முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகள் துலாஞ்சலி பிரேமதாச , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
தன்னைப் பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள சேறுபூசும் நடவடிக்கை தொடர்பில் கவலையடைவதாக அவர் மேற்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, துலாஞ்சலி தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அச்சந்திப்பின் போது போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அவற்றுக்கு பதிலளித்துள்ள துலாஞ்சலி பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு தாங்கள் காரணமில்லையென கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது தோல்விக்கு காரணம் அவரது குடும்ப அங்கத்தினர்களின் செயற்பாடுகளே எனவும், இதனால் ஆதாரமில்லாத காரணங்களை முன்னிறுத்தி சேறுபூசும் பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ளுமாறு துலாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையான ரணசிங்க பிரேமதாச எச்சந்தர்ப்பத்திலும் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபட வழிகாட்டவில்லையெனவும் துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னைப்பற்றி கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments