-Inamullah Masihudeen-
பொதுவாக உலகில் இடம்பெறுகின்ற அத்தனை உரிமைப் போராட்டங்களும், விடுதலைப் போராட்டங்களும் சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளால் தத்தமது நலன் பேணுவதற்காக காவு கொள்ளப்படுகின்றன.
மத்திய கிழக்கில் மற்றும் முஸ்லிம் உலகில் இடம்பெறும் அத்தனை போராட்டங்களுக்குப் பின்னாலும் சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பனிப்போரும் அவர்களுக்கிடையிலான இணைக்கப்பாடுகளும் களநிலவரங்களை தீர்மானிக்கின்றன.
அதே போன்றே இலங்கையில் தமிழர்களது உரிமைப் போராட்டம் பிராந்திய சக்தியான் இந்தியாவின் நலன்களுக்காகவும், பின்னர் இந்தியாவுடன் ஏற்பட்ட முறுகல் நிலைமைகளுடன் சர்வதேச சமூகம் என்ற பெயரில் மேலைத்தேய சக்திகளின் நலன்களுக்காகவும் காவு கொள்ளப்பட்டமை வரலாறாகும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ மேற்படி இரண்டு தரப்புக்களையும் கையாள்வதற்கு சீனாவின் தலையீட்டை நாடியதும் தற்பொழுது ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் இந்தியா மற்றும் மேலைத்தேய சக்திகளுடன் இருதரப்பினரும் உறவுகளை வலுப்படுத்தி வருவதும் நாமறிந்த விடயமாகும்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலைத்தேய சக்திகளின் ஆதிக்கம் வலுப்பெறுவதை இந்தியா மாத்திரமன்றி சீனாவும்
விரும்புவதில்லை, எனவே இந்தியா இந்திய இலங்கை உடன்படிக்கையை மையமாக வைத்து இலங்கைமீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
அதேவேளை அமெரிக்க தலைமையிலான மேலைத்தேய சக்திகள் சர்வதேச சமூகம் என்ற போர்வைக்குள் இருந்து மனித உரிமைகள் போர்க்குற்றங்கள் அரசியல் தீர்வுகள் என பல்வேறு இராஜ தந்திர பொருளாதார நெருக்கடிகளை இலங்கை மீது பிரயோகித்து வருகின்றன.
மீண்டும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் ஆற்றுப்படுத்துவதற்கான நியாயங்கள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக அவை வலியுறுத்துகின்ற அரசியல் தீர்வை முன்வைக்கின்ற கடப்பாடு ஏற்பட்டிருக்கின்றது இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வொன்றை அல்லது இந்திய இலங்கை உடன்படிக்கையில் முன்மொழியப்பட்ட முழுமையான அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான ஒரு நிலையில் அரசியல் தீர்வு உள்ளடங்கலான புதிய அரசியலைமைப்பு ஒன்றை ஆராய்வதாக சர்வதேச சமூகத்தை நம்பவைக்கின்ற நகர்வுகளை நல்லாட்சி அரசு முன்னெடுத்துள்ளதாக தெரிகின்றது.
இத்தகைய ஒரு திரிசங்கு நிலையில் முஸ்லிம் சமூகத்தை பகடைக்காய்களாக பாவிக்கவேண்டிய தேவை கடந்த காலங்களில் போன்று நல்லாட்சி அரசிற்கு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.
எத்தகைய அரசியல் தீர்விற்கான நகல் யோசனைகளையோ அல்லது அரசியலமைப்பிற்கான நகல் யோசனைகளையோ முன்வைக்காத நிலையில் இணைந்த வடகிழக்கா அல்லது தனித்தனி மாகாண அலகுகளா அல்லது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் தனி அலகா என்ற சர்ச்சைக்குள் தமிழ் முஸ்லிம் சமூகத்தை தள்ளிவிட்டுள்ளதாக ஊகிக்க முடிகின்றது.
தமிழ் தலைமைகள் இணைந்தவடகிழக்கு பற்றி பேச, கிழக்கில் முஸ்லிம் சிவில் சமூகம் இல்லை கிழக்கு மாகாணம் தனித்தே இருக்கவேண்டும் என்றும், இல்லை இல்லை இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் தனி அலகு வேண்டும் என்று பிரதான முஸ்லிம் அரசியல் குழு ஒன்றும் கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
மேற்படி விவகாரத்தில் கிழக்கில்உள்ள சிங்கள சமூகம் மாத்திரமன்றி தென்னிலங்கையில் உள்ள கடும் போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்களும் இராஜதந்திர மௌனம் காக்கின்றமை கருத்தில்கொள்ளப்படல் வேண்டும்.
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை பலிக்கட்டவாக்குகின்ற அரசியல் இராஜதந்திர முஸ்தீபுகளை ஆழ அகலம் தெரியாத வெற்றுக் கோஷங்களுடன் வடக்கிலோ கிழக்கிலோஅரங்கேற்றுவதனை ஒருபொழுதும் முஸ்லிம்சிவில் சமூகமும் புத்திஜீவிகளும் அனுமதிக்க முடியாது.
வடகிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரத்தில் மீண்டும் முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளால் மாற்றப்படும் அபாய உபாயங்கள் தென்படுகின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் பரந்துபட்டு வாழும் முஸ்லிம்கள், வடகிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் புதிய அரசியல் கள நிலவரங்கள், அரசியலமைப்பு மாற்றங்கள் என்பவற்றையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து முஸ்லிம் சமூகம் தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.
மாறாக கடந்த காலங்களில் நாம் மனனமிட்ட சுலோகங்களை கிளிப்பிள்ளைகள் போல் உச்சரிப்பது ஆரோக்கியமான அரசியலாக மாட்டாது. இது குறித்த பரந்து பட்ட கலந்துரையாடல்களை ஆய்வுப்பணிகளை முஸ்லிம் சமூக புத்தி ஜீவிகள் மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டயமாகும்.
தற்பொழுது புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகளை ஆராய்ந்து வரும் தேசிய ஷூரா சபை மேற்படி விவகாரம் குறித்தும் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தலைமைகளை அழைத்து ஆராய வேண்டும்.
குறிப்பாக கிழக்கில் மூன்றுமாவட்டங்களிலுமுள்ள முஸ்லிம் சிவில் தலைமைகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆலோசனைப் பொறிமுறையை கலந்தாலோசிக்காது எந்த அரங்கிலும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மேற்படி விவகாரங்களில் கருத்து வெளியிடுதல் கொள்கைப் பிரகடனம் செய்தல் ஆரோக்கியமான அரசியலாக இருக்கமாட்டாது.
அதேபோன்றே கடந்த காலங்களில் இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் இலங்கை வாழ் முஸ்லிம்களையும் கையாள்வதில் தமிழ் போராளிகளும் தலைமைகளும் விட்டட்ட தவறினை தற்போதைய தமிழ் தேசியக் கூட்டணி விடக்கூடாது என்றும் நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.


0 Comments