Subscribe Us

header ads

பல வருடகாலமாக சிறைகளில் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு கோரிக்கை

பல வருடகாலமாக சிறைகளில் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்வதுடன், ஏனைய அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்வதற்கு கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்கவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை அமர்;வு தவிசாளர் நிஹால் கலபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றபோது சபையின் பிரதி தவிசாளர் இந்திரகுமாரினால் சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட அவசர பிரேரணை மீது உரையாற்றிய அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

‘நமது நாட்டில் 3 தசாப்த காலமாக நிகழ்ந்த கொடூர யுத்தத்தினால் மூன்று சமூகங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தமிழ் சமூகம் கடுமையான நிலையில் பாதிக்கப்பட்டதோடு முஸ்லிம் சமூகமும், சிங்கள சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டை சிறந்த முறையில் வழி நடாத்திய ஆளுமையுள்ள அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரமேதாச, லக்ஷ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம், தலைவர் அஷ்ரப், நீலன் திருச்செல்வம் உட்பட பல அரசியல் தலைவர்கள் அழிக்கப்பட்டனர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தங்கள் மக்களின் உணர்வை கிழக்கு மாகாண சபையில் முன்வைத்துள்ளனர். தங்கள் மக்களின் மன உணர்வை சிங்கள உறுப்பினர்களும் தெளிவுபடுத்தினர். எனவே, பழைய விடயங்களை நாம் பேசுவதில் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் நிலவும் தற்போதைய நல்ல சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதனூடாக நமது நாட்டில் சகல இன மக்களும் சந்தேகமின்றி நிரந்தரமாக நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே, கிழக்கு மாகாண சபை இந்த விடயத்தை மனிதாபிமான நோக்குடன் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் பரிதாபகரமான நிலைமையினை பார்க்கும்போது நம் எல்லோருக்கும் வேதனையாக உள்ளது. எனவே  இன, கட்சி வேறுபாடுகளின்றி நமது நாட்டிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பி. முஹாஜிரீன்

Post a Comment

0 Comments