ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எவ்வாறு செயற்படுத்தப்போகிறது? ஐ.நாவின் எதிர்பார்ப்புகளை இலங்கையால் எவ்வளவு தூரத்துக்குப் பூர்த்திசெய்ய முடியும்?
தீர்மானத்தைத் தடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ள மஹிந்த ஆதரவுச் சக்திகளால் பலமான எதிர்ப்பை உருவாக்க முடியுமா? தமிழ் மக்களுக்கு மீண்டும் ஏமாற்றம்தானா? இப்படியான கேள்விகள் இலங்கை அரசியல் வட்டாரங்களில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன.
யுத்தத்தின் போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவும், நல்லிணக் கத்தை ஏற்படுத்தவும் இலங்கைக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். மைத்திரி - ரணில் அரசு இனவாதிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது செயற்படுவதிலேயே அமெரிக்கத் தீர்மானத்தின் வெற்றி தங்கியுள்ளது.
தானும் அனுசரணை வழங்கிய ஒரு தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசு கடமைப்பட்டுள்ளது. ஐ.நாவின் எதிர்பார்ப்புகள் பொய்த்து விடக்கூடாது.
2009இல் யுத்தம் முடிவடைந்த கையோடு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நல்லதொரு வாய்ப்பு உருவாகியது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஓர் அரசியல் தீர்வை மஹிந்த ஆட்சியாளர்கள் கண்டிருக்கலாம்.
அரசியல் தீர்வு ஏற்பட்டிருந்தால் இன்றைய பாரிய நெருக்கடிகளில் இருந்து இலங்கை விடுபட்டிருக்க முடியும். போர்க்குற்றங்கள் கூட அடிபட்டுப் போயிருக்கும். பொதுநலவாய நீதிபதிகள், வெளிநாட்டு நீதிபதிகள், வெளிநாட்டுச் சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் என்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க முடியாது.
பான் கீ - மூனால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட ஐ.நா. விசாரணைக்குழு ஆகியவை இலங்கை வந்து விசாரணை செய்ய மஹிந்தவின் ஆட்சியின் போது இடமளிக்கப்படவில்லை.
வெளிநாட்டுத் தலையீட்டுக்கு இடமில்லை என்று கூறி மஹிந்த அரசு அந்த விசாரணைக் குழுக்கள் இரண்டையும் நிராகரித்துவிட்டது. ஆனால், இன்று நடந்திருப்பது என்ன? பெயர்தான் உள்ளக விசாரணைப் பொறிமுறை. நடக்கப்போவது ஓரளவு சர்வதேச விசாரணைதான்.
தருஸ்மன் தலைமையிலான ஐ.நா. நிபுணர் குழுவும், இரண்டாவது அமெரிக்கத் தீர்மானம் மூலம் அமைக்கப்பட்ட ஐ.நா. விசாரணைக்குழுவும் உள்ளே வர அனுமதி இல்லாததால் இலங்கைக்கு வெளியில் இருந்து விசாரணை நடத்தின. தற்பொழுது மூன்றாவது அமெரிக்கத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு வந்து விசாரணை செய்யும் சந்தர்ப்பம் முதல் தடவையாகக் கிட்டியுள்ளது.
இது இலங்கை விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம். எனினும், இந்தியாவின் இந்து நாளிதழ் ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கை பயணிக்க வேண்டிய பாதை இலகுவானதாக இருக்காது. நம்பகத்தன்மை மிக்க நீதிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
மேலும் அதற்குள் நீதிபதிகள், சட்டவாளர்கள் போன்ற வெளிநாட்டு வளங்களை மிகவும் அவதானமாக உள்வாங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே முன்வந்து சாட்சியமளிக்கக்கூடிய நம்பிக்கை ஏற்படக்கூடிய விசாரணை நடைமுறையை உருவாக்கவேண்டும். ஆகவே ஐ.நாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பாரிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு.
2009இல் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னர் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மஹிந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை. யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். புலிப் பயங்கரவாதம் குறித்துப் பேசினார்கள்.
புலம்பெயர் தமிழர்களை புலிகள் என்றார்கள். இன ரீதியான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் மூவின மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழல் ஏற்படவில்லை. தற்பொழுது கிடைத்த சந்தர்ப்பத்தை மைத்திரி - ரணில் அரசு பயன்படுத்தி உண்மையை வெளிக்கொணரவேண்டும்.
போர்க்குற்றமிழைத்தவர்கள் தப்புவதற்கு இடமளிக்கக்கூடாது. இராணுவத்தின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அவற்றை நிவர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. நாடாளுமன்றத்தில் கூச்சலிடும் மஹிந்த அரசு இனவாதிகளுக்கு அஞ்சி மைத்திரி - ரணில் அரசு பின்வாங்கிவிடக்கூடாது.
(பத்தர்)


0 Comments