Subscribe Us

header ads

புத்தளம் வரலாற்றில் முதன்முறையாக இலவச ஹிஜாமா சிகிச்சை முகாம் (படங்களுடன்)

புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக ஹிஜாமா (Cupping) எனப்படும் இரத்தம் குத்தி எடுத்தல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின்GCE O/L 95 & A/L 98 பழைய மாணவர் குழுவான Syndicate ’95 நேற்று (டிசம்பர் 26, 2015) மு.ப.9.00 மணி முதல் மன்னார் வீதி, மத்திய தாய் சேய் நிலையத்தில் ஏற்பாடு செய்து நடத்தியது.

ஹிஜாமா சிகிச்சையின் தெளிவான வரலாறு சுமார் 1500 வருடங்களை விடப் பழமையானது. இறைத் தூதர் முஹம்மத் நபியவர்கள் இச் சிகிச்சை முறையினை சிலாகித்துக் கூறியுள்ளார்கள்.

மேற்படி ஹிஜாமா முகாமுக்கு 50 பேர்கள் முற்பதிவு செய்திருந்தாலும் 42 பேர் மட்டும் வருகை தந்தனர் என்றும், அதில் பெண்களும் அடங்குவர் என்றும் Syndicate ’95 தலைவர் ஏ.எம்.எம். மிஹ்லார் The Puttalam Times க்குத் தெரிவித்தார்.

வைத்தியர்களான ஏ.எச். மில்ஹான் பாரிஸ், வசீமா ஹானூன், என்.எப். சுமையா, ஜே.எம். நைஜீல், ஏ.எம். பாஹிம், ஏ.எச்.ஏ. நிஹார் ஆகியோர் ஹிஜாமா முகாமில் தமது சேவையை நல்கினர். “ஹிஜாமா மூலம் அசுத்தமான இரத்தமும் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பதார்த்தங்களும் வெளியேற்றப்படுகின்றன. குருதிச் சுற்றோட்டம் சீராகின்றது” என வைத்தியர் ஏ.எச். மில்ஹான் பாரிஸ் ஹிஜாமா குறித்து சுருக்கமாக விளக்கமளித்தார். முற்காலத்தில் கோப்பைகளுக்குப் பதிலாக மாட்டின் கொம்பு பாவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.

ஹிஜாமா சிகிச்சை பெற்றபின் பாலும், தேனும் அருந்தக் கொடுக்கப்பட்டது. ஹிஜாமா சிகிச்சைப் பெற்றுக்கொண்ட மௌலவி ரொஷான் (காசிமி), “நபிகளாரின் ஸுன்னா (வழிமுறை) ஒன்று உயிர்பிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. இதனை மேற்கொண்ட Syndicate ’95 சகோரைர்கள் எமது நன்றிக்கு உரியவர்கள்” எனக் கூறினார்.

புத்தளம் நகர சபை, வைத்தியர்கள், Syndicate நண்பர்கள் அனைவருக்கும் தலைவர் மிஹ்லார் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.


தொகுப்பும் படங்களும்: Hisham Hussain, Puttalam
-THE PUTTALAM TIMES-






Post a Comment

0 Comments