Subscribe Us

header ads

சிறுபான்மையினர்கள் இந்நாட்டில் உரிமையற்றவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இடமாற்றம்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

 கல்முனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இடமாற்றம் சில நாட்களாக அதிக கவனத்தினை பெற்றுள்ளதுடன், அரசியல் நோக்கத்துக்காக முஸ்லிம் காங்கிரசினை விமர்சிக்கும் அதன் எதிரிகளுக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்ததுபோல் உள்ளது.

இப்பணியகம் சாய்ந்தமருதில் அமைந்திருந்தாலும், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள அனைத்து சமூகத்தவர்களும் இதன்மூலமாக பயனடைந்து வருகின்றனர். அத்துடன் கொழும்பு, குருநாகல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக செயற்பாட்டுரீதியில் மூன்றாவது தர நிலையிலும், இதிலிருந்து ஒரு மாதத்துக்கு சுமார் நானூறு பேர்கள் பயிற்சிபெற்று வெளியேறுவதோடு, மூனரை கோடி ரூபாய் வருட வருமானமும் கிடைக்கின்றது. அத்துடன் காரியாலய மாதவாடகயாக 120,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே தனது பணியினை திறன்பட செய்துவந்த இப்பனிமனை திடீரென அம்பாறைக்கு இடம்மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு வந்ததன் பின்பே, சிங்கள பேரினவாதிகளின் பின்னணி செயற்பாடுகள் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. இனவாதிகள் தங்களது இனவாத செயற்பாட்டினை நியாயப்படுத்தும் முகமாக ஏதாவது காரணம் ஒன்றினை முன்வைப்பார்கள். அந்தவகையில் இடப்பற்றாக்குறை காரணமாகவே இதனை நாங்கள் அம்பாறைக்கு கொண்டுசெல்கின்றோம். என்ற காரணத்தினை இங்கே முன்வைத்துள்ளார்கள்.  

ஐ.தே.கட்சிக்கு நிதி வழங்குகின்றவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருங்கிய அமைச்சரான தயா கமகே அவர்களின் இனவாத செயற்பாட்டின் பிரதிபலிப்புத்தான் இந்த இடமாற்றமாகும். அம்பாறையில் இதுபோன்றதொரு காரியாலயம் இருந்தாலும், அங்கு பயிற்சி பெறும்பொருட்டு யாரும் செல்வதில்லை. அது நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. அதனால் அம்பாறை காரியாலம் இழுத்து மூடப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.  

எனவேதான் அம்பாறை காரியாலயத்தின் செயற்பாட்டுக்கு தடையாக இருக்கின்ற கல்முனை காரியாலயத்தை மூடிவிட்டு, அதனை அம்பாறைக்கு கொண்டுவருவதுதான் திட்டமாகும். இதனை நடைமுறை படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் அத்தியட்சகரும் (Working Director), தனது நெருங்கிய சகாவுமான உபுல் தேசப்பிரிய அவர்களுக்கு அமைச்சர் தயா கமகே அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அமைச்சரின் இந்த ஆலோசனைக்கு அமையவே உபுல் தேசபிரிய அவர்கள் தனது பணியினை மேற்கொண்டார்.

கல்முனை அஷ்ரப் ஜாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாய் பணத்தினை அங்கு செல்லவிடாமல் தடுத்து வேறொரு ஆதார வைத்தியசாலைக்கு அப்பணத்தினை திருப்பியிருந்தேன், என்று கடந்த பொதுதேர்தலுக்கு முன்பு அமைச்சர் தயா கமகே கூறிய இனவாத செயற்பாட்டினை இங்கு நினைவூட்டுகின்றேன்.

இந்த இடமாற்றத்தினை தடுக்கும் பொருட்டு துரிதமாக செயற்பட்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற வளாக கட்டிடத்தில் இப்பநியகத்துக்கு பொறுப்பான அமைச்சர் தலதா அதுகொறல்லவை சந்தித்து இடமாற்றத்தினை ரத்து செய்யும்படி வேண்டுகோள்களை விடுத்திருந்தனர். ஒரு அரசியல் கட்சி என்றவகையில் தனது கடமையினை செய்தனர்.

அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட குறித்த அமைச்சர், முஸ்லிம் காங்கிரசுடன் தான் உடன்பட்டதற்கு அமைய இடமாற்றத்தினை ரத்து செய்யும்படி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாதது யாருடைய குற்றம்?

இடமாற்றத்தினை தடுக்க இறுதிவரைக்கும் முயற்சித்த முஸ்லிம் காங்கிரசாரின் குற்றமா? அல்லது வாக்குறுதியளித்துவிட்டு ஏமாற்றிய குறித்த அமைச்சரின் குள்ளத்தனமா? அமைச்சர் தயாகமகேவினை பகைத்துக்கொள்ள குறித்த அமைச்சருக்கு துணிவில்லையா? அல்லது மு. காங்கிரசை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளாரா? மொத்தத்தில் இது பேரினவாத செயற்பாடா?   

குறித்த அமைச்சரின் வாக்குறிதி நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் கல்முனை காரியாலயத்தின் அனைத்து உபகரணங்களையும் ஏற்றி செல்வதற்காக கனரக வாகனங்கள் ஸ்தலத்துக்கு வந்தபோது, அதனை தடுத்து நிறுத்தும் பணியில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் களத்துக்கு விரைந்து, ஏற்றிச்செல்ல வந்தவர்களை விரட்டியடித்ததோடு அக்காரியாலயத்துக்கு பூட்டினை பூட்டி பாதுகாத்தனர்.

ஆனால் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்கு அமைய கல்முனை பொலிசார் ஸ்தளத்துக்கு விரைந்தனர். பின்பு பொலிசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கணனிகள் மட்டும் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. பொலிசாரைக் கண்டதும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பின்வாங்காது வாக்குவாதப்பட்டனர். இருந்தாலும் நிராயுதபாணிகளான மு. காங்கிரஸ் போராளிகளின் போராட்டத்தினால் ஒருசில கணணி உபகனங்களை தவிர வேறு எதனையும் கொண்டுசெல்ல முடியவில்லை. இறுதியில் அக்காரியாலயம் பூட்டிய நிலையில் காணப்படுகின்றதோடு இப்பிரச்சினை இன்னும் முடிவில்லாத நிலையில் உள்ளது.

எடுத்ததுக்கெல்லாம் முஸ்லிம் காங்கிரசினையும், அதன் தலைமையினையும் விமர்சிக்கின்றவர்கள், பிரச்சினைக்கு காரணாமாக இருந்த இனவாதிகளை ஏன் விமர்சிக்கவில்லை? உண்மை நிலவரம் என்னவென்று அறியாமல் கண்ணை மூடிகொண்டு தங்களது வங்குரோத்து அரசியலுக்காக தான் சார்ந்த கட்சி நலனுக்காக துதிபாடுகின்றனர். இப்படிப்பட்டவர்களால் தான் சார்ந்த கட்சி ஊடாக ஏன் இதனை தடுத்து நிறுத்த முன்வரவில்லை ?

ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அல்ல. முஸ்லிம் காங்கிரஸ் இல்லாவிட்டால் இந்த ஆட்சி கவிளப்போரதுமில்லை. பேரினவாத சிங்கள அரசாங்கங்கள் தொடர்ந்து காலத்துக்கு காலம் பச்யாகவும், நீலமாகவும் தங்களை நிறம் காட்டிக்கொண்டு சிறுபான்மை சமூகத்தின்மீது பேரினவாத செயற்பாடுகளையும், அடக்குமுறைகளையும் அரங்கேற்றியதே வரலாறாகும்.    

சிங்கள பேரினவாதிகளின் இந்த அடிமைத்தனத்துக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள். ஆனால் நாங்கள் போராடவில்லை. இதுதான் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கு இடையிலுள்ள வித்தியாசமாகும். 

இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம். நாளை எந்த பணியகமோ தெரியாது. நாங்கள் சலுகைகளை மட்டும் பெற்றுக்கொண்டு, உரிமைகளற்ற அடிமை சமூகமாக இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டு வருகின்றோம். எங்களது உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை. பேரினவாதிகள் எதனை நினைக்கின்றார்களோ அதனை நிறைவேற்றுகின்றார்கள்.

எனவே எங்களது கையைக்கொண்டு எங்களது கண்ணை குத்துவதனை போல முஸ்லிம் காங்கிரசினை மட்டும் அற்ப அரசியலுக்காக தூற்றுவதனை விடுத்து, உண்மை நிலையினை அறிந்துகொள்ளுவதோடு நாம் இந்த நாட்டில் உரிமையுள்ள சமூகமாக வாழ்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு எமது உரிமைக்காக போராடுவோம். 

Post a Comment

0 Comments