Subscribe Us

header ads

நேர்மையைத் தேடிச்செல்கின்ற போது சந்தர்ப்பவாதம் மார்தட்டி நிற்கிறது.. 'முஸ்லிம்' உம்மத்தைத் தேடுகின்ற போது இயக்கவாதம் சந்தியில் நின்று சிரிக்கின்றது!

கொஞ்சம் வேதனை... நிறைய யோசனையுடன் இந்த ஆதங்கத்தை இப்போதாவது பதிந்து வைக்க வேண்டும் என ஒரு எண்ணம்.

நாலா பக்கமும் மக்களோடு தொடர்புள்ளவங்கிற அடிப்படையில மத்தவங்க நல்லது கெட்டத ஆகக்குறைஞ்சது சொல்லியாவது வைப்பாங்க.. அப்படித்தான் கடைசியா என்னோடயும் கருத்துப் பரிமாறிக்கிட்ட நாலு கல்யாண விசயங்கள்....எல்லாமே தெரிஞ்சவங்க.. சும்மா ஒரு தகவல் அறியிறதுக்காக தெரியுமான்னு கேட்பாங்க, ம்.. நமக்கு தெரிஞ்சத சொல்லறதுதான்.. ஆனா மனச உருக்கின பெரிய விசயம் என்னன்னா... கடைசியா இந்த நாலு கல்யாணப் பேச்சோட முடிவும் 'கொள்கைப் பிரச்சினை....'

என் தம்பி முடிச்ச இடத்துல ஒரு நாள் பெருநாள் கொண்டாடுறாங்க.. அப்புறமா எங்க வீட்டுக்கு வந்து ஒரு நாள் பெருநாள் கொண்டாட வேண்டியதா போச்சு.. சோ ஒத்துப்போற கொள்கைக் காரங்க சம்பந்தம்னா.. இந்தப் பிரச்சினை இல்லை பாருங்கனு நியாயப்படுத்தினப்ப... என் சமூகம் எங்கே போய் நிற்குதுனு யோசிச்சன்..

இன்னொரு பையன் என்னடான்னா... பொண்ணு தலைல முக்காடு போடுறா ஆனா நிகாப்ல இல்லைனு.. உம்மா சொல்றாங்கனாரு.. ஓ.. அப்போ அவங்கள அப்டியே கை விட்டுறதுதானா... இனிமேலாவது சொல்லிப் பழக்கறதில்லையா ... கதீஜா நாயகிக்குக் கூட ரசூலுல்லாஹ் இஸ்லாத்தை சொல்லித்தானே கொடுத்தாங்க...னு கேட்டப்ப இல்லை நானா வீட்ல குழப்புறாங்கன்னாரு...

ஆக.. இப்பல்லாம் எல்லாப் பேச்சுக்கும் கடைசியில அவங்க எந்த "இயக்கம்?னு" ஒரு கேள்விய முன்னால போடுறாங்க...

இந்தப் பிரச்சினை புதுசா வந்ததில்லை... வளர்ற பிரச்சினை. இதுக்குத் தீர்வுங்கறது அடிச்சு..புடிச்சு...எல்லாம் தரைமட்டமாக்கி யாராவது ஒரு பிரிவு வாழ்றதுதானா... ம்.. ரொம்பச் சிறுபான்மையா வாழ்ற எங்களுக்கு சேர்ந்து வாழறதுங்கறது எவ்வளவு கஷ்டமாப்போச்சுனு நினைக்கும் போது வேதனையாருக்கு..

ஒன்றரை வருஷம் இருக்கும்னு நினைக்கிறன்... கிழக்கு மாகாணத்துல ஒரு ஊர்ல .. ஒரு பில்டிங்க உடைச்சுட்டு வந்துட்டம்னு ஒரு இயக்கத்தை சேர்ந்தவரு சொன்னாரு... அட அப்டியா... ஏன் உடைச்சிங்கனு கேட்க.. அங்க நடக்கிறதெல்லாம் இஸ்லாத்துக்கு முரணானதுன்னாரு.. சரி, அதை அடிச்சு உடைச்சுத்தான் சொல்லனுமா? உட்கார்ந்து பேசி நிதானமான மாற்றங்களை கொண்டு வாறது முறையில்லையானு கேட்டன்... ம்.. அதெல்லாம் யோசிக்கலன்னாரு..

சரி அந்த பில்டிங்குக்கு எத்தனை வயசிருக்கும்... ஒரு ஐறூறுன்னாரு... ஓ... அப்போ ஐநூறு வருசத்துக்கு முன்னால எங்க சமூகம் அங்கே வாழ்ந்ததுக்கு அதுவும் ஒரு ஆதாரமோ... ம்.. இருக்கும்னாரு.. அப்போ அங்கே அகற்றப்பட வேண்டியது எதுங்கற நிதானமான பேச்சுவார்த்தை மூலமா நிறுத்த வேண்டியத நிறுத்தி... பாதுகாக்க வேண்டியத பாதுகாத்திருக்கலாமே... அமைதியா இருந்தாரு!

அநுராதபுர சியார உடைப்ப... வெறும் சியாரம்னு பார்த்தவங்க... கட்டிடம்னு பார்த்தவங்க... எங்க முன்னோர்கள் வாழ்ந்த இடம்னு பார்த்தவங்னு பல வகையினர் இருக்காங்க..எல்லோரும் ஒரே இடத்துல இருந்து அதை முழுசா பேசினா தவிர... எழுந்தமானமா நான் சரி.. நீ பிழைங்கற வாதமும்... சந்தேகமும் தான் இருக்கும்.. ம்.. இருந்திச்சு.. அதுல இருந்து அப்புறமா அது அளுத்கமயில வந்து முடியும் வரைக்கும் அதை அரசியல் பின்னலா பார்க்கத் தெரியாதவங்க கூட இருந்தாங்க.

இப்டியே ஏட்டியும் போட்டியுமா ஆளாளுக்கு பிரிஞ்சு வாற சமூகத்தை ஒரே 'உம்மத்'தா மட்டும் பார்க்கத் தெரிஞ்ச எனக்கு யார் பாதிக்கப்பட்டாலும் அவங்க பக்கம் நிற்கனும்.. யார் அநீதியா நடந்துகிட்டாலும் அவங்க தவற சுட்டிக்காட்டனுங்கற நேர் கோட்டில இருந்து விலகி நிற்க முடியல.

'முஸ்லிம் உம்மத்' என்பது ஒரு சமூகக் கட்டமைப்புனு நான் நினைச்சுக்கிட்டிருக்கன்.. ஆனா அதுல ஒரு "ஈமான்" கொண்டவர் சேர்ந்திருக்கனும்னா .. வாசல்ல வைச்சு எந்த இயக்கம்னு அடையாளப்படுத்தி.. அந்தக் கதவுக்குள்ளாலே போகனும்.. அதுக்கப்புறம் அவங்கவங்க தலைமை சொல்லறத சரி பிழைக்கு அப்பால புடிச்சு வைச்சுகிட்டு சண்டை பிடிக்கனும்னு சொல்றாங்க...

ஒரு பேச்சுக்காக.. நாளையே உலகம் எல்லாம் அரபுப் பெயர் சூட்டிக்கொண்டு நாம் எல்லோரும் முஸ்லிம்கள்னு சொன்னாங்கனா.... அடுத்த நாள் என்ன நடக்கும்னு தீவிரமா கிலாபத் பத்தி பேசற ஒரு நண்பர் கிட்ட கேட்டன்.. அவர் இன்னும் பதில் சொல்லல... சரி இலங்கையில அப்டி ஆனா மறு நாள் என்ன நடக்கும்.. ஒரு சமூகப் போராட்டத்தை செய்றதுக்குக் கூட இயக்க அடையாளமும் .. தலைமைத்துவப் போட்டியும்னு இஸ்லாம் பேசிக்கிட்டே நேர்மைக்குப் புறம்பா கதைசோடிச்சு அழகு பார்க்கிற ஆளுங்களாச்சே... னு கேட்டன்.. அப்போதும் அவர் பதில் சொல்லல...

அவர் சொல்றாரோ இல்லையோ... ஒரே உம்மத்தா சேர்ந்திருங்கனு சொன்னா... ஆளுக்கொரு உம்மத்.. ஏற்றத் தாழ்வு... பிரிவினை... பேதம்... இதெல்லாம் பார்க்கும் போது இன்னும் முழுசா அழியாத சாதிப் பிரச்சினைக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியல!

அவங்கவங்க சார்ந்த அரசியல் கட்சி விமர்சிக்கப்படறதையே இன்னைக்குக் காலத்துல எங்காளுங்களால தாங்க முடியல..கொள்கை இயக்கங்கள்...? ம்... ஏதாச்சும் ஒன்றுல சேராட்டியும்ல தப்புங்கறாங்க! நிஜமாகத்தான்... அன்னைக்கு ஒருத்தர்... எந்த குரூப்லயும் சேராதவன் யூதன்னு ஒரு தீர்ப்பு சொல்றாரு.... இன்னொரு மௌலவி என்னடான்னா விரல்களை நீட்டி இந்தந்த குரூப்ல இருந்தா ஓகே... அதுல இருந்தா தப்புனு வேற மாதிரி வரைவிலக்கணம் சொல்லாரு... இப்டியே ஆளாளுக்கு அடிச்சிக்கிறாங்க..

அந்த வேதனை மிக்க அளுத்கம நினைவுகளையும் .. உறக்கமில்லாம நாங்க பட்ட பாடுகளயும் சும்மா நினைச்சு பார்க்கிறன்.. அப்போ கூட .. அங்கே ரெண்டு பேருக்கு உதவி செய்து.. அதை போட்டோ எடுத்து ஜம்மியத்துல் உலமா பேர்ல மோசடி செய்த ஒரு நபரைக் கண்டோம்.. போதாததுக்கு இன்னும் ஒரு ஏரியாவுல ஜமாத் பார்த்து மருந்து கொடுக்க முன் வந்த அமைப்பைப் பார்த்தோம்.. ஆனா இனவாதிகள் இதுல எதையுமே பார்க்காம அழிச்சுட்டு போயிட்டாங்க..

அல்ஹம்துலில்லாஹ்.. நல்லாட்சி வந்துது.. இப்போதைக்கு ஆட்சியாளர்களின் "மறுபக்கப்" பார்வையில நாங்க இல்லை.. சோ திரும்பவும் எங்காளுங்க தலை கால் தெரியாம ஆட ஆரம்பிச்சாச்சு... மஹிந்த கூட ஆரம்பத்துல நல்லாத்தான் இருந்தாரு.. அப்புறமா மத்தவங்க சொல்லறத நம்ப ஆரம்பிச்சாரு... அதுக்கங்கால நடந்ததெல்லாம் வரலாறு!

இப்போ.. நாங்க புது அத்தியாயங்கள ஆரம்பிச்சிருக்கோம்... வழக்கம் போல எதிர்ச்செயல்கள் (Reactive) சார்ந்த சமூகம் நாம் என்பதால் ஏதாச்சும் நடந்ததுக்கப்பால 'சிந்திக்க' ஆரம்பிப்போம்.. அதுவரை ஓராயிரம் பள்ளிவாசலை கட்டிப் பல்லாயிரம் பிரிவுகள வளர்த்துக்கனும்னு என் சமூகம் சண்டையிடுகிறது...

வேதனையுடன்..

-இர்பான் இக்பால்

07-11-15


Post a Comment

0 Comments