாக்கியது கடந்த காலங்களில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் நடக்காதிருப்பதற்காகும். ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது எல்லாம் தலை கீழாகவே நடக்கின்றன.
இரு நூற்றாண்டு காலமாக இருந்து வரும் இறையில்லத்துக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிப்பதனை இந்த அரசு எப்படி நியாயப்படுத்தலாம்?
இந்த அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் இருபத்தியொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை அங்கீகரிக்க முடியுமா?
அக்கரைப்பற்று பொத்தானையில் நடை பெற்றுள்ள நிகழ்வு நாளை ஏனைய இடங்களில் நடக்காதிருப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அளிக்கும் உத்தரவாதம் என்ன?
புதைபொருள் பெறுமதி மிகு பிரதேசங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது போன்ற பணிகளில் சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்காத சிறுபான்மை இனப் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசு இது குறித்து கடுமையாகச் சிந்தித்து எந்த ஒரு இனத்திற்கும் பாதிப்பு எற்படாத வகையில் இவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
புதைபொருள் ஆராச்சி என்ற போர்வையில் நடக்கப் போகும் விடயங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகத் தலையிடாவிடின் வெள்ளம் தலைக்கு மேல் போய்விடும் என்பதனை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
-NM Ameen -

Post a Comment

0 Comments