சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண்ணின் கையை நான் வெட்டவில்லை என குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அந்நாட்டு நபர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம், சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற இடத்தில் அவரது கையை அந்த வீட்டின் உரிமையாளர் துண்டித்து விட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தச் சம்பவத்தை கொலை முயற்சியாக வழக்குப்பதிவு செய்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று சவுதி அரேபிய அரசை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக 'அரபு நியூஸ்' பத்திரிகைக்கு அந்த நபர் அளித்துள்ள பேட்டியில், '' எனது தாயார் கடந்த வியாழக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்ட நேரத்தில், அந்தப் பெண் தனது அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார். பிறகு, 3வது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக வெளியேறும் திட்டத்துடன் அறையில் இருந்த துணிகளை கயிறு போல திரித்து, அதை ஜன்னல் வழியாக தொங்கவிட்டு அவர் கிழே குதித்தார்.
அப்போது, கீழிருந்த 2 மின்சாரப் பெட்டிகளின் மீது அவர் விழுந்தார். இதில் அந்தப் பெண்ணின் வலது கையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் குதிப்பதையும், மின்சாரப் பெட்டிகளின் மீது விழுந்ததையும் அப்பகுதியில் இருந்த வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் பார்த்து பொலிஸில் தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரது வலது கை அறுவை சிகிச்சை செய்து துண்டிக்கப்பட்டது.
எனது தாயாருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண், 2 மாதத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். ரியாதில் உள்ள தனி இல்லத்தில் அவர் வசித்தார். அவரது கை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் முழு விசாரணை நடத்தினர். இதில், அந்தப் பெண் ஜன்னல் வழியாக கீழே குதித்ததை பொலிஸார் உறுதி செய்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், அவரது பெயர் தெரியவரவில்லை. பேட்டியிலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

0 Comments