Subscribe Us

header ads

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் விசமிகள் மது அருந்திவிட்டு போத்தல்களை உடைத்து நாசப்படுத்துவதாக விசனம்

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் விசமிகள் மதுபானம் அருந்துவதுடன், போத்தல்களை அப்பகுதியில் போட்டு உடைப்பதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இரவுவேளைகளில் மைதானத்தில் கூடும் ஒரு சில இளைஞர்கள், அங்கு காணப்படும் விளையாட்டு மைதானத்தின் மேடையின் உள்நுழைந்து மது அருந்திவிட்டு போத்தல்களை அங்கேயே போட்டு உடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத் துறையில்  பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படும் நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு கோரிக்கைகளை விளையாட்டு துறையினரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு ஒரு சில விசமிகள் குறித்த விளையாட்டு மைதான வளாகத்தில் இவ்வாறு துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதால் விளையாட்டுத் துறை சமூகம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வாறான அநாகரீக செயற்பாட்டால் குறித்த விளையாட்டு மைதானம் மேலும் மேலும் பாதிப்படைவதாக விளையாட்டு சமூகம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் இருக்கும் குறித்த விளையாட்டு மைதானத்திற்குள் இவ்வாறான அநாகரீக செயற்பாடுகள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் விளையாட்டு சமூகம் கவலை அடைந்துள்ளது.

ஏற்கனவே விளையாட்டு மைதானத்தை மேற்பார்வை செய்ய ஒரு பணியாளர் பணியில் உள்ள நிலையில் இவ்வாறு நடைபெறும் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல  தவறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இங்கு உடைக்கப்படும் போத்தல்களின் கண்ணாடி ஓடுகள் விளையாட்டு மைதானத்தின் மேடை பகுதியில் சிதறி காணப்படுவதுடன், அருவருக்கத் தக்கவகையில் குறித்த விளையாட்டு மைதானத்தின் மேடை காணப்படுகிறது. 

குறித்த போத்தல் ஓடுகள் விளையாட்டு மைதானத்தில் பரவப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அறிந்திருந்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக விளையாட்டு சமூகம் கவலை அடைந்துள்ளது.

எனவே  விளையாட்டு மைதான பகுதியில் மதுபானம் அருந்துவது போன்ற செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு விளையாட்டு சமூகம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் சம்பந்தபட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments