தேசிய ஊடக நிலையத்தின் தலைவரும், முன்னாள் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான
இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகன் ஆதில் பாக்கிர் மாக்கார் (வயது 26)
நேற்று லண்டனில் காலமாகிய நிலையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின்
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் முகமாக கொழும்பிலுள்ள அவரது
இல்லத்துக்கு பல அரசியல் முக்கியஸ்தர்களும், உயர் அதிகாரிகளும் வருகை
தந்தவண்ணமுள்ளனர்.
இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ , மற்றும் அமைச்சர்களான, ஹர்ஷ டி
சில்வா, மஹிந்த சமரசிங்ஹ, மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம், பாலித ரங்கே
பண்டார, கருணாரத்ன பரணவிதான உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை
தந்திருந்தனர்.
அவரின் ஜனாஸா நல்லடக்கத்தை இங்கிலாந்திலேயே மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அங்கு வைத்தியசாலையில் இவரின் ஜனாஸா வைக்கபட்டுள்ள நிலையில் இவரின் ஜனாஸா தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி நல்லடக்கத்துக்கு ஏற்பாடு செய்ய பூரண உதவிகளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவிர இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் அல்லது நாளை இன்ஷா அல்லாஹ் இவரின் ஜனாஸா அங்கு நல்லடக்கம் செய்யப்படும்.
கட்டாரில் வசித்து வரும் இவரின் மூத்த சகோதரர் அசாப் பாக்கிர் மாக்கார் ஜனாஸாவில் கலந்து கொள்ள இங்கிலாந்துக்கு பயணமாகி உள்ளார்.
சட்டக்கல்லூரியில் கல்வியை நிறைவு செய்து உயர் படிப்பிற்காக அண்மையில் பிரித்தானியா சென்ற அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.
தந்தையை போல் தன்னடக்கமும், சிறந்த ஆளுமையும் கொண்ட இளைஞராக விளங்கிய ஆதில் எதிர்காலத்தில் சமூகப்பரப்பில் சிறந்த பணிகளை ஆற்றவல்லவர் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மரணம் நிச்சயம் அடுத்த தலைமுறையினருக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.
எல்லாம் வல்ல இறைவன் நல்லடியார்களோடு அவரைப்பொருந்திக்கொள்ளட்டும்.
நன்றி: Daily Ceylon
0 Comments