கடந்த சில தினங்களாக நாடு பூராகவும் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு தீப்பெட்டிகளை விநியோகிக்காமையே இதற்கான பிரதான காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தீப்பெட்டியைக் கொள்வனவு செய்யவரும் வாடிக்கையாளர்களுக்கு தீப்பெட்டிகளுக்கு பதிலாக லயிட்டர்களை விற்பதாகவும், அந்த லயிட்டர்களின் விலைகள் 25 ரூபாயிலிருந்து 40 ருபாய் வரைக்குள் இருப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தையில் லயிட்டர்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, தீப்பெட்டி உற்பத்திக்கான வெடிமருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையே தமது உற்பத்தி குறைவடைந்துள்ளமைக்கான பிரதான காரணம் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கான வெடிமருந்து தரமற்று காணப்படுகின்றமையினால், குறித்த வெடி மருந்துகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுகின்றனர்.
அதனால் எதிர்வரும் நாட்களில் சந்தைக்கு தீப்பெட்டிகளை தடையின்றி விநியோகிக்க முடியும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


0 Comments