பாலஸ்தீன நாட்டை சேர்ந்த Reem Sahwil என்ற 14 வயது சிறுமி தனது குடும்பத்துடன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் குடியேறியுள்ளார்.
ஆனால், அவரது குடும்பத்திற்கு முறையான குடியிருப்பு அனுமதி கிடைக்காததால் அவரது குடும்பத்தினரை நாட்டை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக கடந்த யூலை மாதம் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் அகதி சிறுமிகளிடம் நேரடி உரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட ரீம் என்ற அந்த சிறுமி, சான்சலர் முன் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
‘எல்லோரையும் போன்று நானும் நல்ல முறையில் படித்து முன்னேற விரும்புகிறேன். ஆனால், அதற்கான சூழல் ஏற்படாதவாறு தங்களது குடும்பத்தை நாடுகடத்த முயற்சி செய்கிறார்கள்.
எந்தவித குற்றங்களிலும் ஈடுப்படாமல் கல்வி கற்க முயல்வது ஒன்றும் பாவமான செயல் அல்ல’’ என சான்சலர் முன்னால் கண்ணீருடன் பேசியுள்ளார்.
சிறுமியின் கண்ணீரால் மனம் உருகிய ஏஞ்சிலா மெர்க்கல் ‘அகதிகளுக்கு ஆதரவு அளிப்பதையே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அதிக எண்ணிக்கையில் வந்தால், அவற்றை அரசால் சமாளிக்க முடியாது’ என கூறி சிறுமிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த குடும்பம் Rostock என்ற நகரில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஜேர்மனியில் வெளியாகும் பில்ட் என்ற பத்திரிகை ‘சான்சலர் முன்னிலையில் அழுத அந்த சிறுமியின் குடும்பம் ஜேர்மனியில் எதிர்வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் திகதி வரை தங்குவதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியின் குடியமர்வு துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதாகவும், ஜேர்மன் குடிமக்களுடன் சிறுமியின் குடும்பம் எளிதாக பழகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments