சிறைச்சாலையிலுள்ள தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவர் பதவிக்கு (அலுகோசுவன்) தற்பொழுது 24 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், நாளை மறுதினம் (13) ஆம் திகதி நடைபெறும் நேர்முகப் பரீட்சையின் போது இவற்றிலிருந்து இருவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள இரு வெற்றிடத்துக்கு இவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதுவரையில் இந்தப் பதவியில் எவரும் கடமையாற்ற வில்லை. இதற்கு முன்னர் இப்பதவிக்காக இருவர் நியமனம் செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்கள் இந்தப் பதவியை கைவிட்டுச் சென்றுள்ளனர்.
நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் இருவரும் விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
இந்தப் பதவிக்கு குறைந்த கல்வித் தகைமையாக தரம் 8 சித்தியடைந்திருத்தல் என குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், உயர் தரம் சித்தியடைந்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
பெண்களும் இந்தப் பதவிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பெண்களை இணைத்துக் கொள்வதில் திணைக்களம் எந்த அனுமதியையும் வழங்காது. தற்பொழு நாட்டில் தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் 1115 பேர் இருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments