பெருகிவரும் வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாத செயல்களை முறியடிக்கும் விதமாக 34 நாடுகளின் இராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பை சவுதியின் பிரபல நாளிதழில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் ரியாத் நகரில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எல்லா வகையிலும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாலும், இதற்கு ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்பதாலும் இந்த கூட்டுப்படைக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சவுதி நாட்டின் துணை இளவரசரும் ராணுவ அமைச்சருமானமொஹமட் பின் சல்மான், தற்போது ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.
எனவே இந்த முயற்சிகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உலகளாவிய தீவிரவாதத்தை முறியடிப்பதற்காக உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து எங்களது இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு போராடும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் ரியாத் நகரில் அமைக்கப்படும், இங்கிருந்தவாறு இஸ்லாமிய உலகின்மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிக்கும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இராணுவ பலம்மிக்க பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, லிபியா, ஏமன் உள்ளிட்ட பெரிய நாடுகளும், போகோஹரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா, சோமாலியா, மாலி, சாட் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளும் இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
சவுதியின் அண்டை நாடுகளான குவைட், கட்டார், பாரெய்ன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளை உள்ளடக்கிய இந்த படையில் சிரியா, ஈராக், ஈரான், ஓமன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments