சிரியாவில் ஐ.எஸ்.போராளிகளை குறிவைத்து பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஐ.எஸ். போராளிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு–மதுபான விடுதிகள் என 6 முக்கிய இடங்களில் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாரிஸ் நகர தாக்குதலில் ஈடுபட்ட போராளியின் தந்தை உள்பட 7 பேரை பிடித்து பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரிஸ் தாக்குதலை அடுத்து, போராளிகள் மீது இறக்கமின்றி தாக்குதல் நடத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்தது. அதன்படி சிரியாவில் ஐ.எஸ். போராளிகள் நிலைகளை குறிவைத்து குண்டு வீச்சை பிரான்ஸ் தொடங்கியுள்ளது.
பாரிஸ் தாக்குதலை அடுத்து சிரியாவில் பிரான்ஸ் விமானப்படையை சேர்ந்த 10 குண்டு வீச்சு விமானங்கள், சரமாரியாக குண்டுகளை வீசியுள்ளது. விமானங்கள், ஐ.எஸ். போராளிகள் முகாம்கள், போராளி இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் இடங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் இடங்களில் குண்டுகளை வீசியுள்ளது.
இதில் போராளிகளின் நிலைகள் அழிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடுகளில் இருந்து புறப்பட்டு சென்ற பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்கா உதவிடன் தாக்குதலை நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments