Subscribe Us

அ.குமாரசாமிப்புலவர்

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப்புலவரின்
தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மையரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளை பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்

கல்வி

குமாரசுவாமிக்கு ஐந்து வயதானதும், தந்தையார் குலகுருவான வேதாரணியம் நாமசிவாய தேசிகரை அழைத்து இவருக்கு ஏடு தொடக்குவித்தார். பின்னர் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார். முருகேச பண்டிதரிடம் தமிழ்க் கல்வி கற்ற காலத்தே இவருடன் கூட கல்வி கற்றவருள் குறிப்பிடத்தக்கவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை மற்றும் சுன்னாகம் மு. வைத்தியநாதபிள்ளை ஆவர். இவர் மாணவராக இருந்த போது, சொல்லும் பொருளும் சுவைபட பாடுவதிலும், கட்டுரை வரைவதிலும், சொற்பொழிவு செய்வதிலும் திறமை பெற்றிருந்தமையால் இவரைப் புலவர் என்று பட்டப் பெயரால் அழைத்தனர். இப்பட்டப் பெயரே இவருக்கு பிற்காலத்தில் இயற்பெயராகிற்று என்று புலவரது மாணவராகிய புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

 
நாவலருடன் தொடர்பும் வடமொழிக் கல்வியும்

புலவரவர்கள் கல்வி கற்று வரும் காலத்தே, தமிழகம் சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாற்றி விட்டு தாயகம் திரும்பிய ஆறுமுக நாவலருக்கு வெகு சிறப்பான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து நாவலர் சைவ சொற்பொழிவுகளுக்கு தவறாது சென்று செவிமடுத்து மகிழ்ந்த புலவருக்கு, உடன் கற்ற நண்பன் ஊரெழு சரவணமுத்துப் புலவர் மூலம் நாவலர் அறிமுகம் கிடைத்தது. நாவலரும் தனது பழைய நண்பனாகிய முத்துக்குமாரக் கவிராயாரின் வழிதோன்றல்தான் புலவர் என்றறிந்து, புலவரின் தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்தது மட்டுமல்லாது வடமொழி மற்றும் சைவசித்தாந்தகளை முறையே கற்குமாறு அறிவுரை வழங்கினார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவர் நாவலர் மீது கூறிய சரமகவிகள் நன்கு விளக்கும்.

நாவலரின் அறிவுரைப்படி புலவரும் வடமொழி கற்கும் பொருட்டு, நெருங்கிய உறவினரும், கற்பிட்டி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரும், நான்கு மொழிகளில் புலமை உடையவருமாகிய நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்று வரலானார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களை முதலில் புலவரவர்கள் கற்றுத் தெளிந்தார். பண்டிதர் வேலை மாற்றம் பெற்று கற்பிட்டி சென்ற பின்னர், தபால் மூலம் புலவரின் கல்வி தொடர்ந்தது. இவ்வாறு பண்டிதரால் மொழிபெயர்த்து அனுப்பப்பட்ட நூல்களுக்குள் ஒன்றாகிய இதோபதேசம் புலவரால் 1886 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இங்கனம் வடமொழியைச் செவ்வனே கற்றதன் பலனாகப் புலவர் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழில் பாடியுள்ளார். மேலும் சைவசித்தாந்த அறிவைப் பெருக்கும் பொருட்டு தனது குடியின் குரவராகிய நமசிவாய தேசிகரை அணுகி சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்கலானார். புலவரவர்கள் மேல் கூறிய தனது முக்குரவருக்கும் தான் இயற்றிய மேகதூதக் காரிகை என்னும் நூலின் குரு வணக்கச் செய்யுளில் வணக்கம் கூறி உள்ளார்.

ஆசிரியர் பணி

சி. வை. தாமோதரம்பிள்ளை 1876 ஆம் ஆண்டு ஆவணி 10ம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். இப்பாடசாலையில் முருகேச பண்டிதரும் புலவரும் முறையே தலைமையாசிரியராகவும் உதவியாசிரியராகவும் பணியமர்த்தப்பட்டனர். 1878 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகேச பண்டிதர் தமிழகம் செல்ல நேரிட்டதால் புலவரவர்களை தலைமை ஆசிரியராக பணியமர்த்தினார் தாமோதரம்பிள்ளை. புலவரிடம் தனது பாடசாலைப் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு அரசுப் பணி நிமித்தம் தமிழகம் பயணமானார். ஆறுமுகநாவலர், முருகேச பண்டிதர், கொக்குவில் ச. சபாரத்தினமுதலியார் மற்றும் வித்துவசிரோன்மணி ச. பொன்னம்பலபிள்ளை போன்ற மூத்த அறிஞர்களால், ஆண்டுதோறும் இப்பாடசாலை மாணவர்களின் திறமை சோதிக்கப்பட்டது. இச்சோதனைகளைப் பற்றிய அறிக்கைகள் சென்னைப்பட்டணத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு அனுப்பப்பட்டது. புலவரின் கற்பிக்கும் திறமையால் தமது பாடசாலை வளர்ச்சி அடைவதை, நேரில் பார்த்தும் சோதனையறிக்கைகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி எய்திய தாமோதரம்பிள்ளை புலவருக்கு எழுதிய கடிதம்:-
சென்னை,
பிரமாதீச ௵மாசி ௴ 22 ௳ (1880)
நின்னிரு பங்கண்டு நென்னலென் றன்மன நெக்குருகித்
தன்னிற் கரைந்தது தானென்சொல் கேனேத்துந் தாங்குமொரு
வன்னெஞ் சுளேனெனு மாற்றம்பொய்யாது :டின்ன மிவருனைப் போற்குமார சாமி யெனக்கன்பரே.
இங்ஙனம்,
அன்பன்,
சி. வை. தாமோதரம்பிள்ளை

புலவரின் மாணவர்கள்

ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் புலவரிடம் தமிழ் கற்று தெளிந்தவர்களில் , வித்துவான் சிவானந்தையர்(1873 -1916), தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர், தெல்லிப்பழை சுப்ரமணியபிள்ளை, இளவாலை க. சங்கரப்பிள்ளை, தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை, மாவிட்டபுரம் விசுவநாத முதலியார், கையிட்டி பொன்னையர், சுன்னாகம் மாணிக்கதியாகராச பாண்டிதர், ஏழாலை வி. தம்பையாபிள்ளை, கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். இவர்களுக்குள் ஆழ்ந்த கல்வியறிவும் செய்யுள் புனையுமாற்றலும் நூலுரைகள் இயற்றும் திறமையும் பெரிதும் பொருந்தி விளங்கியவர் சிவானந்தையராவர். இவர் தருக்க சங்கிரக மொழிபெயர்ப்பு, புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனிதுதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மாணிக்கதியாகராசப் பண்டிதர் கதாப்பிரசங்கஞ் செய்வதிலும், தம்பையாபிள்ளை புராண படனஞ் செய்வதிலும் சிறந்து விளங்கினர்.

பிற்கால மாணவர்கள்

1898 ஆம் ஆண்டுக்குப் பின் புலவரிடத்தில் கல்வி கேட்டுத் தெளிந்தவர்களில் பலர் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் புலவரிடத்தில் கற்றவர்கள், சிலர் புலவருடைய வீட்டுக்கு சென்று கற்றவர்களாவர். இவர்களுள் முக்கியமானவர்கள், இளவாலை க. சங்கரப்பிள்ளை, கொக்குவில் சீ. முருகேசயர், கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை, வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன், வண்ணர்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர், புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர், தென் கோவை ச. கந்தையைப் பண்டிதர், உடுவில் வ. மு. இரத்தினேசுர ஐயர், உடுவில் மு. ஜகநாதையர், காரைநகர் ச.பஞ்சாட்சர ஐயர், இருபாலை சி. வேதாரணிய தேசிகர், இருபாலை சி. தியாகராசபிள்ளை, தாவடி மு.பொன்னையாபிள்ளை, நாயன்மாகட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை, நீர்வேலி வி. மயில்வாகனப்பிள்ளை, தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை, வேதாரணியம் தி அருணாசல தேசிகர், சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை, நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார், மட்டுவிற் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முதலியோராவர். இவர்களுக்குள் புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் புலவரைப் போல் ஆழ்ந்த இலக்கண அறிவு கொண்டிருந்தமையால் பிற்காலத்தில் தொல்காப்பியக்கடல் என் அழைக்கப்பட்டவர் மற்றும் புலவரின் மறைவுக்குப் பின் புலவரின் வரலாற்றை எழுதியவரும் இவரே. மேலும் இருபாலை சேனாதிராசா முதலியாரின் வழித்தோன்றலாகிய தென்கோவை கந்தையா பண்டிதர், கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர்களிருவரும் பிற்காலத்தில் ஈழ நாட்டின் சிறந்த தமிழறிஞர்களாக விளங்கினர்.

 

இறுதி நாட்கள்

1922, மார்ச்சு 10 இல் புலவரை சுரமும் வயிற்றுழைவு நோயும் வருத்தத் தொடங்கின. மருத்துவத்தால் நோய் தணியாது, 1922 மார்ச்சு 23 அதிகாலை மூன்றரை மணியளவில் உயிர் துறந்தார். புலவர் நோயுற்ற காலத்தே அங்கு இருந்து பணிவிடை புரிந்த, அவரது மாணவனாகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது பின்வரும் இரங்கற்பாவினால் தனது குரவருக்கு இறுதி வணக்கம் கூறினார்:
செந்தமிழும் ஆரியமுந் தேர்ந்து வீறித் தேயமேலாம் சென்றிலகும் சீர்த்தி ஒன்றே இந்தநில மிசையிருப்ப இணையி லாத எண்ணில்பல கவிதழைத்த இனிய வாயும், அந்தமிலாக் கவிகள்பல எழுதி வைத்த அம்புயநேர் திருக்கரமும், அந்தோ! அந்தோ! இந்தனத்திற் செந்தழலில் உருகி வீய யாமிதனைப் பார்த்திருத்தல் என்ன! என்ன!







Post a Comment

5 Comments

  1. is the topic suitable for this essay?

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வர...,
    நன்றி சகோ. சபீஸ்,
    உங்கள் கேள்வி நியாயமானது. மேற்குறிப்பிட்ட கட்டுரை இரண்டு தலைப்புகளின் கீழ் பிரசுரிக்கட்டுளது.
    நாம் இந்தனை " முட்ட்ரத்து மல்லிகை " கீழ் கொண்டு வருவதன் காரணம், எமது ஊரில் ஒரு நிலையான நீதிமன்றம் இருந்துள்ளது யன்பைதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நோக்கில், குறித்த நபர் எமது மண்ணுக்கு சொந்தமில்ல்த போதும், அவர் சேவை புரிந்த இடம் எமக்கு சொந்தமாக இருந்து இன்று இல்லாத நிலை, இதனை கருத்தில் கொண்டே நாம் இக்கட்டுரையை இதல்லைப்பின் கீழ் பதிவிட்டோம்.

    ReplyDelete
  3. உங்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி, சட்டத்துரையில் இருந்தூம் கூட எமதூரில் ஒரு நிரந்தர நீதிமன்றம் ஒன்று இருந்தது பற்றி நான் இதுவரை தெரியாதவனாகவே இருந்திருக்கின்றேன். எனவே எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் சேவைக்கு. ஆனால் எனது முன்னய பதிவுக்கு காரணம் உங்கள் கட்டுரையில் நாகநாத பண்டிதர் தான் எமது நீதி மன்றத்தில் கடமையாற்றியதாக தெளிவாகவே கூறியிருக்கிறீர்கள். ஆனால் தலைப்பு வித்தியாசமாக இடப்பட்டுள்ளது அதை பற்றித்தான் என்னுடைய முட்பதிவு அமைந்தது. தவறிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. சட்டத்தரணி சபீஸ்,
    உங்கள் கருத்துக்களில் எவ்வித தவறும் இல்லை இங்கு நீங்கள் மன்னுபு கோரும் அவசியமும் இல்லை. ஆரம்பத்தில் நாங்கள் நினைத்தது உங்கள் கேள்விபதிடபட்டுல " தலைப்பு" (Label), பற்றியது என்று. இது தொடர்பாக ஆராய்ந்த போது எமது பதிவில் தான் பூரண பிழையும் உண்டு. தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் எனது நீது மன்றில் சேவை புரிந்த நாகநாத பண்டிதர் பற்றியும், எமதூரில் நீதிமன்றம் இருந்த தகவல் பற்றியும் விரைவில் பதிவிடுவோம்.பதிவில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிகவும்.
    KV
    பிரதம ஆசிரியர்.

    ReplyDelete
  5. சட்டத்தரனி சபீஸ் அவர்களே,
    உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களது கருத்துக்கள் மேலும் வாரவேட்கபடுகிறது.
    KV.

    ReplyDelete