Subscribe Us

header ads

பாதாள கோஷ்டியினரை களையெடுக்க 10 குழுக்கள்! உளவுப் பிரிவு, விசேட அதிரடிப்படையும் களத்தில்


கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உக்கிரமடைந்துள்ள பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களம் விசேட திட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது.


அந்தவகையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில், டி.ஈ.ரி. எனப்படும் 10 பிரதேச அமுலாக்கல் குழுக்கள் ஊடாக இந்த பாதாள உலக
குழுக்களை களையெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அதன்படி பாதாள உலகக் குழுக்கள் என அடையாளப்படுத்தப்படும் குழுக்களை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்கு உட்பட்ட கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு, களுத்துறை, பாணதுறை, கல்கிஸை, நுகேகொட, களனி, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விஷேட 10 குழுக்கள் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இந்தவகையில் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சரின் நேரடி மேற்பார்வையில் செயற்படவுள்ளதுடன், குறித்த பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களும் அதற்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள 102 பொலிஸ் நிலையங்கள் ஊடாக அந்த பொலிஸ் நிலையங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் திடீர் திடீரென வீதிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரோந்து பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரோந்து பணிகளில் ஆயுதம் தரித்த தலா குழுவுக்கு 8 பேர் கொண்ட பொலிஸ் படையணி ஈடுபடுத்தப்படுவதுடன் தேவை ஏற்படும் போது மேலதிக பொலிஸ் படையணியும் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதனிடையே சோதனை நடவடிக்கை மற்றும் பாதாள உலக கோஷ்டியினருக்கு எதிரான நடவடிக்கையின் போது விஷேட அதிரடிப்படையினர் மற்றும் உளவுப் பிரிவினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் அவசியமான போது விஷேட அதிரடிப்படையினரை அழைக்கும் அதிகாரம் ஒவ்வொரு நடவடிக்கை குழுக்களுக்கும் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் முன்னெடுக்கும் இத்தகைய குற்றக் குழுக்களை ஒடுக்கும் செயற்பாடுகளின் போது தேவை ஏற்படும் பட்சத்தில் இராணுவத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments