தரையில் இருந்து 350 அடி உயரத்தில், மலை உச்சியின் விளிம்பில் நின்று, உங்கள் திருமணத்தை நடத்தலாம் என்றால் ஒப்புக்கொள்வீர்களா? ஆனால் அள்ளு கிளப்பும் இதே விஷயத்தை ஜே பில்பிரிக் சொன்னால் “டபுள் ஓகே” சொல்லி, கல்யாணத்திற்கு தயாராகின்றனர் ஜோடிகள்.
அமெரிக்காவை சேர்ந்த புகைப்படக்கலைஞர்தான் ஜே பில்பிரிக். சாதாரணமாக எல்லாரையும் போல, வெட்டிங் போட்டோகிராஃபி என மணமகன்-மணமகளை வேறு வேறு கோணங்களில் போட்டோ எடுத்து ஆல்பம் ஆக்கி தந்தால் கடமை முடிந்தது என இல்லாமல், “அதுக்கும் மேல” என்ன செய்யலாம் என யோசித்து பிடித்த ஐடியாதான், இந்த தில் திரில் வெட்டிங் போட்டோகிராஃபி.
ஏற்கனவே மலையேற்றம் செய்ய வருபவர்களுக்கு கைடாக இருந்ததால், அந்த அனுபவத்தோடு இந்த ஐடியாவை கச்சிதமாக எக்ஸிகியூட் செய்திருக்கிறார் ஜே. அதே சமயம், இந்த முயற்சிக்கு முழு சம்மதம் சொல்பவர்களை மட்டுமே நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் இருக்கும், எக்கோ லேக் ஸ்டேட் பார்க் மலைக்கு அழைத்து செல்கிறார்.
முதலில் எங்கு நிற்க வேண்டும்?, எந்த கோணத்தில் எடுக்க வேண்டும்?, ஜோடிகளுக்கு பாதுகாப்புக்காக கயிறுகளை எப்படி கட்ட வேண்டும்? என எல்லா விஷயங்களையும் ஜே முழுதாக திட்டமிட்டு விட்டு, பின்னரே களத்தில் ஏறுகிறார். போட்டோ எடுக்கப்போகும் நபருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாதவாறு, முழு பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டே கேமராவை சிமிட்டுகிறார் ஜே.
இதனை முதன்முதலில் 2008-ல் தொடங்கியிருக்கிறார் ஜே. அப்போது, திருமணம் செய்துகொள்ளவிருந்த இரண்டு பேருமே மலையேற்றம் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்பதால், முதலில் இவர்களை வைத்தே இதை செய்யலாம் என தொடங்கியுள்ளார்.
பின்பு, அந்த விஷயம் அப்படியே பரவி லைக்ஸ் அல்ல, தற்போது ஜாலியாக ஒரு போட்டோஷூட் போலாம் என்றால்கூட, ஜே பில்பிரிக்கை அழைத்துக் கொண்டு மலையேறி விடுகின்றனர் அமெரிக்க மாடல்கள். ஜே போட்டோ எடுக்கும்போது, லைட்டிங் செட் செய்வது, மலையின் மறுமுனையில் ஜே இருக்கும்போது, ஜோடிகளிடம் போஸ் கொடுக்க சொல்வது என இன்னொரு கையாக இருப்பது அவரது மனைவி விக்கி.
“எல்லாரும் போல இல்லாமல், வித்தியாசமாக ஏதாவது இருக்க வேண்டும் என கேட்டவர்களுக்கு நான் யோசித்த ஐடியாதான் இது. வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் என்றால் அது திருமண நாளாகத்தான் இருக்கும். அப்படி கொண்டாட வேண்டிய நாளை, இன்னும் ஸ்பெஷல் ஆக்குவதுதான் என்னுடைய வேலை. இந்த புகைப்படங்களை எப்போது பார்த்தாலும், அவர்களுக்கு மலை உச்சியில் நிற்கும் அதே சிலிர்ப்பு கிடைக்கும். அதுதான் என்னுடைய நோக்கம்" என்கிறார் ஜே.
ஆனால் இது ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே பாஸ்? என்றால், “நான் இத்தனை மணி நேரத்திற்கு, இத்தனை போஸ்க்கு இவ்வளவு என்றெல்லாம் பணம் வாங்கியதே இல்லை. நான் எடுக்கும் புகைப்படங்கள் உங்களுக்கு பிடிக்கும் வரை எடுப்பேன். உங்கள் மனம் திருப்தியடையவில்லை எனில், என் வேலையும் முடியாது. மலை விளிம்பில் நிற்பது மட்டுமல்ல, மலை உச்சியில், பனிப்பாறைகளின் முகட்டில், ஏன் தண்ணீருக்கு கீழே கூட, நான் போட்டோ எடுத்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம், உங்களின் மனவலிமையையும், சவாலை சந்திக்கும் திறமையையும் பொருத்தது” என்கிறார் ஜே.

0 Comments