ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா மீண்டும் தமது தந்தையின் அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளதாக கொழும்பின் ஆங்கில இணையம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
ஏற்கனவே பொலநறுவையில் மக்கள் தெளிவாக்கல் நிகழ்வு ஒன்றில் அவர் அரச அதிகாரிகளை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஜனாதிபதியின் மகன் தஹம் தந்தையினால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிகழ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்க செய்யப்பட்டமையானதுää விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதற்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து உரிய பதில்கள் வழங்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்தக்கார ஆட்சி முறையுடன் மைத்திரிபாலவின் இந்த செயற்பாடுகளும் ஒத்திசைவதாக கூறியே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன..
இதன் மத்தியில் கடந்த 11ஆம் திகதியன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற தேசிய பட்டம் விடும் நிகழ்வில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சகிதம் சத்துரிக்கா பங்கேற்றார்.
அத்துடன் கம்பஹா ரனவலி மகளிர் வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போதும் அவர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை பாதுகாப்புக்காக அழைத்துச்சென்றிருந்தார்.
அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் கொண்டிராத சத்துரிக்கா இந்த இரண்டு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்புடன் பங்கேற்றமையை ஆங்கில இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments