Subscribe Us

header ads

மயிலைப் பிடித்து கூட்டில் அடைக்கப் போவது றிஷாதா? வை.எல்.எஸ் ஹமீதா..?

கடந்த 17-01-2016ம் திகதி சனிக்கிழமை அ.இ.ம.காவின் பேராளர் மாநாடு குருநாகலில் நடைபெற்றது.இம் மாநாட்டை அமைச்சர் றிஷாத் நடத்தியதற்கான பிரதான காரணம் அ.இ.ம.காவின் தலைமையோடு முரண்பட்டு நிற்கும் வை.எல்.எஸ் ஹமீதினால் கட்சிக்கு ஏற்படத்தக்க பாதிப்பை இல்லாதொழித்து கட்சியை தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகும்.மு.காவும் தங்களது செயலாளர் மூலம் தங்களது கட்சிக்கு ஏற்படப்போகும் பாதிப்பைக் கட்டுப்படுத்தவே கடந்த பேராளர் மாநாட்டை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.மு.கா தங்களது பொதுச் செயலாளருக்குரிய முக்கிய அதிகாரங்கள் சிலவற்றை உயர்பீட செயலாளருக்கு வழங்கி அவரை அரசியல் பதவி எதனையும் வகிக்க முடியாதவாறு யாப்பை மாற்றி இருந்தது.இது போன்ற ஒரு வழி முறையைத் தான் அ.இ.ம.காவும் தங்களது செயலாளர்களைக் கட்டுப்படுத்த செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த கட்சியின் செயலாளருக்கும் கட்சிக்குமிடையில் அரசியற் பதவி விடயங்களிலேயே முரண்பாடுகள் வலுக்கும்.எனவே,செயலாளர் பதவியில் இருக்கும் ஒருவர் அரசியற் பதவி வகிக்க முடியாதவராக யாப்பை மாற்றும் போது பொதுச் செயலாளர் பதவியினால் கட்சிக்கு ஏற்படும் பாதிப்புக்களை இயன்றளவு கட்டுப்படுத்தலாம்.
இப் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை 17-01-2016ம் திகதி இடம்பெற்று முடிந்தது.இதில் சுமார் 1000 அளவிலான அ.இ.ம.காவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். 500 பேரைத் தான் எதிர்பார்த்தோம் ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டமை எங்களுக்கு மகிழ்வைத் தருகிறது எனக் கூறி அ.இ.ம.காவினர் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக் கட்சியானது 500 பேர் எனும் மிகச் சிறிய எண்ணிக்கையைத் தான் எதிர்பார்த்தோம் எனக் கூறுவதானது அவர்கள் தங்கள் உள்ளத்தில் தங்கள் கட்சிக்கு கணித்து வைத்துள்ள மக்கள் செல்வாக்கை சிறுமைப்படுத்துகிறது.குருநாகல் மாவட்டத்தில் அ.இ.ம.காவின் வேட்பாளர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 53000 வாக்கைப் பெற்றிருந்தார். இம் மாவட்டத்திற்கு அயல் மாவட்டமான அனுராதபுரத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வரச் சாத்தியமல்ல எனக் கூறப்பட்ட நிலையில் அ.இ.ம.காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அயல் மாவட்டம் என்பதால் அனுராதபுரமும் இக் குறித்த நிகழ்வில் ஆதரவாளர்களை ஒன்று கூட்டுவதில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா ஆசனங்கள் எதனையும் பெறாத போதும் 33 000 வாக்கைப் பெற்றிருந்தது.இப்படி இருக்கையில் 1000 பேரை மாத்திரமே ஒன்று கூட்ட முடிந்தமை கட்சியின் மீது மக்களுக்கு அவ்வளவு அக்கரை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.எனவே,இதனை ஒரு சாதனையாக ஒரு போதும் குறிப்பிட முடியாது.
மு.காவில் இருந்து அமைச்சர் றிஷாத் தலைமையிலான ஒரு குழு வெளியேறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தோற்றுவித்தமைக்கு அவர்கள் முன் வைத்த பிரதான காரணம் தலைமையின் தான் தோன்றித் தனமான செயற்பாடுகளாகும்.இதன் காரணமாக அ.இ.ம.காவை தலைமைகளின் தான் தோன்றித் தனமான செயற்பாடுகளில் இருந்து சீராக பயணிக்கச் செய்ய ஏழு பேர் கொண்ட ஷூரா சபையை நியமித்து அவர்கள் அனைவரும் சேர்ந்தே எந்த ஒன்றிற்கும் முடிவெடுக்குமாறு அ.இ.ம.காவை கட்டமைத்திருந்தனர்.தலைமைத்துவத்தை அமைச்சர் றிஷாத் அலங்கரித்தாலும் அ.இ.ம.காவின் யாப்புப் பிரகாரம் எதற்கும் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கில்லை.தேசியப்பட்டியல் வழங்காமையினாலே வை.எல்.எஸ் ஹமீத் அ.இ.ம.காவுடன் முரண்பட்டு நிற்பதாக பலரும் கூறுகின்ற போதும் தலைமைத்துவத்தின் தன்னிச்சையான செயற்பாட்டையே தனது வெளியேற்றத்திற்கான காரணமாக அவர் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் யாப்பு மாற்றத்தின் மூலம் அவ் ஏழு பேர் கொண்ட குழு 25 பேர் கொண்ட குழுவாக மாற்றப்பட்டுள்ளது.நபர்கள் அதிகரிக்கும் போது ஒரு விடயத்தில் ஒருமித்த கருத்திற்கு வந்து தீர்க்கமான முடிவெடுப்பது கடினமாகும்.மு.கா உயர்பீட கூட்டங்களை எத்தனை முறை கூட்டினாலும் இறுதியில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைக்கு செல்லுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்.மேலும்,கடந்த காலங்களில் அ.இ.ம.காவின் ஷூரா சபையில் இருந்த ஏழு நபர்களும் அமைச்சர் றிஷாத்திற்கு கட்டுப்படுபவர்களுமல்ல.இவர்கள் அமைச்சர் றிஷாத்திற்கு சரி சமனாக நின்று பேசக் கூடியவர்கள் என்பதால் இவர்கள் ஏழு பேரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் அமைச்சர் றிஷாத்திற்கு சார்பாக அமையும் என சிறிதும் எதிர்பார்க்க முடியாது.தற்போது இக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் எதிர்கால பதவிகளை மையப்படுத்தி அமைச்சர் றிஷாத்தை தேசியத் தலைவர் எனப் புகழ்பவர்கள்.இவர்கள் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவுகள் அமைச்சர் றிஷாத்திற்கு சார்பானதாகவே அமையும்.அ.இ.ம.காவானது பூரணமாக அமைச்சர் றிஷாத்திற்கு சார்பானதாக மாறிக்கொண்டிருக்கின்றது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.கடந்த காலங்களில் ஷூரா சபையில் இருந்த ஏழு நபர்களில் நான்கு பேர் கட்சியுடன் முரண்பட்டு நிற்பதால் ஷூரா சபையை மீளக் கட்டமைக்க வேண்டிய தேவையும் அமைச்சர் றிஷாத்திற்கு உள்ளது.தற்போது அ.இ.ம.காவில் சம பலமுள்ள பலரும் இணைந்துள்ளதால் இச் சபையில் குறித்த வெளியேறியவர்களின் வெற்றிடத்திற்கு யாரை இணைப்பது யாரை விடுவது என்பது சிக்கலான ஒரு விடயமாகும்.இதனை சமாளிக்க குறித்த சபையின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் ஒரு தீர்வாக அமையலாம்.
இலங்கையில் உள்ள எந்தக் கட்சிக்குமில்லாத விசேடமொன்று முஸ்லிம் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா ஆகிய கட்சிகளுக்கு உள்ளன.இக் கட்சிகளிலுள்ள பிரதித்தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.மு.காவில் நான்கு பிரதித் தலைவர்கள் உள்ளனர்.மு.காவுடன் சரி நிகராக போட்டி போடும் அ.இ.ம.கா இவ் பிரதித் தலைவர் விடயத்தில் மு.காவுடன் போட்டி போடும் நிலைக்கு வந்துள்ளது.கடந்த பேராளர் மாநாட்டில் மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப் பிரதித் தலைவர் நியமனத்தில் அ.இ.ம.காவுடன் முரண்பட்டு நிற்கும் வை.எல்.எஸ் ஹமீத் நியமிக்கப்பட்டமை இதிலுள்ள விசேடமாகும்.இது எதிரியையும் அரவணைத்து செல்லும் போக்கை எடுத்துக் காட்டுகிறது.எனினும்,அரவணைத்துச் செல்ல நினைத்தாலும் ஆபத்தை விலை கொடுத்து வாங்க யாரும் விரும்பமாட்டார்கள்.இதன் காரணமாக வை.எல்.எஸ் ஹமீதிற்கு வழங்கப்பட்டுள்ள குறித்த பதவியானது அதிகாரமற்ற கௌரவத்திற்குரியதாகவே இருக்கும் என்பதை யாவரும் ஏற்பர்.ஏனைய பிரதித் தலைவர்களான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்,பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் ஆகியோருக்கும் இப் பதவியை வழங்கி வை.எல்.எஸ் ஹமீதின் இடத்தில் வைத்துப் பார்ப்பதானது,அவர்களையும் அமைச்சர் றிஷாத் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றாரா என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.மேலும்,அ.இ.ம.காவினர் வை.எல்.எஸ் ஹமீதை கெளரவிக்க நினைத்தால் கட்சிக்குள் புதிதாக இணைந்து கொண்ட மற்றைய இருவருக்கு சமனாக வைத்து மதிப்பது பொருத்தமானதல்ல.மாறாக அவரின் தனித்துவம் உறுதி செய்யப்படும் விதத்தில் கௌரவித்திருக்க வேண்டும்.பல தடவைகள் அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீதிடம் பேராளர் மாநாட்டைக் கூட்ட கோரிய போதும் வை.எஸ்.எஸ் ஹமீத் அதற்கு சரியான பதில் வழங்கவில்லை என அமைச்சர் றிஷாத் குற்றம் சாட்டியுள்ளார்.இம் மாநாட்டைக் கூட்டி வை.எல்.எஸ் ஹமீத் தன் பக்கம் கட்சியை வளைத்துப் போட்டிருக்கலாம் அல்லது அமைச்சர் றிஷாதிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு வேறு நடவடிக்கைகளை வை.எல்.எஸ் ஹமீத் மேற்கொண்டிருக்கலாம்.இது எதனையும் செய்யாதிருப்பதன் மர்மம் துலங்கப்படாத ஒன்றாகவே உள்ளது.
அ.இ.ம.கா முறையற்ற விதத்தில் கட்சியின் யாப்பிற்கு முரணாக பேராளர் மாநாடு நடத்தப் போவதாக வை.எல்.எஸ் ஹமீத் பேராளர் மாநாடு நடக்க முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் இவ் விடயத்திலும் அமைச்சர் றிஷாத் கட்சியின் யாப்பு பற்றி தெளிவில்லாமல் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டி இருந்தார்.இக் குறித்த மாநாடு நடைபெற்று முடிந்ததன் பிறகு வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் கூறி இருந்தார்.ஏன் இவரால் குறித்த நிகழ்வை நீதி மன்றத்தை நாடி முன் கூட்டியே தடுக்க இயலாது போனது என்ற வினா எழுகிறது.இங்கு தான் அமைச்சர் றிஷாத் தனது சாதூரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அதாவது குறித்த நிகழ்வை நடத்தப்போவதாக அப் பேராளர் மாநாடு ஏற்பாடாகி இருந்த தினத்திற்கு முன் வந்த வியாழக்கிழமையே அ.இ.ம.கா வெளியிட்டிருந்தது.அறிவிப்பைத் தொடர்ந்து வந்த வெள்ளி,சனி ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் குறித்த தினத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.ஊடகக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் அமைச்சர் றிஷாத்தின் அணியினர் இதனைப் பகிரப்படுத்தாது பாதுகாத்தமை ஏதோ ஒன்றை நோக்கிய காய் நகர்த்தல் என்பதை சுட்டிக்காட்டுகிறது.ஒரு வழக்குத் தாக்கலை எடு புடி எனவும் செய்து விட முடியாது.ஒரு குறித்த வழக்குத் தாக்கலை செய்ய சில ஆதரங்களையும் தயார் செய்ய வேண்டும்.மேலும்,ஆதாராபூர்வமான சுட்டிக் காட்டல்கள் இன்றி வழக்கும் பதிவு செய்ய முடியாது.இவ்வாறான காரணிகள் குறித்த நிகழ்வுக்கெதிரக நீதி மன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில் வை.எல்.எஸ் ஹமீதிற்கு இருந்த சிக்கல்களாகும்.
வை.எல்.எஸ் ஹமீத் அ.இ.ம.கா கட்சியுடன் முரண்பட்ட சில நாட்களில் அவரை அ.இ.ம.காவில் இருந்து அமைச்சர் றிஷாத் தற்காலிகமாக நீக்கி இருந்தார்.நீக்கிய ஒருவரை கட்சிக்குள் மீள இணைக்காமல் பதவி வழங்கி கௌரவித்து மீள வருவார் என காத்திருக்கும் புதுமை அரசியலை என்னவென்று சொல்லத் தெரியவில்லை.அவரை தற்காலிகமாக நீக்கிய பிறகு அமைச்சர் றிஷாத்தினால் இரு தடவைகள் அ.இ.ம.காவின் செயலாளர்கள் என இருவர் நியமிக்கப்பட்டும் இருந்தனர்.இச் செயலாளர் நியமனங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியற்றது என தேர்தல் ஆணையாளரே கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் போது இவ் விடயத்தை தேர்தல் ஆணையாளருடன் முடித்துக் கொண்ட வை.எல்.எஸ் ஹமீத் இப் பேராளர் மாநாடு விடயத்தை அவ்வாறு அனுகாமல் நீதி மன்றம் சென்றுள்ளார்.இது ஒரு செயலாளரை நியமிக்கும் அ.இ.ம.காவின் யாப்பு கூறும் விதத்தில் அமைச்சர் றிஷாத் செயற்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.அ.இ.ம.காவின் யாப்பை வரைந்ததில் வை.எல்.எஸ் ஹமீதிற்குரிய பங்கை அவ்வளவு இலகுவில் அ.இ.ம.காவினரால் மறந்து விட முடியாது.அமைச்சர் றிஷாத் இரு தடவைகள் தனது கட்சிக்கு செயலாளரை நியமித்து மூக்குடைந்தமையானது தான் தலைமை வகிக்கும் கட்சியின் யாப்பு விடயத்தில் சற்றேனும் தெளிவில்லாமல் இருந்துள்ளதை சுட்டிக் காட்டுகிறது.தற்போது பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு மாற்றம் நிகழப்போகிறது.தனது கட்சியின் யாப்பில் என்ன உள்ளது என அறிந்து செயலாற்ற முடியாத ஒருவர் இவ் அரசியலமைப்பு விடயத்தில் எந்தளவு முஸ்லிம்களுக்கெதிரான விடயங்களை அறிந்து செயலாற்றுவார் என்பது கேள்வியில் முற்றுப் பெறும் ஒரு விடயமாகும்.
இது தொடர்பாக வை.எல்.எஸ் ஹமீத் தான் கூறியது போன்று 21-01-2016ம் திகதி வியாழக்கிழமை அ.இ.ம.காவைச் சேர்ந்த 15 நபர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.குறித்த வழக்குத் தாக்கல் செய்த போது அம் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட குறித்த செயலாளரை செயற்பட முடியாதவாறு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தற்காலிகத் தடையுத்தரவை (adjoining injunction) நீதிமன்றத்திடம் கோரி இருந்தார்.இவரது இக் கோரிக்கையை நீதி மன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.வை.எல்.எஸ் ஹமீத் கோரிய குறித்த தடை உத்தரவானது (adjoining injunction) அவசரமான நிலைமைகளின் போதே வழங்கப்படும் ஒன்றாகும்.இவ் மாநாடு நடை பெறுவதற்கு முன்பு இவ் வழக்குத் தாக்கலை வை.எல்.எஸ் ஹமீத் செய்திருந்தால் அவ் மாநாட்டிற்கு எதிராக நீதி மன்றத்தினால் இக் குறித்த தற்காலிக தடை உத்தரவு (adjoining injunction) வழங்கப்பட்டிருக்கலாம்.இத் தற்காலிக தடை உத்தரவு (adjoining injunction) மறுப்பினை அ.இ.ம.காவைச் சார்ந்தோர் குறித்த வழக்கையே நீதி மன்றம் நிராகரித்தது போன்று ஒரு ஊடக மாயையை ஏற்படுத்தி இருந்தனர்.ஒரு குறித்த வழக்கு நீதி மன்றத்தினால் பூரணமாக நிராகரிக்கப்பட்டால் மீண்டும் அதனை எதற்கு அவ் நீதி மன்றம் விசாரிக்க வேண்டும்? என்ற வினாவை எழுப்பினால் ஒரு சாதாரண மகனாலும் இக் குறித்த விடயத்தில் பொதிந்துள்ள உண்மையை பெற்றுக் கொள்ளலாம்.
அக் குறித்த தினத்தில் நீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது இத் தற்காலிக தடையுத்தரவே (adjoining injunction).இக் குறித்த தற்காலிக தடை உத்தரவானது (adjoining injunction) குறித்த பிரதிவாதிகள் இன்றி வழங்கப்படும் ஒன்றாகும்.அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீத் வழக்குத் தாக்கல் செய்யப்போவதை ஏதோ ஒரு விதத்தில் அறிந்து கொண்டு ஐந்து வழக்கறிஞர்களையும் அழைத்துச் சென்று இத் தற்காலிக தடையுத்தரவை (adjoining injunction) தடுக்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.எனவே,இத் தடை உத்தரவை பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களின் வாதத் திறமையினால் சாதித்த ஒன்றாக குறிப்பிட முடியாது.வை.எல்.எஸ் ஹமீத்திற்கு சமனாக கம்பெடுத்தாட ஐந்து வழக்கறிஞர்களை அ.இ.ம.கா அழைத்துச் சென்றமை வை.எல்.எஸ் ஹமீத் எந்தளவு வாதத் திறமை மிகுந்தவர்,அவர் பக்கத்து நியாயம் எந்தளவு வலுவானது என்பதையும் அறிந்து கொள்ளச் செய்கிறது.
இக் குறித்த தற்காலிக தடை உத்தரவானது (adjoining injunction) வழங்கப்பட்டாலும் சரி வழங்கப்படாவிட்டாலும் சரி வழக்குத் தாக்கலை குறித்த பிரதிவாதிகளுக்கு அறிவிக்கும் நோட்டிஸை அனுப்ப நீதி மன்றம் உத்தரவிடும்.தற்போது இதனையே இவ் வழக்கில் நீதி மன்றம் செய்துள்ளது.வை.எல்.எஸ் ஹமீத் தனது வழக்குத் தாக்கலில் பிரதிவாதிகளாக குறிப்பிட்ட 15 நபர்களுக்கும் நீதி மன்றம் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த தற்காலிக தடை உத்தரவானது (adjoining injunction) வழக்கப்பட்டிருந்தால் குறித்த பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தினால் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு 14 நாட்களுக்குள் அத் தடை உத்தரவை விசாரித்து அதனை நீக்குவதா இல்லையா என்ற முடிவை நீதி மன்றம் எடுத்திருக்கும்.இதன் போது பிரதிவாதிகளின் பக்கம் நியாயம் இருப்பதாக நீதி மன்றம் கருதும் பட்சத்தில் அத் தடை உத்தரவை நீக்கும்.வழக்கு தாக்கல் செய்தவர் பக்கம் நியாயம் இருப்பின் அத் தடைய இடைக்கால தடை உத்தரவாக (interim injunction) மாற்றும்.எதிர்வரும் மார்ச் 23ம் திகதி இது பற்றி நீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் செவியுற்று அதிலும் இடைக்கால தடை யுத்தரவை (interim injunction) பிறப்பிக்கலாம் அல்லது பிறப்பிக்கமலும் விடலாம்.எனினும்,இதன் போதும் வழக்கு பூரணமாக நிறைவுற்றதாக குறிப்பிட முடியாது.இடைக்கால தடை உத்தரவு (interim injunction) வழங்கப்பட்டாலும் சரி வழங்கப்படாவிட்டாலும் சரி வழக்குத் தொடரும்.இறுதியாக நீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் செவியுற்று அதிலேயே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரும்.இதன் போது பிரதிவாதிகளின் பக்கம் நியாயம் இருப்பின் வழக்கை தள்ளுபடி செய்யும்.வழக்குத் தாக்கல் செய்தவர் பக்கம் நியாயம் இருப்பதாக கருதும் பட்சத்தில் நீதி மன்றத்தினால் தடை உத்தரவு (order of injunction ) பிறப்பிக்கப்படும்.இதன் பிற்பாடே யார் பக்கம் வெற்றி என்பதை அறிந்து கொள்ள முடியும்.தற்காலிக தடை உத்தரவானது (adjoining injunction) மறுக்கப்பட்டமையை வைத்து தாங்கள் வெற்றி பெற்றதாக கூப்பாடு போடுவது அறியாமையின் வெளிப்படே தவிர வேறில்லை.
இவ் பேராளர் மாநாடு நடை பெற்று ஒரு வாரம் கழிந்து விட்ட பிறகும் தேர்தல் ஆணையாளர் வை.எல்.எஸ் ஹமீதை குறித்த செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக எதுவித அறிவித்தலையும் விடுக்காமை குறிப்பிடத்தக்கது.ஒரு கட்சியில் நிகழும் மாற்றங்களை குறித்த கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.இதனை புதிய செயலாளர் அறிவிப்பதா அல்லது பழைய செயலாளர் அறிவிப்பதா என்ற சட்டச் சிக்கல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் இவ் வழக்கின் இறுதித் தீர்ப்பு வை.எல்.எஸ் ஹமீதிற்கும் அமைச்சர் றிஷாத்திற்குமிடையில் காணப்படும் பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்போகிறது.மிகக் குறுகிய காலத்தினுள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வர உள்ளதால் அதற்கிடையில் கட்சியை மீட்டு தனது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டிய தேவை அமைச்சர் றிஷாத்திற்கு உள்ளது.இன்று அ.இ.ம.கா பெற்ற வாக்குகள் அனைத்தும் அமைச்சர் றிஷாத்திற்காகவும் அதிலுள்ள நபர்களின் செல்வாக்குகளுக்காகவும் அளிப்பட்டவையாகும்.மயில் என்ற சின்னத்திற்காகவோ அ.இ.ம.கா என்ற பெயரிற்காகவோ அளிக்கப்பட்டதல்ல.இக் கட்சியை வை.எல்.எஸ் ஹமீத் தன் வசப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்,முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் ஆகியோருடன் இன்னும் பலரையும் ஒன்றிணைத்து இக் கட்சியை நடத்திச் செல்லப் போவதாகவும் ஒரு கதை உலா வருகிறது.இக் கட்சியை அமைச்சர் றிஷாத் கை நழுவ விடும் போது அது அவரின் சாணக்கியத்தை மக்கள் முன் கேள்விக்குட்படுத்தும்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறையில் தனித்து களமிறங்க தீர்மானித்தது போன்ற அதிரடித் தீர்மானங்களை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எடுக்க முடியாத நிலைக்கு அமைச்சர் றிஷாத் தள்ளப்படுவார்.வை.எல்.எஸ் ஹமீத் இதில் வெற்றி பெறும் போது வெற்றிக் களிப்பில் தங்களது அடுத்த எட்டை அதீத நம்பிக்கையோடு எடுத்து வைப்பார்.இதிலிருந்து வியூகம் அமைத்து தன் சாம்ராஜ்ஜியத்தை மீளக் கட்டமைக்க அமைச்சர் றிஷாத்திற்கு சில காலம் எடுத்தாலும் மீளக் கட்டமைப்பதற்கான சாதகமான அடித்தளம் அவருக்குண்டு.
குறிப்பு: இக் கட்டுரை 27/01/2016ம் திகதி புதன் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Post a Comment

0 Comments