Subscribe Us

header ads

30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை: வீடியோ

ஓடும் ரெயிலில், டாக்சியில், பஸ்சில், ஆட்டோவில் குழந்தை பிறப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தைவான் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் குழந்தை பிறந்துள்ளது.

தைவான் நாட்டில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சீன விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சுமார் 19 மணி நேரம் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் 32 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பசிபிக் பெருங்கடலின்மீது பறந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணுக்கு திடீர் என வயிற்றுவலி ஏற்பட்டதாக பணிப்பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ஷடவசமாக அதே விமானத்தில் ஏஞ்சலிகா ஸென் என்ற பெண் டாக்டரும் பயணம் செய்தார். 

புதிதாக திருமணமான அவர் பாலியில் தேனிலவு கொண்டாடிவிட்டு சொந்த ஊரான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தனது கணவருடன் அந்த விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆனால், அவர் மகப்பேறியல் மருத்துவர் கிடையாது. மயக்கவியல்துறை மருத்துவரான அவர், பயிற்சிக் காலத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தைவைத்து அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார். வலியால் துடித்துக் கொண்டிருந்த தைவான் நாட்டுப் பெண்ணை பரிசோதித்துப் பார்த்த பின்னர், அந்த பெண்ணின் கருப்பை பனிக்குடம் உடைந்திருப்பது தெரியவந்தது. எனவே, அவர் துடிப்பது வயிற்று வலியால் அல்ல.., பிரசவ வலியால் என்பது ஏஞ்சலிகாவுக்கு தெளிவானது.

முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்துவந்த அந்தப் பெண்ணுக்கு அந்த இடத்தில் வைத்தே பிரசவம் பார்ப்பது சிரமமான காரியம் என்பதை உணர்ந்த அவர், சகப்பயணிகள் துணையுடன் அந்த கர்ப்பிணியை பொது இருக்கை பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தார்.

சுற்றிலும் விமானப்பணிப் பெண்கள் திரை விரித்து பிடித்திருக்க, அங்கே தரையில் கிடத்தப்பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவ முறையில் குழந்தை பிறந்தது. 

இதற்கிடையில், அலாஸ்கா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட பைலட், அவசரமாக அங்கே தரையிறங்க அனுமதி கேட்டார். அவசர மருத்துவ உதவி என்ற அடிப்படையில் உடனடியாக அனுமதியும் கிடைத்தது. அலாஸ்கா விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பெண்ணும் குழந்தையும் அலாஸ்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்தப் பிரசவம் நிகழ்ந்த வேளையில் அந்த விமானம் அலாஸ்கா நகரின் வான்வெளியில்தான் பறந்துகொண்டிருந்ததா? என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவ்வாறு உறுதிசெய்யப்பட்டால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது, 

Post a Comment

0 Comments