Subscribe Us

header ads

முஸ்லிம் எம்.பி.க்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியம் : அஷ்ஷேக் அகார் வலியுறுத்ததல்


புதிய, எட்டாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கும் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலும் ஒற்றுமையும் ஐக்கியமும் வளர வேண்டிய தேவை இருப்பதாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் துணைத் தலைவர் அஷ்ஷேக் ஏ.சி.அகார் முஹம்மத் தெரிவித்தார்.
புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் வைபவமொன்று, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா தலைமைக் காரியாலயத்தில் நேற்றிரவு இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவுடன் இணைந்து முஸ்லிம் சிவில், சமூக அமைப்புக்கள் இவ் வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தன.
புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் 17 பேர் இவ் வைபவத்தில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அஷ்ஷேக் அகார் முஹம்மத், மூன்று முக்கிய தளங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் பயணப்பட வேண்டியிருப்பதை தெளிவுபடுத்தினார்.
ஒற்றுமை, சமூக அபிலாஷை, தேசிய நலன் என்கிற மூன்று பிரதான கருப்பொருள்களைச் சுட்டிக்காட்டி, இவ் அடிப்படைகளின் ஊடாக மேற்படி முஸ்லிம் பிரதிநிதிகள் செயலாற்ற வேண்டும் என்பதனையும் அவர் வலியுறுத்தினார்.
முதலில், கட்சி பேதங்கள் மறந்து,குரோதங்கள் மற்றும் தேர்தல்கால வைராக்கியம் மறந்து முஸ்லிம் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட வேண்டும். இந்த ஒற்றுமைதான் முஸ்லிம் சமூகத்தின் பலமாகும்.
மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்துக்காக மட்டுமன்றி தேசிய நலனில் அக்கறை கொண்டு நாட்டுக்காகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது கடமையாகும். தியாகத்தின் அடிப்படையில் முஸ்லிம்களின் அரசியல் உயர் பண்புகளோடு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் அழகான விளக்கங்களை முன் வைத்தார்.
அதேநேரம், முஸ்லிம் சமூகம் பல்வேறு, சவால் மிக்க பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் ஒரு நிலைமை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக உருவெடுத்துள்ள இக்காலகட்டத்தில், முஸ்லிம் பிரதிநிதிகள் வாய்மூடி மவுனிகளாக இருக்காமல், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தக்க சமயத்தில் குரல் கொடுக்க வேண்டும் என இங்கு உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம் இயத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முபாரக் இங்கு வரவேற்புரை நிகழ்த்த, அகில இலங்கை ஜம் இயத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, அஷ்ஷேக் பளீல் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏக பிரதிநிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இங்கு கருத்துரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
வைபவத்தில் கலந்து சிறப்பித்த சகல முஸ்ல் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments