Subscribe Us

header ads

பாபர் வீதி விவகாரம்: நடந்தது என்ன?: மனோ , முஜிபுர் ரஹ்மான் தரும் விளக்கம் இதோ:

மத்திய கொழும்பு - பாபர் வீதியில் வசிக்கும் இரண்டு சமுகங்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயமொன்றின் தேர்த்திருவிழாவை சிலர் நடக்கவிடாமல் தடுப்பதாக தகவல் பரவியிருந்தது. இது தொடர்பில் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக , தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோகணேசன் தனது பேஸ்புக் கணக்கினூடாக தொடர்ச்சியாக தகவல்களை பகிர்ந்து வந்திருந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான  முழுமையான விளக்கத்தை தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோகணேசன் எமது செய்திப்பிரிவுக்கு வழங்கி இருந்தார்.

" கொழும்பு பாபர் வீதியில் அமைந்துள்ள இந்து ஆலயம் தனது வருடாந்த தேர்த்திருவிழா, பூஜைகளை நடத்தும் ஏற்பாடுகளை செய்துவிட்டு எனக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த ஆலயத்துக்கு சென்று கொடியேற்றத்தை நடத்திவிட்டு அந்த வைபவங்களை ஆரம்பித்து வைத்திருந்தேன். இந்நிலையில் அந்த தோட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சில அடிப்படைவாதிகள் ந்த ஆலய நிர்வாகிகளை பயமுறுத்தி , எச்சரித்து தோட்டத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு பிறகு இது சம்பந்தமாக பாதுகாப்பு செயலாளர் , மற்றும் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு முழுமையான பாதுகாப்பை அந்த தோட்டத்துக்கு வழங்கியுள்ளேன்.

அதுமட்டுமல்லாமல் பொலிஸ் அதிகாரிகளை மத்தியஸ்தமாக வைத்துக்கொண்டு , தோட்டத்து ஆலய நிர்வாகிகளையும்,  எச்சரிக்கை விடுத்த நபர்களையும் அழைப்பித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உத்தரவிட்டிருந்தேன். இப்பேச்சுவார்த்தை நடந்தது. அதன்போது சுமூகமான முறையில் தேர்திருவிழாவை நடத்துவதற்கான உடன்பாட்டை பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

இதன் பிறகு மீண்டும் அந்த தோட்டத்தில் தேர் திருவிழாவை நடத்துவதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டபோது அவர்கள் மீண்டும் தலையிட்டு எச்சரித்து அதுமட்டுமல்லாது ஆலய நிர்வாகிகளில் ஒருவர் மீது வன்முறை ரீதியாக தாக்குதல் நடத்தியும் உள்ளார்கள். இந்நிலையில் இந்த விடயத்தில் நான் நேரடியாக தலையிட்டு தேர்திருவிழாவை நட த்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது எனினும் நான் அவ்வாறு செய்யவில்லை காரணம்  அங்கு வாழும் அப்பாவி இந்து மக்கள் பிறகாலத்தில் பாதிக்கப்படுவார்கள் என்ற நல்லெண்ணம் காரணமாகவும் தேசிய நல்லிணக்கம், ஐக்கியம் , சகவாழ்வு என்ற பொறுப்பைக் கொண்டுள்ள அமைச்சர் என்ற வகையிலும் எடுத்திருக்கின்றேன். என்றாலும் இது சம்பந்தமாக  இதற்கு முதல் நாள் சமூகரீதியாக தீர்வுகாணும் என்ற காரணத்தினாலே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை அழைப்பித்து அதேபோல தேசிய நல்லாட்சிக்கான இயக்கத்தின் பிரமுகர் , தலைவர் நஜாப் அவர்களையும் அழைப்பித்து எனது அலுவகத்திலே, தோட்ட நிர்வாகிகளையும் அழைப்பித்து, தோட்ட த்திலுள்ள ஆலய நிர்வாகிகளையும் அழைப்பித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றேன். பைஸர் முஸ்தபாவின் கவனத்திற்கும் கொண்டுவந்திருக்கின்றேன். ஆகவே இவர்கள் அனைவரும் எனக்கு தாம் இந்த அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியளித்துள்ளார்கள். அது சம்பந்தமாக தலையிட்டு , தமது சமூகத்தின் பிரதிநிதிகளை அழைப்பித்து , பேச்சுவார்த்தை நட த்தி சுமூகமான முடிவை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்கள்" என்றார்.


இது சம்மந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் எமது செய்திப்பிரிவுக்கு விளக்கமளித்தார்.

"பார்பர் வீதியில் இரண்டு , மூன்று நாட்களாக பல தவறான கருத்துக்கள்
பரவிக்கொண்டிருக்கின்றது. அங்கு வாழக்கூடிய தமிழ் மக்களின் மார்க்க வழிபாடுகளுக்கு , அந்த விடயங்களை செய்வதற்கு பல முஸ்லிம் மக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அதை தடுக்கின்றார்கள் என , ஆனால் நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் கடந்த இரண்டு நாட்களும் நான் அதை விசாரித்து அவர்களோடு கதைத்தேன், இப்போது அப்படியொரு நிலமையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து  கடந்தவருடங்களை நடத்தியதைப்போன்று இந்த வருடமும் தமிழ் மக்கள் தங்களது மார்க்க விடயங்களை நடத்துவதற்கு அத்தனை உரிமைகளும் உண்டு. அதற்கு அந்த பிரதேசத்தை சேர்ந்த யாருக்கும் அதனை எதிர்ப்பதற்கோ, அதை நிறுத்துவதற்கோ யாருடைய கருத்தும் இல்லை. அதனாலே அவர்கள் தொடர்ந்தும் தமது மார்க்க வழிபாடுகளில் ஈடுபட சுதந்திரமும், உரிமையும் அம்மக்களுக்கு உண்டு" என்றார்.

இந்நிலையில் நேற்று நடைபெறவிருந்த கோயிலின் தேர்திருவிழா நடைபெறவில்லையென சுட்டிக்காட்டப்படுகின்றது.

Post a Comment

0 Comments