Subscribe Us

header ads

எங்கள் உம்மம்மா…!!!

– பாத்திமா –
முன்சேலை கட்டி மொட்டாக்கு போட்டு குடுகுடு நடை போடும் எங்கள் உம்மம்மா…
தப்பாது உதட்டுக்கு வெற்றிலைச் சாயம் போட்டுக்கொள்ளுவா எங்கள் உம்மம்மா…
பார்க்கத்தான் குடுகுடு நடை என்றாலும் பேச்சு பலே பலே…!!!
பத்துடன் ஒன்றாக பதினொருவரைப் பெற்று இரண்டு போக மற்றவரை வளர்த்து எண்பதுகளில் இன்று குழந்தையாய் போன எங்கள் உம்மம்மா …
தன் நவமணிகளும் ஒன்றாய் கூடி மகிழ்வதில் அகமகிழும் அவ நிலா முகம் அம்மம்மா…!!!
ஆரத்தழுவி “ஒனய கண்டு கன நாள் ஆகுது மக்கள்” என போனவுடன் வெற்றிலை வாயுடன் தட்டுத்தடுமாறி எச்சிலுடன் சொந்தம் கொண்டாடுவா எங்கள் உம்மம்மா…
உச்சி முதல் பாதம் வரையான அத்தனை வியாதிகளையும் ‘சார்..சார்..’ என தெரிந்த இங்கிலீசால் டாக்டரை தலைசொறிய வைப்பதில் கிள்ளாடி எங்கள் உம்மம்மா…
O/L , A/L , 9A , 3A என எதனையும் அறியாதபோதும் “என்ட புள்ள நல்ல முறையில பாசாகிறனும்” என இருகரம் ஏந்தி துஆ செய்வதில் தனக்கென தனிக் கலையை வைத்திருப்பார் எங்கள் உம்மம்மா…
பள்ளிக்கூட வாசனையைக் கூட அறியாத போதும் ‘போகமாட்டேன்’ என அடம்பிடித்தால் ஓலை கொண்டு அடித்து விரட்டுவதில் எங்கள் உம்மம்மா மனோரம்மா…
“அன்ன்ன்ன அப்புடித்தான் மக்கள்” என கூறிக்கூறியே எங்களை அநேக வேலைகள் செய்ய வைப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்…
எண்பதுகளைத் தாண்டிய குடுகுடு வயது கிழவி வயதாயினும் தடியின்றி நடைபோடுவா எங்கள் உம்மம்மா…
மூன்று தலைமுறைக் கடந்தும் நிலைத்து நிற்கும் எங்கள் உறவுகளின் coverage எங்கள் உம்மம்மா…
கட்டித் தழுவி உச்சிமுகர. மணிக்கணக்கில் கதைகள் பேச சொர்க்கத்திலும் உன் சொந்தம் வேண்டி பிரார்த்திக்கிறேன்…
யா அல்லாஹ் …! உள்ளத்தில் ஈமானியுறுதியும் உடலில் திடகாரோக்கியமும் கொண்டு வாழ வைத்து உன் திருப்பொருத்தம் பெற்ற கூட்டத்தில் சேர்த்தருள்…!!! ஆமீன்

Post a Comment

0 Comments