Subscribe Us

header ads

எம்.கே.டி.எஸ் இன் இடத்திற்கு அசாத் சாலி ?

காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன தனது 69ஆவது வயதில் நேற்று காலமானார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள தேசிய பட்டியல் வெற்றிடத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலிக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து அவரது வெற்றிக்கு உழைத்த அஸாத் சாலி, இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்குறுதியின் அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றிக்கு உழைத்தார்.
என்றாலும் இறுதி நேரத்தில் தனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மீறிவிட்டதாக அஸாத் சாலி ஊடகவியலாளர் சந்திப்புக்களில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை அஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாமை மிகவும் மனவேதனை அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்பொழுது வெற்றிடமாகக் காணப்படும்  எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் இடத்திற்கு அஸாத் சாலியை நியமிப்பதற்கு உயர்மட்ட அழுத்தங்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் இன்று செவ்வாய்க்கிழமை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன் காரணமாக தற்பொழுது ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் இரு தேசிய பட்டியல் ஆசனங்கள் வெற்றிடமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments