கடந்த 17-08-2015ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்
முடிவுகள் பல எதிர்பார்ப்புகளுக்கும்,போட்டிகளுக்கும் மத்தியில் அமைந்திருந்தது.இத்
தேர்தலில் இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான
மோதல் மிகவும் உச்சத்தில் நின்றது எனலாம்.இரு அணிகளும் மட்டக்களப்பில் பலமிக்கதாய்
திகழ்ந்ததால் இம் மாவட்டத்தின் தேர்தல் முடிவானது ஏனைய மாவட்டங்களினை விட ஒரு படி
மேல் இலங்கை முஸ்லிம் மக்களினால் எதிர் பார்க்கப்பட்டிருந்தது.அதிலும் குறிப்பாக
மட்டக்களப்பில் அ.இ.ம.காவினை வீழ்த்தினால் அ.இ.ம.காவின் மிகப் பெரிய காய் ஒன்றும்
வீழ்த்தப்பட்டிருக்கும்.இதன் விளைவு அ.இ.ம.காவின் மட்டக்களப்பு மாவட்ட
இருப்பு,தேசியப் பட்டியல் பகிர்வு ஆகியவற்றினை சவாலுக்குற்படுத்திருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
மு.கா மிகப் பெரிய வெற்றியினைச் சுவைத்துள்ளதான விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.கடந்த
பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்திற்கு 38 477 (16.11%) வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.இதில் ந.தே.முவின் வாக்குகளாக 12 500 (5.23%) அளவிலான
வாக்குகளினைக் குறிப்பிடலாம் (மட்டக்களப்பில் ந,தே.மு சார்பாக மரச் சின்னத்தில்
களமிறங்கிய அப்துர் ரஹ்மான் 12 468 (5.22%) வாக்கினைப் பெற்றிருந்தார்).ஆகவே,கடந்த
தேர்தலில் மட்டக்களப்பில் மரச் சின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் மு.காவிற்கு சொந்தமான வாக்குகளாக
25 977 (10.87%) அளவிலான வாக்குகளினையே குறிப்பிடலாம்.
கடந்த 2012 ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில்
மு.கா 23
083 (11.21 %) வாக்குகளினைப் பெற்றிருந்தது.கடந்த மாகாண
சபைத் தேர்தலினை விட வெறும் 2894 வாக்குகளினையே
மு.கா இத் தேர்தலில் அதிகமாக பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட செல்லுபடியான
வாக்குகளில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளினை விட மு.காவின்
வாக்கானது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விகித அடிப்படையில் 0.34% வீழ்ச்சி கண்டுள்ளது.விகித அடிப்படையில்
பார்க்கும் போது இது சிறிய எண்ணிக்கை போன்று தோன்றினாலும் வாக்கு அடிப்படையில்
கணக்கிட்டால் பாரிய எண்ணிகையினைத் தரும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாகாண
சபைத் தேர்தலினை விட த.தே.கூ 22503 வாக்குகளினை
அதிகமாக பெற்றுள்ளது.அளிக்கப்பட செல்லுபடியான வாக்குகளில் இது 2.42% அதிகரிப்பாகும்.இதன் படி பார்க்கும் போது
மு.கா 3161 வாக்கினை இழந்துள்ளது என்பதே உண்மை (இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விகிதங்கள்
அனைத்தும் அளிக்கப்பட செல்லுபடியான வாக்குகளில் இருந்து கணிக்கப்பட்டுள்ளது).
மட்டக்களப்பிற்கு
மு.கா முதலமைச்சினை வழங்கி சூடு ஆறுவதற்கு முன்பு இத் தேர்தல் நடைபெற்றுள்ளது.மு.கா
அல்லாத கட்சிகளில் இருந்து தெரிவான இரு மாகாண சபை உறுப்பினர்கள் (அலி ஷாகிர்
மௌலான,சிப்லி பாறூக்) ஆகியோர் இத் தேர்தலில் மு.காவுடன் இணைந்துள்ளனர்.அ.இ.ம.காவினை
மட்டக்களப்பில் தூக்கிப் பிடித்திருந்த ஹிஸ்புல்லாஹ் அ.இ.ம.காவினை விட்டும் சென்றுள்ளார்.இக்
காரணிகள் மு.கா பாரிய வெற்றியினைச் சுவைக்க
ஏதுவாக இருந்தும் அதனால் தனது வாக்கு வங்கியினைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.இவ்வளவு
காரணிகளும் சாதகமாக இருந்தும் தனது வாக்கு வங்கியினை தக்க வைத்துக் கொள்ள இயலாத
மு.கா எதிர் காலத்தில் தக்க வைக்குமா? என்பது கேள்விக் குறியே.
கடந்த பாராளுமன்றத்
தேர்தலில் மு.கா மட்டக்களப்பில் தனித்து களமிறங்கி இருந்தது.மட்டக்களப்பில் மு.கா
சார்பாக மூன்று பிரபலங்கள்(அலி ஷாகிர் மௌலானா,சிப்லி பாரூக்.றியாழ்) தான்
இருந்தனர்.இதனை இவ் மூவரும் தவிர்ந்து ஏனைய வேட்பாளர்கள் 700 இற்கும் குறைவான விருப்பு வாக்கினைப்
பெற்றதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.மு.காவானது ஐ.தே.கவுடன் இணைந்து மட்டக்களப்பில்
தேர்தல் கேட்டிருந்தால் அதற்கு மூன்று அல்லது இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்கும்.
மு.காவிற்கு மூன்று
ஆசனங்கள் வழங்கப்பட்டிருந்தால்,இத் தேர்தலில் மு.கா பெற்ற 25977 அளவிலான வாக்குகளில் சிறிதளவான வாக்குச்
சிதறல்கலுடன் 24000-25000 விருப்பு
வாக்குகளினை மு.கா சார்பாக களமிறக்கப்பட்ட மூன்று வேட்பாளர்கள் பெற்று மூவருமே
ஐ.தே.கவின் விருப்பு வாக்கில் முதன்மையில் இருந்திருப்பார்கள்.இதன் போது தங்களது
ஊர் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்கும் நோக்கில் ஓட்டமாவடி,கல்குடா இரு ஊர்களில்
இருந்தும் அமீர் அலிக்கு வாக்களிப்பவர்கள் மு.காவினைச் சேர்ந்த றியாழிற்கும்,றியாழிற்கு
வாக்களிப்பவர்கள் அமீர் அலிக்குமென பரஸ்பரம் குறித்த வாக்குகள் பரிமாறப்பட்டிருக்கும்.
இரண்டு வேட்பாளர்கள்
எனும் போது யாரினை விடுவது என்பது மு.காவிற்கு மிகவும் சவாலான ஒரு விடயமாக
அமைந்திருக்கும்.ஏறாவூரில் மு.காவினை எதிர்த்து யாரும் தேர்தலில் களமிறங்காமை,ஏறாவூரில்
மு.கா உச்சத்தில் இருந்தமை,அலி ஷாகிர் மௌலானா தனக்கென குறித்த வாக்கு வங்கியினை
கொண்டுள்ளமை போன்ற காரணங்களினால் அலி ஷாகிர் மௌலானாவை அவ் இருவரில் ஒருவராக
களமிறக்குவதே பொருத்தமானது.மற்றைய இவர்களில் றியாழினை களமிறக்காவிட்டால்
கல்குடா,ஓட்டமாவடி வாக்குகளும்,சிப்லியினை களமிறக்காவிட்டால் காத்தான்குடியின்
குறித்த வாக்குகளும் ஏனைய கட்சிகளில் அவ் ஊரினை பிரதிநிதித்துவப்படுத்திய
வேட்பாளர்களினை சென்றடைந்திருக்கும்.இரண்டு வேட்பாளர்கள் களமிறக்கப்படும் போது
குறித்த வாக்குகள் சிதறக்கூடிய வாய்ப்பு இருந்தாலும் மு.காவின் சொந்த வாக்கு
வங்கியோடு குறித்த இரு வேட்பாளர்களும் 20000-22000 அளவிலான விருப்பு வாக்கினைப் பெற்று இருப்பார்கள்.இதன் படி பார்க்கும் போதும்
ஐ.தே.கவின் விருப்பு வாக்கில் மு.கா சார்பாக களமிறக்கப்பட்ட வேட்பாளர்களே
முதன்மையில் இருந்து இருப்பார்கள் எனலாம்
இம் முறை இலங்கை பூராகவும் வாழ்கின்ற முஸ்லிம்கள்
ஐ.தே.கவிற்கு வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி இருந்தனர்.அமீர் அலி இம் முறை பெற்றுக் கொண்ட வாக்கில் ஐ.தே.கவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் வேறு வழி
இன்றி அளித்த வாக்குகளும் குறித்த அளவு காணப்படும் என்பதை மறுக்க முடியாது.ஐ.தே.கவுடன்
இணைந்து மு.கா தேர்தல் கேட்டிருந்தால் இவ்வாறான வாக்குகளினையும் மு.காவினால்
குறித்த அளவு பெற்றிருக்க முடியும்.ஐ.தே.கவுடன் மு.கா இணைந்திருந்தால் ஓட்டமாவடி,கல்குடா
ஆகிய இரு ஊர்களில் இருந்தும் மு.காவிற்கு அளிக்கப்படும் வாக்குகளில் இருந்து
குறித்த அளவிலான வாக்குகள் அமீர் அலிக்கும் சென்றிருக்கும்.இருந்த போதிலும் அவர்
தற்போது பெற்றுள்ள வாக்கிலிருந்து 3000 அளவிலான வாக்குகளினையே அவர் பெறச்
சாத்தியமான உச்ச எண்ணிக்கை வாக்காக குறிப்பிடலாம்.இவ் வாக்கு ஒரு போதும் மு.கா
வேட்பாளர்களின் விருப்பு வாக்கினை நெருங்கி இருக்காது.
இம் முறை
அ.இ.ம.கா சார்பாக களமிறக்கப்பட்ட அமீர் அலி 16611 வாக்கினையே
பெற்றிருந்தார்.இது அ.இ.ம.காவின் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டு மொத்த வாக்காகும்.ஒரு
கட்சி தனித்து களமிறங்கும் போது அக் கட்சியின் வேட்பாளர்களிடையே விருப்பு
வாக்குகள் சிதறும்.அக் கட்சியும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கில் கவனம்
செலுத்தாது.இவ்வாறான நிலையில் மு.கா சார்பாக களமிறங்கிய அலி ஷாகிர் மௌலான 16385 விருப்பு வாக்கினைப்
பெற்றிருந்தார்.இது அமீர் அலியின் வாக்கினை விட அதிக எண்ணிக்கையான வாக்காகும்.ஐ.தே.கவுடன்
இணைந்து மு.கா தன் பலத்தினை முழுமையாக பிரயோகித்திருந்தால் அலி ஷாகிர்
மௌலானாவினால் நிச்சயாக அமீர் அலியினை விஞ்சிய வாக்கினைப் பெற முடிந்திருக்கும்
என்பதில் ஐயமில்லை.
தற்போது மு.கா,ஐ.தே.க பெற்றுள்ள
வாக்குகளினை வைத்து கணக்கிடும் போது முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் இணைந்து தேர்தல்
கேட்டிருந்தாலும் ஐ.தே.கவினால் ஒரு ஆசனத்தினை மாத்திரமே பெற்றிருக்க முடியும்.அதே
நேரம் சு.க ஒரு ஆசனத்தினை பெற்றிருக்கும்.மு.கா தனித்து களமிறங்கியமை ஐ.தே.முவின்
ஆசன அதிகரிப்பிற்கு உதவியுள்ளது என்பது மாத்திரமே அதில் உள்ள ஒரு பிரயோசனமான
விடயமாகும்.
ஐ.தே.கவிற்கு கிடைக்கும் ஒரு
ஆசனத்தினையும் மு.கா பெற்றிருந்தால் அ.இ.ம.காவின் வேட்பாளரான அமீர் அலி மிக
இலகுவாக தோற்கடிக்கப்பட்டிருப்பார்.எனினும்,மு.காவின் எதிரிகளில் ஒருவரான
ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றன் தெரிவாகி இருப்பார்.தற்போதைய சூழ் நிலைகளில்
ஹிஸ்புல்லாஹ்வினை எதிர்வரும் காலங்களில் தோற்கடிப்பது என்பது ஒரு பெரிய
விடயமல்ல.இருப்பினும்,மட்டக்களப்பில் உள்ள அ.இ.ம.காவின் ஒரே ஒரு பிரபலம் அமீர் அலி
மாத்திரமே.மட்டக்களப்பில் அ.இ.ம.கா உருவாக்கி வைத்திருந்த சுபைர்,சிப்லி பாரூக்
ஆகியோர் அ.இ.ம.காவினை விட்டும் வேறு பக்கம் சென்றுள்ளனர்.இந் நிலையில் அமீர்
அலியினையும் தோற்கடித்திருந்தால் மு.காவிற்கு மட்டக்களப்பில் அ.இ.ம.காவிடம்
இருந்து வரக் கூடிய சவால்கள் வெகுவாக குறைந்திருக்கும்.மட்டக்களப்பு மாவட்டத்தில்
அ.இ.ம.காவின் ஒரே ஒரு பிரபலமாக எஞ்சியுள்ள அமீர் அலியும் இம் முறை பாராளுமன்றம்
தெரிவாகி இருப்பதானால் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.காவின் பக்கம்
வாக்குகள் இலகுவாக திருப்பும் சாத்தியம் உள்ளது.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் அலி ஷாகிர்
மௌலானா பெற்ற வாக்கிற்கும் அமீர் அலி பெற்ற வாக்கிற்கும் இடையே பத்தாயிரம் அளவிலான
வாக்கு வித்தியாசம் உள்ளது.சிப்லி பாரூக்கினைப் பொறுத்த மட்டில் அவரிற்கு அரசியல்
முகவரி அ.இ.ம.காவினாலே வழங்கப்பட்டிருந்தது.றியாழின் அரசியல் பிரவேசம் இதுவே முதற்
தடவையானது.இவர்கள் அ.இ.ம.கவின் வேட்பாளரினை விஞ்சிய விருப்பு வாக்கினைப்
பெறுவார்களா? என்ற சந்தேகத்திலும் மு.கா இத் திட்டத்தினை வகுத்திருக்கலாம்.
தாங்கள் தனித்து தேர்தல் கேட்கும் போது
வெற்றி பெற முடியாது என்பதனை நன்கு அறிந்த மு.காவனது ந.தே.மு உடன் ஒப்பந்த
அடிப்படையில் கூட்டிணைந்திருந்தது.ந.தே.முவிற்கும் மு.காவின் மட்டக்களப்பு மாவட்ட வெற்றியில்
மூன்றில் ஒரு பங்கு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.மட்டக்களப்பில்
மு.காவின் மரச் சின்னத்தில் ந.தே.மு சார்பாக களமிறக்கப்பட்ட அப்துர் ரஹ்மான்
மு.காவின் விருப்பு வாக்கில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.அலி ஷாகிர் மௌலான
தனிப்பட்ட வாக்கு வங்கியினைக் கொண்டிருந்தவர் என்பதால் அப்துர் ரஹ்மானின் விருப்பு
வாக்கினை முந்த முடிந்தது எனலாம்.அல்லாது போனால் மு.காவனது ந.தே.மு இடம் ஒரு
ஆசனத்தினை இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.மட்டக்களப்பில் ந.தே.முவுடனான
கூட்டினைவில் மு.கா கத்தி மேல் பயணித்துள்ளது என்றே கூற வேண்டும்.தேர்தலின்
பிற்பாடு ந.தே.முவும் மு.காவின் தன் மானத்தினை தாங்களே காப்பாற்றியது போல்
கதைப்பதற்கு மு.கா இடம் கொடுத்துள்ளது.
சிறு பிள்ளைகள் முட்டாசு கேட்டு பிடிவாதம்
பிடிப்பது போன்று ந.தே.மு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகள் எதுவும் இன்றி மு.காவின்
தேசியப்பட்டியலிலும் பங்கு கேட்கிறது.மட்டக்களப்பில் மு.கா ந.தே.முவுடன் செய்து
கொண்ட ஒப்பந்தத்தில் அடிப்படையில் திருகோணமலையில் தனது ஒரு ஆசனத்தினை
ந.தே.முவிற்கு வழங்கி இருந்தது.திருகோணமலையில் ஐ.தே.க இரண்டு ஆசனங்களினை பெறக்
கூடிய சாத்தியம் கண் முன் காணப்பட்டது.எனவே,திருகோணமலையில் மு.கா இரு ஆசனத்தினை
பெறும் நோக்கில் தனது செயற்பாட்டினை அமைத்திருக்க வேண்டும்.ஆனால்,மு.கா
மட்டக்களப்பில் ந.தே.முவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனக்கு
வழங்கப்பட்ட இரு ஆசனங்களில் ஒரு ஆசனத்தினை ந.தே.முவிற்கு வழங்கி ஒரு ஆசனத்தினை
நோக்கி காய் நகர்த்திய மு.காவின் செயற்பாடு அதன் சாணக்கியத்தினை நகைப்பிற்குட்படுத்துகிறது.
தேசிய கட்சியுடன் இணைந்து சிறிய கட்சிகள் தேர்தலில்
களமிறங்கும் போது ஒரு வேட்பாளரினை களமிறக்கி வெற்றி பெறுவதற்கான சாதகத் தன்மையினை
விட இரு வேட்பாளர்களினை களமிறக்கி வெற்றி பெறுவதற்கான சாதகத் தன்மை அதிகமாகும்.மு.காவானது
மட்டக்களப்பில் ந.தே.மு உடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் தனது ஒரு
வேட்பாளரினை விட்டுக் கொடுத்து தனது வெற்றிக்கான வாய்ப்பினை குறைத்துக்
கொண்டது.இதனையே திருகோணமலையில் மு.காவின் தோல்விக்கு பிரதான காரணமாக பலரும்
குறிப்பிட்டுள்ளனர்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 Comments