Subscribe Us

header ads

பெரிய பள்ளியும் ஜம்மியத்துல் உலமாவும் , நீதிமன்றங்களா?

இன்று சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துவிட்டன, இதற்கு நமது ஊரும் விதிவிலக்கல்ல . இவ்வாறான குற்றங்கள் நடைபெற்ற உடன் ''பொலிஸார்'' மற்றும் ''சிறுவர் பாதுகாப்பு சபை'' போன்ற சட்டரீதியான அமைப்புகளை நாடவேண்டும். அப்போது தான் தனித்துப் போராடியாவது நீதியை பெற முடியும். இவ்வாறு நீதி கிடைப்பது ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமைவதுடன் அது சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையினையும் அதிகரிக்கும். இது ஒரு சிறந்த சமூக சேவையும் ஆகும்.
குற்றங்களுக்கு சட்டதுறையை நாடாது பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் போன்ற அமைப்புகளை மட்டும் நம்பி அவர்களிடம் செல்வதால் இன்றைய நிலையில் பெரிதாக எதுவும் நடைபெற போவதில்லை. ஏனெனில் நீதி அல்லது தீர்வுகளை வழங்கும் அதிகாரம் அவர்களிடம், இல்லை; அவ்வாறு கிராமிய மட்டத்தில் சில இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இருந்தாலும் அவர்கள் அதனை செயற்படுத்துவதும் இல்லை, மேலும் அவர்கள் அதனை செய்ய நினைத்தாலும் மற்றவர்கள் விடுவதும் இல்லை. இவைகளை எல்லாம் மீறி சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நாம் காண்கிறோம், அவற்றில் நன்மைகள் இல்லை என்று மறுக்க முடியாது; ஆனால் அவை சமூகத்தில் எதிபார்க்கப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்த தவறியுள்ளன!
பல கட்டங்களில் இவ்வாறான அமைப்புகள் குற்றங்களை மூடி மறைக்கும், மற்றும் நீதி கிடைப்பதை தடுக்கும் செயற்பாடுகளையே செய்கின்றன. குற்றங்களை அவர்களிடம் தெரிவிக்கும் போது அதனை தடுக்க அவர்களிடமிருந்து, “யாரிடமும் சொல்லாதீர்கள், போலீஸுக்கு செல்லாதீர்கள், பொறுமை முக்கியம், குடும்ப மானம் முக்கியம், பிள்ளையின் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள், அல்லாஹ் அவர்களை தண்டிப்பான், " போன்ற பதில்களே கிடைக்கும். இவ்வாறு ஒருவர், இருவருக்காக மூடி மறைத்ததின் விளைவு இன்று ஒரு சமூகமே பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக பாதிப்புக்கு ஒரு வகையில் காரணமான இவ்வமைப்புகளின் நிர்வாகிகள் அல்லாஹ்விடம் பதில் கூறாமல் சுவர்க்கம் செல்லலாம் என்று கனவு காண்கிறார்களா? அல்லது அல்லாஹ் சட்டங்களையும் வரையறைளையும் வீணுக்காகவே படைத்தான் என்பதற்கு இவர்கள் சாட்சியாளர்களா?
ஆக மக்களாகிய நாம் இது போன்ற சம்பவங்களை ''பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள்” போன்ற அமைப்புகளுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போதனைகள் மற்றும் சட்டதுறை நிறுவனங்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கும் நோக்கத்திலேயே தெரியப்படுத்த வேண்டும். மாறாக நீதியை தேடி இவ்வமைப்புகளை நாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இவ்வமைப்புகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி காட்டுவதுடன் நாட்டின் சட்டத்தை மதித்தும் செயற்பட வேண்டும்.
ஆகவே பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் போன்ற அமைப்புகள் நடைமுறைக்கு சத்தியமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போதனைகள் என்பவற்றை சமூகம் சார்ந்த ஏனைய நிறுவனகளுடன் இணைந்து திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சமூக பிரச்சினைகளுக்கான மூல காரணங்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதாக அமைய வேண்டும். சமூக பிரச்சினைகளுக்கான மூல காரணங்களை விரிவான கலந்துரையாடல். பாதிக்கப் பட்டவர்களின் அனுபவம், சமூக ஆய்வு முடிவுகள், மற்றும் கடந்தக்கால தரவுகள் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
இதில் பொது மக்களாகிய நாம் திட்டங்களை வரைவதிலும் அதனை செயற்படுத்துவதிலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். விசேடமாக, எமது ஆதரவை வெளிப்படுத்த தவறக்கூடாது ஏனனில் இது எங்களுடைய குடும்பம் சார்ந்த பிரச்சினை, ஊர் சார்ந்த பிரச்சினை இதனை தீர்க்க நாம் தான் களத்தில் இறங்க வேண்டும். சிறு முயற்சியும் பெரும் பலனைத் தரும்... நல்லது நடக்க முயலுவோம் , நல்லதொரு சமூக கட்டமைப்பை உருவாக்குவோம்.
-Ibadun Nizar.-

Post a Comment

0 Comments