Subscribe Us

header ads

சவுதியில் ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி...

சவுதி அரேபியாவில் அல்காதிப் பிராந்தியம், சாய்ஹாட் நகரத்தில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்துகிற அரங்கம் ஒன்று உள்ளது. அந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஷியா பிரிவினர் கூடி தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த அரங்கத்துக்குள் திடீரென நுழைந்த போராளி ஒருவர், இலக்கின்றி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அனைவரும் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதற்குள் அவர் பலரை சுட்டு ரத்த வெள்ளத்தில் சரிய வைத்தார்.

அவரது தாக்குதலில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த போலீசாருக்கும், போராளிக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. முடிவில் அந்த போராளி சுட்டுக்கொல்லப்பட்டார். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஷியா பிரிவினருக்கு புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிற அஷுரா நாட்கள் தொடங்கி 2 நாட்கள் ஆன நிலையில், இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான செய்தியை வெளியிட்ட சவுதி அரேபிய அரசின் டெலிவிஷன் சேனல், ஷியாக்கள் வழிபாட்டு அரங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய போராளி வெடிகுண்டுகளால் ஆன பெல்ட்டை இடுப்பில் அணிந்து வந்திருந்ததாக கூறியது. அவருக்கு வயது 20-30-க்குள் இருக்கலாம் எனவும் தெரிவித்தது.

தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் அவர் ஒரு வாடகைக்காரில் அங்கு சென்றதாகவும், ஆனால் நுழைவாயிலில் நின்ற தன்னார்வ தொண்டர்கள் காரை தடுத்து நிறுத்தியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

இந்த தாக்குதலுக்கு சுன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். போராளிகள் பொறுப்பேற்றனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், தாங்கள் ஐ.எஸ். போராளிகளின் அமைப்பின் ‘பக்ரைன் மாகாண’ பிரிவினர் என்றும், தாக்குதல் நடத்தியவர் பெயர் சுஜா அல் தொசாரி என்றும், அவர் ‘கலாஷ்னிகோவ்’ ரக துப்பாக்கியை தாக்குதலுக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

சவுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேரும், மே மாதம் ஷியா மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 25 பேரும் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ஐ.எஸ். போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஈராக்கிலும், சிரியாவிலும் அவர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படையில் சவுதியும் இடம் பெற்றுள்ளது. எனவேதான் சவுதியை குறிவைத்து ஐ.எஸ். போராளிகள்கள் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது. 

Post a Comment

0 Comments