Subscribe Us

header ads

1960 களில் அல்-அக்ஸா தேசிய பாடசாலை - ஓர் சிறப்பு பார்வை

கல்பிட்டி , அல் அக்ஸா மஹா வித்தியாலயம் - 1960 களில் அப்பாடசாலையில் நானொரு மாணவன். அக்காலத்தில் இப்பாடசாலை இலங்கையெங்கும் பிரபலம் ; நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு கல்வி கற்றார்கள். பத்து வருடங்களுக்குப் பின்னர் அரசியல் பழிவாங்கல் அப்பாடசாலைக்கு என்னை விஞ்ஞான ஆசிரியனாக அனுப்பி வைத்தது . கல்வி கற்ற பாடசாலை என்பதால் அந்த இடமாற்றத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். அப்போது இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர் , பிற்காலத்தில் இலங்கைக் கல்வியமைச்சில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகமாக ( Deputy Director General of Education ) பணி புரிந்து ஓய்வு பெற்ற M.H.M.M. மஹ்ரூப் மரைக்கார். நல்ல வரவேற்பு ; இலவச உணவு , தங்குமிட வசதியோடு மாணவர் விடுதியின் பொறுப்பாளராகவும் என்னை நியமித்தார்.
1980 ம் ஆண்டில் பாடசாலையின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் ஏற்பாடுகள் 1979 ம் ஆண்டிலேயே முன்னெடுக்கப்பட்டன. வெள்ளி விழா மலரைத் தயாரிக்கும் பொறுப்பும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பொறுப்பும் ஏற்பாட்டுக் குழுவினரால் எனது தலையில் சுமத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளுக்கு மாணவரைத் தயார்படுத்தும் பணிகளை ஆசிரியர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். இப்பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்களும் சிறந்த கலைஞர்களுமான Ssm RafeekHaja Sahabdeenஆகியோர் வேறு பாடசாலைகளில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தபோதிலும் தரமான கலை நிகழ்ச்சிகளை அளிக்கச் சம்மதம் தெரிவித்ததோடு நிற்காமல் வாரந்தோறும் சில தினங்களை ஒதுக்கிப் பாடசாலைக்கு வருகைதந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். எம்.எச்.எம்.ஷம்ஸ் , ஏ.ஆர்.ஏ. ஹஸீர் , திக்குவல்லை கமால் ஆகியோருடன் உள்ளூர் கவிஞர்களும் கலந்துகொண்ட கவியரங்கொன்றும் நடைபெற்றது.
மலரை அச்சிடும் பணிகள் கொழும்பில் நடைபெற்றன. அட்டைப் படத்தை எஸ்.எஸ்.எம். றபீக் சொற்ப நிமிடங்களுக்குள்ளேயே திட்டமிட்டு இலவசமாக வரைந்தளித்தார். அந்தப் படமே இங்கு தரப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் எனக்களிக்கப்பட்ட பொறுப்புகளில் எவரும் எந்த விதமான தலையீடுகளும் செய்யவில்லை என்பதே இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. அதிபர் மாத்திரம் அவ்வப்போது , ' வேலைகளெல்லாம் எப்படி இருக்கின்றது ? ' என்று கேட்பார். ' செலவைப் பற்றிக் கவலை வேண்டாம் . மலரை சிறப்பாகக் கொண்டு வாருங்கள் ' என்று உற்சாகம் தருவார். ஓய்வான நேரங்களில் நானும் அவரும் அறிமுகமான சிலரிடம் நிதியுதவி கேட்டுச் சென்றதுண்டு ; அவர்களும் வாக்களித்ததுண்டு. பின்னர் பணம் கிடைத்ததா என்பதுபற்றித் தெரியாது . ஆனால் , உரிய நேரத்தில் அச்சகத்துக்கான முழுப்பணத்தையும் அதிபர் தந்து விட்டார் .
இப்போதுபோல நவீன அச்சியந்திர வசதிகள் இல்லாத அக்காலத்தில் அல் அக்ஸா வெள்ளி விழா மலர் கனதியான உள்ளடக்கத்துடனும் அழகிய அமைப்புடனும் வெளிவந்து பலரினது பாராட்டையும் பெற்றது. பாடசாலையின் வெள்ளி விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

-Jawad Marikkar-

Post a Comment

0 Comments