பறந்து கொண்டிருந்த சோமாலிய பயணிகள் விமானமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் அவ்விமானத்தில் பாரிய துளையொன்று ஏற்பட்டுள்ளது.
அத் துளைக்கு ஊடாக பயணியொருவரும் கீழே வீழ்ந்து இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டால்லோ எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட பிளைட் டி3159 எனும் மேற்படி விமானம், நேற்றுமுன்தினம் இரவு சோமாலிய தலைநகர் மொகாடிஷு விலிருந்து டிஜிபௌட்டி நாட்டின் தலைநகர் டிஜிபௌட்டி சிற்றியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
எயார்பஸ் ஏ 321 ரகத்தைச் சேர்ந்த இவ் விமானத்தில் 74 பயணிகள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது திடீரென வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதுடன் தீயும் பரவியது. இதனால், விமானத்தின் பாரிய துளை ஏற்பட்டது. இச்சம்பவதில் இரு பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.
அத்துடன் விமானத்தில் ஏற்பட்ட துளைக்கு ஊடாக பயணி ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நபரின் சடலத்தை கிராமவாசிகள் மீட்டுள்ளனர்.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றபோது அவ்விமானம் 12,000 முதல் 14,000 அடி வரையான உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
பின்னர் அவ்விமானம் அவசரமாக மீண்டும் மொகாடிஷு நகருக்கு திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இது ஒரு குண்டுவெடிப்பாக இருக்கலாம் என தான் கருதுவதாக மேற்படி விமானத்தின் விமானி தெரிவித்துள்ளார்.
சோமாலிய பிரதமர் ஒமர் அப்திர்ரஷீட் அலி ஷார்மார்க்கேயின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், எத்தகைய வெடிப்புச் சம்பவம் என்பது குறித்து முரண்பாடான பல தகவல்கள் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது எனக் கூறியுள்ளார்.
இவ்வெடிப்புக்கான காரணத்தை உடனடியாக கூற முடியவில்லை என டால்லோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹம்மத் இப்ராஹிம் யாசின் தெரிவித்துள்ளார்.
0 Comments