தரமற்ற துணிகள் மாணவர்களுக்கு கிடைப்பதை தடுக்கவும் இடைத்தரகர்கள் தரகு பணத்தை பெறுவதை தடுக்கவுமே சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 500 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தி, அதனை கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 42 லட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். இவர்களின் சீருடைக்காக வருடாந்தம் 2.3 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
புதிய திட்டத்தின் ஊடாக 1.3 பில்லியன் மாத்திரமே செலவாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீருடைகள் வழங்கும் போது அவற்றை உரிய முறையில் பரிசோதிப்பதில்லை என்பதால், மாணவர்களுக்கு தரமற்ற துணிகளே பெரும்பாலும் கிடைத்து வந்துள்ளது.
மேலும் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்படும் துணி பெரிதாகவும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகள் போதுமானதாகவும் இருப்பதில்லை.
புதிய முறை மூலம் மாணவர்கள் தைத்த சீருடைகளை கொள்வனவு செய்து கொள்ள முடியும். வவூச்சர் முறை மூலம் மாணவர்களுக்கு ஆயிரத்து 700 ரூபாவுக்கான வவூச்சர் வழங்கப்படும்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 400 ரூபா வவூச்சரும் அதற்கு மேலதிகமாக 1000, 800, 750, 720 ரூபா பெறுமதியான வவூச்சர்கள் வழங்கப்படும்.
வழங்கப்படும் வவூச்சர்களை அரச வங்கிகளில் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இதனை வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் பரிந்துரை செய்ய வேண்டும்.
துணிகளின் விலைகள் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வசதி படைத்த பெற்றோர் வவூச்சர்களை பெறவிரும்பவில்லை என்றால்,
அந்த பணத்தை கொண்டு கஷ்ட பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் வருடத்தில் இரு முறை சீருடைகளை பெறும் வகையில் அது வழங்கப்படும் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments