தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஆகஸ்ட் மாதம் சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்பு கவிதைக்கான (கலையூற்றுக்குப் பதிலாக கவினெழி) " பட்டமும் ,சான்றிதழும் பெறுகின்றார்- பாத்திமா சில்மியா சஹீட்
-அவள் வரமாட்டாள்
சந்திரப்பூ வதனத்தாள் - உன்
சரித்திரம் மாற்றியதாய்
ஊழையிடும் கவிமகனே
உனக்கேன் வீண்வேலை
மங்கையவள் இடையசைவை
மாந்தியாய் நீயுமெண்ணி - உன்
கண்கள் குதித்தது
கானல் நீர்தான் பார்வை பொய்தான்
அல்லாஹ்வின் படைப்புன்னை
பித்தனாய் மாற்றவில்லை
பின்னிய அவள் நடையில்
பிரண்டது உன் மனமில்லை
கருநாகம் நெளிவதாய்
கருங்கூந்தல் தெரிகிறதோ?
எல்லாமும் உன் நெஞ்சில்
எரிகின்ற சபலமடா
ஆசையென்னும் அக்கினிக்குள்
ஆழ்கின்ற அவஸ்தையடா
வர்ணிப்பு பூச்சிகளால்
வதனத்தை வர்ணித்து
பூ உலகை ஆண்டுவர
புகழாரம் சூடிடுவாய்
உன்தூக்கம் கலைந்ததற்கு
அவள் மீது பழிசொல்வாய்
இன்னொருத்தி வந்தவுடன்
இதுவெல்லாம் மறந்திடுவாய்
அங்கமலர் தண்டிகையில்
அணங்கவள் வலம் வருவாள்
உன்நிழலை தொடர்ந்து
என்னாவி அழைகிறது
என்றெல்லாம் புகழுரைப்பாய்
அவள் கன்னி இல்லையென்ற
உண்மையது தெரிந்து விட்டால்
சனியன் என்ற வார்த்தைகளால்
சமர் நீயும் செய்திடுவாய்!
உன் ஆசை முடிந்ததுமே
உவமையெல்லாம்
உதிர்ந்துவிடும்
நீ வடித்த கவிதைக்கு
அவள் கண்ணீர் கோலமிடும்
உன் வருடலுக்காய்
வரமாட்டாள்
வளர்த்து விட்ட கற்பனையை
உயிராக்கித் தரமாட்டாள்
ஏற்கனவே இன்னொருவன்
வருடலுக்குள் வீழ்ந்ததனால்
புண்ணான வாழ்வினிலே
பூவையவள் புரளுகிறாள்


0 Comments